மகனிற்கு சீட் தராவிட்டால் கட்சி மாறப்போவதாக மிரட்டினார் சிதம்பரம்: மூத்த தலைவர்களை விளாசிய ராகுல்!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி குறித்து ஆராய்வதற்கு கூடிய செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 மூத்த தலைவர்கள் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பலமுறை கோபப்பட்டுப் பேசியுள்ளார். தனது அண்ணனை பிரச்சாரத்தில் தனியாக விட்டுவிட்டனர் மூத்த தலைவர்கள். எந்த புதிய யுத்தியும் பிரச்சாரத்துக்குத் துணை செய்யவில்லை என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறத் தவறிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்கள் பெற்ற நிலையில் அதைக்காட்டிலும் சிறிது அதிகமான இடங்களை இந்தமுறை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற முடியவில்லை.

அதிலும் 39 ஆண்டுகளாக அமேதி தொகுதியில் நேரு குடும்பத்தினர் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை தேர்தலில் ஸ்மிருதி இராணியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோல்வி அடைந்தது பாதிப்படையச் செய்துள்ளது.

இந்தத் தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக்கூட்டம் நேற்று டெல்லியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து கோபத்தில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அவரை சமாதானம் செய்து அமரவைத்துள்ளனர். ராகுலின் ராஜினாமாவையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

அதன்பின் ராகுல் காந்தி இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசி 3 மூத்த தலைவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் ஆகியோர் தங்களின் மகன்களுக்கு எம்.பி.சீட் கேட்டு அதிகமான நெருக்கடி அளித்தார்கள். கட்சியின் நலனைக் காட்டிலும் தங்களின் மகன்களின் நலன்மீது அதிக அக்கறை செலுத்தினார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், கமல்நாத் மகன் நகுல் ஆகியோர் மட்டுமே வென்றனர். கெலாட்டின் மகன் வைபவ் தோல்வி அடைந்தார்.

ஜோதிர்தியா சிந்தியா பேசுகையில், மாநிலத் தலைவர்களை வலுப்படுத்த வேண்டும் என்று ராகுலிடம் கேட்டுக்கொண்டபோது, கோபப்பட்ட ராகுல் காந்தி, சிதம்பரத்தைப் பார்த்து,” தனது மகனுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று மிரட்டல் விடுத்தார்” என்று பேசியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியும் கூட்டத்தில் தான் பிரச்சாரத்துக்குச் சென்றபோது மூத்த தலைவர்கள் எத்தனைபேர் தனக்கு உதவியாக, ஆதரவாக வந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை நான் வைத்தபோது, இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் எத்தனை தலைவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். சிலர் கையைத் தூக்கி நான் ரஃபேல் ஊழல் குறித்துப் பேசினேன் என்று கூறியபோது அதைக் காட்டமாக ராகுல் நிராகரித்துவிட்டார்.

கூட்டத்தின் இடையே பிரியங்கா காந்தியும் தனது பங்கிற்கு தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளார். “இந்த அறைக்குள் அமர்ந்திருக்கும் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பானவர்கள். யாரும் தட்டிக்கழிக்கமுடியாது” எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.

ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தை அளித்தபோது, அதை மூத்த தலைவர்கள் பலர் ஏற்க மறுத்து அவரை சமாதானம் செய்துள்ளார்கள். அப்போதும் கோபப்பட்ட பிரியங்கா காந்தி, ” இப்போது என் அண்ணனைச் சமாதானம் செய்கிறீர்களே, நீங்கள் எல்லாம் பிரச்சாரத்தின் போது எங்கே சென்றீர்கள்? என் அண்ணன் தனியாக களத்தில் போராடினார். அவர் தனக்காகவா தேர்தல் களத்தில் போராடினார்.

என் அண்ணனுக்கு ஆதராவாக தேர்தல் பிரச்சாரத்தில் யார் பேசினீர்கள்? அவர் பிரச்சாரம் செய்த ரஃபேல் ஊழல், சவுகிதார் சோர் ஹை போன்ற கோஷத்தை யார் முன்னெடுத்துப் பேசினீர்கள் என்று காட்டமாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தனது சகோதரர் ராகுலிடம், பேசிய பிரியங்கா ” நீங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். பாஜக வலையில் வீழ்ந்தது போல ஆகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

-த இந்து-

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here