காவலாளியால் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்: பாடசாலையில் களேபரம்; அதிபர் பதவி விலகுவதாக அறிவிப்பு!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் காவலாளியால், மாணவியொருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அதிபர் தவறிவிட்டார் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி பெற்றோர், பழைய மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அதிபர் பதவியில் இருந்து விலகிச்செல்வதாக பொதுச்சபையில் தற்போதைய அதிபர் அறிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டம் இன்று காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையில் அண்மையில் காவலாளி தனது உடைகளை களைந்து மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்க முயன்ற விவகாரத்தை, அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதுடன்,  காவலாளி தொடர்ந்தும் பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் அதற்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சபையில் அனைவரும் குழப்பமடைந்து அதிபருக்கு எதிராக கோசமெழுப்பிய நிலையில் பெண் ஆசிரியர்கள் பலரும் ஆண் ஆசிரியர்கள் சிலரும் அதிபருக்கு ஆதரவாகவும் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்காமைக்கு ஆதரவாகவும் கோசங்களை குரல் எழுப்பியவாறு சபையின் நடுவே வந்தனர்.

இதன் போது ஆசிரியர்களுக்கு எதிராகவும் பாடசாலைக்கு மாணவிகளை அனுப்புவதற்கு அச்சம் கொள்வதாகவும் தெரிவித்து பெற்றோர் கோசங்களை எழுப்பியதுடன் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு ஆதரவாக இருந்த ஆசிரியர்களையும் அதிபரையும் வெளியேறுமாறும், அதிபரை பதவியில் இருந்து விலகுமாறும் கோரினர்.

இந் நிலையில் அதிபர்சிசிரிவி பதிவில் குறித்த சம்பவம் பதிவில் இருந்த போதிலும் மாணவியும் அவரின் பெற்றோரும் நடவடிக்கைக்கு உடன்படவில்லை என தெரிவித்து தான் பொலிஸிலோ ஏனைய இடத்திலோ முறையிடவில்லை என தெரிவித்தார். அத்துடன் இனி தான் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் பெற்றோர் அதிபரின் செயற்பாடு பிழை எனவும் பொலிஸிடம் முறையிட்டு பொலிஸே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததுடன் அதிபரே முதல் குற்றவாளியெனவும் அதிபருக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியர்களும் குற்றவாளிகளே என தெரிவித்து சபையில் நியாயத்தினை கேட்டு நின்றனர்.

இந் நிலையில் பாடசாலையில் பல பண மேசாடிகள் இடம்பெறுவதாக பழைய மாணவர்கள் சங்கத்தால் குற்றச்சாட்டுக்கள் அடுக்கிக்கொண்டு சென்றபோது பழைய மாணவரும் பெற்றோருமான ஒருவர் இதனை விசாரிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதனை முதலில் ஏற்றுக்கொண்ட அதிபர் தான் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்த நிலையில் குழு நியமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தான் இன்றில் இருந்து குறித்த பதவியில் இருக்கப் போவதில்லை எனவும் தான் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்து சபையில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் சிலர் அதிபரின் முடிவை வரவேற்றதுடன் புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து கூட்டத்தினை நிறைவு செய்து வெளியேறினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here