நீரிழிவு ரகசியங்களும்… தீர்வும்- நீரிழிவு பற்றிய முழுமையான விளக்க தொடர் 02

என்.கே.நாராயணன்

நீரிழிவு நோய் மற்றும் நாளமில்லா சுரப்பி நிபுணர்

அப்பலோ வைத்தியசாலை

 

  1. உடல் உழைப்பு இன்மை

உடல் உழைப்பு இன்மை என்பது வேறு, உடற்பயிற்சி என்பது வேறு.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் எங்கு சென்றாலும் ஓரளவுக்கு நடந்தே செல்வார்கள். வீட்டிலும் உடல் உழைப்பு இருந்தது. அன்றாட உடல் உழைப்பு என்பதே நீரிழிவு நோயைத் தடுக்கப் போதுமானதாக இருந்தது. ஆனால், உடல் உழைப்பு இன்மை தற்போது அதிகரித்ததன் விளைவாகவே உடற்பயிற்சி அறிவுறுத்தப்படுகிறது.

உடல் உழைப்பு இருக்கும்போது கலோரி அதிக அளவில் செலவிடப்படுகிறது. இதனால், இன்சுலின் தேவை குறையும். இதனால், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சியைக்காட்டிலும், தினமும் ஒரு மணி நேரம் உடலில் இருந்து நன்றாக வியர்வை வெளியேறும் அளவுக்கு, பட்மின்ட்டன், டென்னிஸ், கால்பந்து, நீச்சல் என ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் சிறந்தது. முடியாதவர்கள் குறைந்தது நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது.

இன்றைக்கு பல மாணவ மாணவிகள் விளையாடுவதே இல்லை. பாடசாலைகளில், விளையாட்டு வகுப்புகள் பெயர் அளவுக்கே இருக்கின்றன. இதனால், இளம் வயதில் உடல்பருமன் பிரச்னை ஏற்படுகிறது. அவர்களை விளையாட விடுவதன் மூலம், இதைத் தவிர்க்க முடியும்.

  1. அல்கஹோல்

அல்கஹோல், நேரடி நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்றாலும், மறைமுகமாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துபவர்களுக்குக் கல்லீரல் பாதிப்பதாலும், உடல் எடை அதிகரிக்கும் என்பதாலும் மறைமுகமாக நீரிழிவு நோய்க்கு வித்திடுகிறது.

4.சிகரெட்

சிகரெட்டில் ஏராளமான ரசாயனப் பொருட்கள் உள்ளன. ஒரு சிகரெட்டில் மட்டும்  ஏறக்குறைய 80 வகையான  கடுமையான நச்சுத்தன்மைகொண்ட பொருட்கள் உள்ளன. இவை, ரத்த நாளங்கள், கணையம் போன்றவற்றைப் பாதிக்கும்போது, நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். சிகரெட் பிடிக்கும் பெரும்பாலானோருக்கு பின்னாட்களில் நீரிழிவு நோய் வருகிறது என்பது ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது.

டைப் 2 நீரிழிவு நோய் அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். குறிப்பாக, இரவு கண் விழித்து, இரண்டு மூன்று முறை சிறுநீர் கழிப்பார்கள்.

அதிக தாகம் இருக்கும்.

பசி அதிகமாக எடுக்கும்.

உடல் சோர்வு ஏற்படும்; பகல் நேரத்தில் தூக்கம் வரும்.

கை, கால் வலி, உடல் வலி போன்றவை ஏற்படும்.

மூட்டு இணைப்புகளில் வலி இருக்கும்.

இந்த ஆறு அறிகுறிகள் தெரிந்தால், நீரிழிவு பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

குறிப்பு: பாத நமைச்சல், பார்வைத் தெளிவின்மை, சிறுநீரகப் பாதிப்பு போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் அல்ல, நீரிழிவு நோயின் பாதிப்புகள்.

நீரிழிவு நோய்ப் பரிசோதனை 

இரவு உணவு  உண்ட பின்னர், 10 மணி நேரத்துக்குப் பிறகு, காலையில் வெறும் வயிற்றில் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.

பிறகு உணவு உண்ட பின், இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.

ரத்தத்தில் சீனியின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை விரைவில் அறிய, தற்போது குளுக்கோமீட்டர்கள் வந்துவிட்டன. கை விரல்களில் மிக மெல்லிய ஊசியைக் குத்துவதன் மூலம், இரண்டே சொட்டு ரத்தத்தை வைத்து, நொடிப் பொழுதில் ரத்தத்தில் சீனியின் அளவு எவ்வளவு என்பதை அறிய முடியும்.

ஹெச்.பி.1.சி  பரிசோதனை (HbA1C) 

நீரிழிவு நோய் இருக்குமோ என்ற பயத்தில் சிலர் பரிசோதனை செய்வதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன் இருந்தே, அளவான உணவும், சிறிது நடைப்பயிற்சியும் மேற்கொண்டு, தங்களுக்குச் சீனியின் அளவு கட்டுக்குள் இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள்.

பொதுவாக நீரிழிவு நோய் வந்திருக்கிறதா இல்லையா என்பதை அறியவும், நீரிழிவு நோயாளிகள் சீனியின் அளவைக் கட்டுக்குள்வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதை அறியவும் ஹெச்.ஏ.பி.1 சி பரிசோதனை செய்ய வேண்டும். இதுவும் ரத்தப் பரிசோதனை மட்டுமே.

ஹெச்.பி.ஏ.1சி பரிசோதனையில் ஹீமோகுளோபினில் சீனியின் விகிதம் கணக்கிடப்படும். இந்தப் பரிசோதனையில் கடைசி இரண்டு மூன்று மாதங்களில் ரத்தத்தில் சீனியின் அளவு எவ்வளவு இருந்துள்ளது என்பதைக் கண்டறிய முடியும்.

விதிவிலக்கு: ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். சிலருக்குப் பொதுவாகவே ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் இருக்கும். இவர்களுக்கு, ரத்தப் பரிசோதனை பலன் தராது. சிறுநீரகப் பாதிப்புக் காரணமாக கிரியாட்டினின் அதிகமாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்தப் பரிசோதனை உகந்தது அல்ல.

நீரிழிவு நோய் பாதிப்புகள்

கண்கள், சிறுநீரகம், பாதங்கள், இதயம், ஆகியவைப் பாதிப்பதற்குச் நீரிழிவு நோய் ஒரு முக்கியமான காரணம்.  நீரிழிவு நோய் வந்தவர்கள் இந்த உறுப்புகளைக் கண்காணித்து, பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்கொள்வது அவசியம்.

கண்

நீரிழிவு நோய் வந்தவுடன் கண்கள் பாதிப்பது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து, ஆண்டுக் கணக்கில் கவனிக்காமல் விடும்போதுதான், பாதிப்பின் வீரியம் தெரியும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக இரண்டு விதமான கண் நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டயாபடீக் ரெட்டினோபதி

நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக வரக்கூடிய கண் நோய் இது. கண்ணில் விழித்திரை (ரெட்டினா) என்றொரு பகுதி இருக்கிறது.

விழித்திரையில் ரத்தக் குழாய்கள் விரிசல் விடும்போது, ஆரம்பத்தில் கண்களில் சிறுசிறு புள்ளி அளவுக்கு ரத்தம் கசியும்.

ஒரு கட்டத்தில் விழித்திரை முழுவதும் ரத்தம் கசியும். ஒரு சிலருக்குப் புதிதாக ரத்தக் குழாய்கள் இந்தப் பகுதியில் வளர ஆரம்பிக்கும். இவற்றைக் கண்காணித்து சிகிச்சை எடுக்கவில்லை என்றால், பார்வை பறிபோய்விடும்.

டயாபடீக் ரெட்டினோபதியில் கிட்டத்தட்ட 10 நிலைகள் உள்ளன. முதல் ஐந்து நிலைக்குள் இருக்கும்போதே கண்டுபிடிக்கப்பட்டால், நீரிழிவு நோயைக் கட்டுக்குள்வைப்பதன் மூலமே, பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.

நீரிழிவு நோயாளிகள் கண் பாதிக்கப்படும் என அஞ்சத் தேவை இல்லை. வருடம் ஒரு முறை ரெட்டினோபதி பிரச்னை இருக்கிறதா என்பதை எளிய பரிசோதனை மூலம் கண்டறிந்து, தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமானது.

மேக்குலோபதி

ரெட்டினாவின் மையப்பகுதியில் இருப்பது ‘மேக்குலா’. இந்த மேக்குலா மிகச்சிறிய நுண்ணிய புள்ளி அளவுக்குத்தான் இருக்கும். நீரிழிவு நோயால்  மேக்குலாவில் ஏற்படும் பிரச்னைதான் மேக்குலோபதி.

நீரிழிவு இருப்பவர்களுக்கு கண்புரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

சிறுநீரகம்

நீரிழிவு நோயாளிகளுக்குப் பொதுவாக சிறுநீரகப் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகம். கண்களைப் போலவே சிறுநீரகமும் உடனே பாதித்த அறிகுறி தெரியாது. பல வருடங்களுக்குப் பிறகுதான் தெரியும்.

சிறுநீரகப் பாதிப்பை தவிர்க்க ஒரே வழி சீனியைக் கட்டுக்குள்வைப்பதே. ரத்தத்தில் சீனியின் அளவு அதிகமாகும்போது, சிறுநீர் வழியாக அல்புமின் என்ற புரதம் அதிக அளவு வெளியேறிவிடும். அதே சமயம் கிரியாட்டினின் உடலில் இருந்து அதிக அளவு வெளியேறாமல் தங்கிவிடும்.

ரத்தத்தில் கிரியாட்டினின் எவ்வளவு இருக்கிறது என்ற பரிசோதனையையும், சிறுநீரில் எவ்வளவு அல்புமின் வெளியேறுகிறது என்ற பரிசோதனையையும் செய்வதன் மூலம், சிறுநீரகப் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், சிறுநீரகப் பாதிப்புக்கான வாய்ப்பு இரட்டிப்பாகும். எனவே, இரண்டு பிரச்னைகளுக்கும் இருப்பவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து, முன் ஜாக்கிரதையுடன் இருப்பது அவசியம். சிறுநீரகத்தைப் பாதிக்கும் கெட்ட பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

கல்லீரல்

உடல்பருமன் காரணமாக நீரிழிவு வருபவர்களுக்கு அதிக அளவிலான குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் கல்லீரல் உட்பட எல்ல பாகங்களிலும் சேமித்து வைக்கப்படுகிறது.

இதனால், கல்லீரல் மேல் கொழுப்பு அதிக அளவு படிந்து, ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படும். ஒரு கட்டத்தில், கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis) நோய் வரலாம். நீரிழிவு நோயாளிகள் உடல்பருமனைத் தவிர்த்தாலே, கல்லீரலைக் காக்க முடியும்.

பாதங்கள்

நீரிழிவு நோயாளிகள் அனைவருக்குமே பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய பகுதி பாதங்கள். பாதங்கள் பாதிக்கப்பட இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

நீரிழிவு நோய் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டால், பாதமும் பாதிக்கப்படும். இவர்கள் கவனமுடன் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்காவிட்டால், கீழே விழுந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

நீரிழிவு நோய் காரணமாக ரத்தநாளங்கள் பாதித்தால், பெரிபெரல் வாஸ்குலர் நோய் (Peripheral Vascular Disease) எனும் பிரச்னை ஏற்படும். நீரிழிவு நோயாளிகள், புகை பிடிப்பவர்களாக இருந்தால், இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

பாதங்கள் இருக்கும் பகுதியில், பெரிய ரத்த நாளங்கள், சிறிய ரத்த நாளங்கள் ஆகியவை இருக்கின்றன. சிறிய ரத்த நாளங்கள் பாதித்தால்,  ஆரம்ப நிலையில் அறிகுறி தெரியாது.

காலில் ஏதேனும் நமைச்சல் உணர்வு இருந்தால், தானாகவே முன்வந்து பரிசோதிப்பதன் மூலமே, பாதித்த அளவைக் கண்டறிந்து மேலும் பாதம் பாதிப்படைவதைத் தடுக்க முடியும்.

பரிசோதனை

டயாபடீக் நியூரோபதி பிரச்னை இருப்பவர்களுக்கு பாதங்களில் உணர்வுகள் குறைவாக இருக்கும்.

காலில் வெடிப்பு அதிகமாக இருக்கும்.

கால்களில் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை அறிய, ‘டாப்ளர்’  பரிசோதனை செய்ய வேண்டும்.

நரம்புகள் எப்படிப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய ‘பயோதீசியோமீட்டர்’ பரிசோதனை செய்ய வேண்டும்.

பாதத்தில் நரம்புகள் பாதித்திருப்பது பரிசோதனையில் தெரியவந்தால், சீனியை கட்டுக்குள் வைத்து, உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம், மீதம் இருக்கும் நரம்பு இயக்கத்தை நிச்சயம் காப்பாற்ற முடியம்.

பாதத்தில் ஏதேனும் பாதிப்புகள் வந்தால், அறிகுறிகள் தெரியும்போதே மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறுவது அவசியம். பலர், பாதங்கள் முழுமையாக பாதித்த பிறகு சிகிச்சைக்கு வருவதால்தான் கால்களை அகற்ற நேரிடுகிறது.

பாதம் காக்க 5 வழிகள்

நீரிழிவு நோயாளிகளுக்குப் பாதத்தில் புண்கள் ஏற்பட்டால் ஆறாது என்பதால், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

தினமும் படுக்கைக்குச் செல்லும் முன்னர் பாதத்தைச் சுத்தமாகத் தண்ணீரில் கழுவித் துடைத்து, பாதத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கிறதா, முள், கம்பி ஏதாவது குத்தியிருக்கிறதா எனப் பரிசோதனை செய்ய வேண்டும்.

நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பாதிப்பு இருந்தால், மருத்துவரின் பரிந்துரைப்படி, அடிப்பகுதித் தடிமனாகவும் மேல்பகுதி மென்மையாகவும் இருக்கும் ஷூக்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைப்பதில் கண்டிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.

இதயம்

சீனி  கட்டுக்குள் இல்லை எனில், இதயத்துக்குச் செல்லும்  பெரிய ரத்த நாளங்களும் பாதிக்கப்படும்.

நீரிழிவு நோயாளிகள் எல்லாருக்குமே மாரடைப்பு  விரைவில் வரும் என்பது உண்மை அல்ல. வதந்திதான்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சிகரெட் பிடித்தல், அல்கஹோல் அருந்துதல் ஆகிய காரணங்கள் ஒன்று சேரும்போதுதான் இதயம் பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

சாதாரணமாக இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், நெஞ்சு வலியை உணர முடியும். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு, இதயத்துக்குச் செல்லும் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், நெஞ்சு வலி வருவதே தெரியாது. இதனால்தான் இரவு நேரத்தில் உணர்வே தெரியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார்கள். இதனை ‘சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ என்பார்கள்.

ஆணுறுப்பில் உள்ள நரம்புகள், மிகக்குறுகிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படும்போது விறைப்புத்தன்மை பிரச்னை ஏற்படும். விறைப்புத்தன்மை பிரச்னை, ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, மாரடைப்பு வரலாம் என்பதற்கான ஓர் அறிகுறி.

நீரிழிவு நோயாளிகள், ஆண்டுக்கு ஒருமுறை அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்...

ரெட்டினா

ரத்தத்தில் கிரியாட்டின் அளவு மற்றும் சிறுநீரில்  அல்புமின் அளவு

பாதங்களுக்கான பரிசோதனை

ஹெச்.பி.ஏ1.சி பரிசோதனை

கொலஸ்ட்ரோல் பரிசோதனை

கல்லீரல் பரிசோதனை (LFT)

ஈ.சி.ஜி

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here