பாதுகாப்பு ஏற்பாடுகளை பயன்படுத்தி கொள்ளை இலாபமடிக்கும் வவுனியா வர்த்தக நிலையங்கள்!

சஹ்ரான் குழுவின் பயங்கரவாத நடவடிக்கையையடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை பாவித்து சில வர்த்தக நிலையங்கள் கொள்ளை இலாபம் அடிக்கின்றன. அப்படியொரு சம்பவம் வவுனியாவில் இடம்பெறுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பையடுத்து நாடு முழுவதும் நிலவிய அச்சமான சூழலில், வவுனியா வைத்தியசாலைக்கு வெடிக்குண்டு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

வைத்தியசாலை நுழைவாயிலில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வைத்தியசாலையினுள் செல்லும் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் தலைக்கவசம் கொண்டு செல்லதற்கும் இரானுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

தலைக்கவசத்திற்கு விதிக்கப்பட்ட தடையினையடுத்து பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள சில வர்த்தக நிலையங்களில் தலைக்கவசம் வைப்பதற்கு 10 ரூபா அறவிடப்படுகின்றது.

தினசரி வைத்தியசாலைக்கு செல்லும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் 10 ரூபா கட்டணம் செலுத்தி தலைக்கவசங்களை வர்த்தக நிலையங்களில் ஒப்படைத்து செல்கின்றனர்.

தினசரி மூன்று நேரமும் நோயாளர்கள் பார்வையிடுபவர்கள் மற்றும் நோயாளர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு சமூகம் அளிக்கின்றனர்.

அண்ணளவாக ஒரு நாளுக்கு எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களின் தலைக்கவசத்தை பாதுகாப்பாக வைக்க அறவிடும் பணத்தின் மூலம், வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையங்கள் சுளையாக பணம் சம்பாதிக்கின்றன.

அத்துடன் கட்டணம் செலுத்தபட்ட இடங்களில் சில இடங்களில் தலைக்கவசங்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி வீதியில் வைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தலைக்கவச தடையினை நீக்க வேண்டும் அல்லது நகரசபையினரோ வைத்தியசாலை நிர்வாகத்தினரோ இதற்கான மாற்று ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டுமேன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் தலைக்கவசத்தினை எவ்வித சோதனைகளும் இன்றி வைத்தியசாலைக்குள் எடுத்துச் செல்ல பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here