நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மீண்டும் குழப்பம்: தடையை மீறி பெயர்ப்பலகை நாட்டப்பட்டது!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டுக்காக சென்ற செம்மலை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பொலிசார், பௌத்த பிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கிராமமான செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியை பௌத்த பிக்குகள் சொந்தம் கொண்டாட ஆரம்பித்ததையடுத்து, நீதிமன்றத்திற்கு விவகாரம் சென்றிருந்தது.

ஆலயவளாகத்தில் விகாரை அமைக்கப்பட்டு, குருகந்த ரஜமகா விகாரை என பெயரிடப்பட்டு, பிரமாண்ட புத்தர் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த தைப்பொங்கல் தினத்தில் வழிபாட்டிற்கு சென்ற மக்களுடன், பௌத்த பிக்குகள் தர்க்கத்தில் ஈடுபட்டதால் குழப்பம் ஏற்பட்டு பொலிசார் தலையிட்டனர். பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நான்கு மாதங்கள் நீடித்த வழக்கின் இறுதியில், இரு தரப்பும் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவும், மறுதரப்பை அசௌகரியப்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

அத்துடன், ஆலயத்தில் கட்டுமானப்பணிகளில் ஈடுபடுவதெனில், தொடர்புடைய உள்ளூர் அரச நிறுவனங்களிடம் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டது.

அதேவேளை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் என எழுதப்பட்டியிருந்த ஆலய பெயரை மாற்றி, கணதேவி தேவாலயம் என்றும் பௌத்தபிக்கு பெயர் மாற்றி எழுதியிருந்தார். அதில் திருத்தம் செய்து, நீராவியடி பிள்ளையார் ஆலயம் என எழுதுமாறும், அது தொடர்பில் பொலிசார் மன்றுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று ஆலய நிர்வாகதம் மற்றும் பக்தர்கள், நீதிமன்ற தீர்ப்பின்படி “நீராவியடி பிள்ளையார் ஆலயம்“ என்ற பெயர்பலகையை நாட்ட முயன்றனர். இதற்கான அனுமதியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை, கரைதுறைபற்று பிரதேசசபை ஆகியவற்றிடம் முறைப்படி பெற்றிருந்தனர்.

எனினும், அதற்கு பௌத்த பிக்கு, விகாரை காவல் பணியிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் இடையூறு ஏற்படுத்தினர்.

எனினும், மக்கள் பெயர்ப்பலகை நாட்ட முயற்சித்த வேளை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு பிக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த முல்லைத்தீவு பொலிசார், பக்கச்சார்பாக நடந்ததாக ஆலய நிர்வாகசபை உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

வழிபாட்டிற்காக சென்ற அனைவரையும் நிலத்தில் உட்கார வைத்திருந்து விசாரணை செய்ததாகவும், தமது அடையாள அட்டை விபரங்களை பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் உடனடியாக பௌத்த பிக்குவால் பொலிசாருக்கும் ,விசேட அதிரடிப் படையினருக்கும் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிசார் பௌத்த பிக்குக்குச் சார்பாகச் செயற்பட்டு ஆலயத்தில் வழிபாட்டுக்காகவும் நீதிமன்றின் உத்தரவை மதித்து பெயர்ப்பலகை நாட்ட வந்த செம்மலை கிராம மக்களை நிலத்தில் அமர்த்தி அனைவரினது பெயர் அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றையும் பதிந்ததோடு மிக நீண்டநேரம் விசாரணைகளிலும் ஈடுபட்டனர்.

எனினும், இடையூறை மீறி அங்கு நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்ற பெயர்ப்பலகை நாட்டப்பட்டது.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்து, உரிய திணைக்களங்களின் அனுமதி பெறாமல் பௌத்த பிக்கு கட்டடம் ஒன்றை அமைத்து வருகிறார். பிள்ளையார் கோவிலின் வாசலில் இரண்டு தூண்கள் நிறுவப்பட்டு சிசிரிவி கமரா பொருத்தியுள்ளார். இவை நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். எனினும் பொலிசார் அதை கண்டுகொள்ளவில்லையென மக்கள் விசனம் தெரிவித்தனர்.

அத்துடன், பிள்ளையார் ஆலயத்தில் வெசாக் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.

(யூட் கென்ஸ்ரன்ரைன்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here