கூட்டமைப்பிற்குள் சம்பந்தனின் பிடி தளர்கிறதா?… அதிகரிக்கும் அதிருப்தியாளர்கள்!


முன் எப்பொழுதும் இல்லாத அளவில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது, அந்த கட்சியின் எம்.பிக்களிடம் அதிருப்தி அதிகரித்துள்ளது. முதல் தடவையாக இரா.சம்பந்தனின் விருப்பத்தை மீறி, அவசரகால சட்டத்தை எதிர்த்து கூட்டமைப்பு எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம், இனப்பிரச்சனை தீர்வில் தோல்வியடைந்து கொண்டு செல்கிறது என்ற அப்பிராயம் பரவலாக உருவாகியபோதும், அதை ஏற்காமல் கட்சிக்குள் விடாப்பிடியாக நின்ற சமயத்தில், இரா.சம்பந்தன் மீது எம்.பிக்களிற்கு முதலாவது அதிருப்தி கிளப்பியது.

ஆனால், வரலாற்றில் ஒரு முரண்நகையாக, இம்முறை அதிருப்தியடைந்த எம்.பிக்கள் அனைவருமே தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள்தான். இதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் முரண்பாடு ஏற்பட்டபோது, அது தமிழ் அரசு கட்சியினருக்கும், இன்னொரு கட்சிக்குமான முரண்பாடாகவே இருந்தது. இம்முறை, இரா.சம்பந்தனின் நடவடிக்கைகளில் அதிருப்தியாளர்களாக தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் சிலரே உருவாகியுள்ளனர்.

மூன்று எம்.பிக்கள் மீது இரா.சம்பந்தனும் அதிருப்தியில் இருகிறார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. அவர்களுடன் அண்மைநாட்களில் பேசாமல், மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். தமிழ்பக்கத்துடன் பேசியபோது, அந்த எம்.பிக்களும் இந்த “பனிப்போரை“ உறுதிசெய்தனர்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை எந்த நிபந்தனையுமின்றி இரா.சம்பந்தன் ஆதரிக்கிறார், அவருக்கு அவ்வப்போது சில சலுகைகளை வழங்கி சமரசம் செய்து, தனது காரியத்தை அரசு கச்சிதமாக செய்து வருகிறது என்ற அதிருப்தி அனேக கூட்டமைப்பு எம்.பிக்களிடம் உள்ளது. கடந்த இரண்டு வரவு செலவு திட்டங்கள், அரசியல் குழப்பத்தில் ரணில் சார்பு நிலையெடுத்தது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் இரா.சம்பந்தனின் முடிவுகள் கூட்டமைப்பிற்குள் மெல்லிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அப்போது எல்லாம் மெதுமெதுவாக அவர் மீதான அதிருப்தியை எம்.பிக்கள் பகிரங்கமாகவே தெரிவிக்க ஆரம்பித்திருந்தனர்.

அந்த உரையாடல்கள், தர்க்கங்களையெல்லாம் தமிழ்பக்கம் ஏற்கனவே- அந்த சம்பவங்கள் நடந்தபோது- விலாவாரியாக வெளியிட்டிருந்தது. எனினும், இப்போது மீள்நினைவூட்டும்போது, இரா.சம்பந்தனின் முடிவுகளை ஆட்சேபித்த எம்.பிக்களின் பெயர்களை தவிர்த்து விடுகிறோம். இப்போது இரா.சம்பந்தனின் முடிவுகளில் அதிருப்தியாளர் பட்டியலில் உள்ள எம்.பிக்களின் பெயர்களை பகிரங்கமாக குறிப்பிடுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. பழைய செய்திகளை படித்த, சம்பவங்களை நினைவில் வைத்துள்ள வாசகர்கள் ஆட்களை கச்சிதமாக பிடித்துக் கொள்வார்கள் என நம்புகிறோம்.

யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தின்போது, இரா.சம்பந்தன் தனது சிபாரிசில் திருகோணமலையிலிருந்து ஊழியர்களை கொண்டு வந்து நியமித்திருந்தார். வடக்கில்- யாழில்- வேலைவாய்ப்பு பிரச்சனையிருக்க, சம்பந்தனின் சிபாரிசில் திருகோணமலையிலிருந்து ஆட்களை கொண்டு வந்தது, அவரை கைக்குள் வைத்திருக்க வழங்கப்பட்ட சலுகையென்பதை முகத்திற்கு நேராக கூட்டமைப்பு எம்.பியொருவர் துணிச்சலாக சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ்பக்கம் அது தொடர்பாக வெளியிட்ட செய்தியை, தமிழ்பக்கத்தின் பெயரை பிரசுரிக்காமல், நன்றி இணையம் என குறிப்பிட்டு, யாழில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் பத்திரிகை அப்படியே பிரசுரித்திருந்தது.

அரசின் சலுகைகளை பெறுகிறார் சம்பந்தர் என தோன்றும் சம்பவங்கள் பகிரங்கமாகவே அரங்கேற தொடங்க, கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் தமது அதிருப்தியை பகிரங்கமாகவே தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இறுதியாக இரா.சம்பந்தனிற்கு வழங்கப்பட்ட வீடு, பரவலான அதிருப்தியை எம்.பிக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியிலேயே தமது எதிர்ப்பை ஓரளவு பகிரங்கமாக மூன்று எம்.பிக்கள் காட்டி வருகிறார்கள்.

இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்கிய வீடு ஒன்று கொழும்பு சமிற் பிளேஸில் உள்ளது. அந்த வீட்டைத்தான், “சம்பந்தர் குடிசைக்குள் வாழ்கிறார்“ என ஆரம்பகாலத்தில் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். நீண்டகாலமாக அந்த வீட்டில் சம்பந்தன் வசிக்கிறார். 2015 அளவில், உலகத்தமிழர் பேரவை, கனடிய கிளை என்பன, தமிழ் அரசு கட்சிக்கு நிதி வழங்கும் மூலங்கமாக மாறிய பின்னர், கொழும்பில் விஜயகலா மகேஸ்வரனிற்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு பெற்றனர். இரா.சம்பந்தனின் அலுவலகமாக மாற்ற அங்கு அலுவலக தளபாடங்கள் வாங்கப்பட்டன. மாதாந்தம் பெருந்தொகை வாடகையாக செலுத்தப்பட்டது. அந்த வீட்டிற்கு குடியிருக்க வருமாறு இரா.சம்பந்தனை அழைத்தபோது, மறுத்து விட்டார்.

தனது சமிற் பிளேஸ் வீடே (அதாவது ஆதரவாளர்கள் சொன்ன குடிசை) இராசியானது என மறுத்தார். அதனால் ஆளில்லாத வீட்டிற்கு சிறிதுகாலம் வாடகை செலுத்தி விட்டு, பின்னர் வீட்டை கைவிட்டனர்.

எதிர்க்கட்சி தலைவரான பின்னர், எதிர்க்கட்சி தலைவர் வாசஸ்தலத்தில் குடியிருக்க சென்ற பின்னரே, அந்த வீடு “இராசியான“ அதிசயம் நடந்தது. அந்த வீட்டையே, விசேட அமைச்சரவை பத்திரத்தின் மூலம் ரணில் அரசு வழங்கியது.

கடந்த மாதமளவில் கூட்டமைப்பு எம்.பியொருவர் துணிச்சலாக, இரா.சம்பந்தனிடம் இதை சுட்டிக்காட்டினார். இது ஒரு அரசியல் இலஞ்சம் என மக்கள் பேசுகிறார்கள், சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது என நேரடியாகவே சுட்டிக்காட்டினார். ஆனால், அந்த விமர்சனத்தை இரா.சம்பந்தன் ஏற்க தயாராக இருக்கவில்லை. “நான் புதிய வீட்டிற்கு போனது உமக்கு பிடிக்கவில்லை“ என வேறு கோணத்தில் விவகாரத்தை அணுகி, விமர்சனத்தை நிறுத்த வைத்தார்.

எனினும், இந்த வீட்டு விவகாரம் வீட்டுக்குள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் அரசுக்கட்சியின் மூன்று எம்.பிக்கள் தமது அதிருப்தியை ஓரளவு வெளிப்படையாக காண்பிக்க தொடங்கியுள்ளனர்.

இப்போது சர்ச்சையாகியுள்ள ரிசாட் விவகாரத்தில், இது வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது. ரிசாட் விவகாரம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு வரை சென்றால், இரா.சம்பந்தனின் முடிவையும் மீறி சில எம்.பிக்கள் செயற்படும் நிலைமை ஏற்படுமென தெரிகிறது. அப்போது, அந்த அதிருப்தியாளர்களை அறிந்து கொள்ளலாம்.

இதில் முக்கிய குறிப்பு, இந்த அதிருப்தியாளர்கள் என்பதன் அர்த்தம் கட்சியை உடைத்துக் கொண்டு செல்பவர்கள் என்பதல்ல. கட்சிக்குள் இரா.சம்பந்தனின் சில நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அவ்வளவே.

எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பில்- தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள் இரா.சம்பந்தனிற்கு எதிராக போர்க்கொடி தூக்குவது இதுவே முதன்முறையாகும். அது சம்பந்தனின் அரசியல் தோல்வியால் ஏற்பட்டதா என்பது விரிவான பேசப்பட வேண்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here