திரும்பிப் பார்க்கப்படுமா புணாணை?

அபிவிருத்தி என்பது நகரத்திற்கு மட்டும் உரியதா? கிராமங்கள் கணக்கிலெடுக்கப்படாதா?

இப்படியான கேள்வியை எழுப்பும் விதமாகவே அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதை செயற்படுத்தும் அதிகாரிகளிற்கும், வழிநடத்தும் அதிகாரிகளிற்கும் கிராமங்களின் தேவைகள் புரிவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலும், ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைப் பிரிவிலும் காணப்படும் புணாணை கிராம சேவகர் பிரிவிற்குட்ட மயிலந்தனை கிராமமானது இரண்டு பிரிவுகளை உள்ளடக்கிய கிராமமாக காணப்படுகின்றது.

இவ் மயிலந்தனை கிராமமானது நான்கு பக்கமும் காடுகளால் சூழப்பட்ட இருள் நிறைந்த இடமாகவும், பயத்தின் மத்தியில் மக்கள் வாழும் இடமாகவும் காட்சியளிக்கின்றது. இக்கிராமத்திற்குள் நுழையவே பயம் பிடிக்கிறது.

இக்கிராமத்தில் சுமார் 90 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இக்கிராமமானது 1992ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ம் திகதி பெரும் படுகொலையை சந்தித்த கிராமம் இது. தமிழ், சிங்களத்தில் பேசியவாறு ஆயுதத்துடன் வந்தவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அடங்கலாக 35 பேரை கொன்று குவித்தனர். இச்சம்பவத்தில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம் என பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இக்கொலை சம்பவம் இடம்பெற்றதையடுத்து இக்கிராம மக்கள் வேறு இடங்களுக்கு பரவலாக இடம்பெயர்ந்து பின்னர் 2003ம் ஆண்டு மீளக்குடியேறினர். ஆனால் இவருக்கு இதுவரை எந்தவித உதவிகளும் முற்றுமுழுதாக வழங்கப்படவில்லை.

இக்கிராமத்தின் அடிப்படை தேவையாக காணப்படும் குடிநீர் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை, போக்குவரத்துப் பிரச்சனை, மலசலகூடப் பிரச்சனை, வைத்திய வசதிகள், பாடசாலை வசதிகள், யானைப் பிரச்சனை என பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் இன்னும் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.

இருள் சூழ்ந்து விட்டால் இக்கிராமத்திற்கு யானைகள் ஊடுருவல் காணப்படுவதுடன், வேலிகள் மற்றும் தற்காலிக கொட்டில் வீடுகள், பயிர் செய்கைகள் என்பவற்றை அழித்துவிட்டு எங்களுக்கு பயத்தை காட்டிவிட்டு செல்கின்றது. இப்பிரதேசத்தில் மின்சார தூண்கள் அமைக்கப்பட்டு மின்சார வயர்கள் பொருத்தப்பட்டு, வீதிகளுக்கு மின்குமிழ்கள் போடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மின்சார வசதிகளை எங்களுக்கு ஏற்படுத்தி தரவில்லை. சில இடங்களுக்கு வழங்கியுள்ளார்கள் என்கின்றனர்.

மின்சார விளங்குகள் பொருத்தப்பட்டவற்றை ஒளிரச் செய்து தருவதோடும், மேலும் எங்களது வீடுகளுக்கும் மின்சார இணைப்பை ஏற்படுத்தி தந்தால் நாங்கள் யானையில் தாக்குதலில் இருந்தும், பாம்புகளின் தொல்லைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் எங்களுக்கு யாரும் உதவி வழங்குவதற்கு முன்வருவதில்லை. நாங்கள் அன்றாட கூலி வேலை செய்து வரும் பணத்தை வைத்து எங்களின் வாழ்வதாரத்தை மற்றும் பிள்ளைகளின் கல்வி கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றோம் என்கின்றனர்.

இக்கிராமத்தில் வாழும் மாணவர்கள் கல்வி கற்பதற்காக புணாணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு செல்ல வேண்டும். அத்தோடு இவர்கள் பாடசாலைக்கு செல்வதானால் புகையிரத கடவையை கடந்துதான் வீதியை அடைய வேண்டும். ஆனால் இவ்விடத்தில் புகையிரத கடவை வாயில் திறந்த வெளியாக காணப்படுவதால் மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரை பயத்தின் மத்தியில் கடந்து செல்கின்றனர்.

இக்கிராமத்தில் இருந்து வீதியை கடந்து வாகனத்தில் செல்வது, பேருந்தில் செல்வதற்கு பயன்படுத்துவதற்கென இரண்டு வீதிகள் காணப்படுகின்றது. இவ்வீதிகள் இரண்டும் புகையிரத கடவையை கடந்து செல்ல வேண்டும். எனவே புகையிரதம் வரும் போது நாங்கள் பயத்தின் மத்தியில் செல்லாது இருப்பதற்கு தடையை ஏற்படுத்தி தந்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக காணப்படும் என்கின்றனர்.

இக்கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு நடையாக செல்வதால் இவர்கள் நான்கு கிலோ மீற்றர் தூரம் செல்வது கஷ்டமாக காணப்படுவதால் மாணவர்களின் கல்வி இடைவிலகல் நிலை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. ஆகவே இம்மாணவர்களுக்கு தேவையாக போக்குவரத்து வசதிகளோ அல்லது பாடசாலை வசதிகளோ ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது பாரிய கடமையாக காணப்படுகின்றது.

இக்கிராமத்திற்குள் செல்லும் பாதையானது குன்றும் குழியுமாக பாதி மணல் நிறைந்த வீதியாக காணப்படுவதுடன், போக்குவரத்து பிரச்சனையும் ஏற்படுகின்றது. கிழக்கு மாகாண சபையினால் வீதிகள் பல புனரமைப்பு செய்யப்படுகின்றது. ஆனால் இக்கிராம வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு யாரும் இதுவரை முன்வரவில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல் வாதிகள் வருகின்றனர். ஆனால் பின்னர் இக்கிராமத்திற்கு வருவதை காணக்கூடியதாக இல்லை என மக்கள் விரக்தியில் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் குடி நீர் பிரச்சனை முக்கிய பங்கு வகிக்கின்றது. இங்கு சில வீடுகளில் மாத்திரம் கிணறு காணப்படுகின்றது. அதுவும் கோடை காலங்களில் வற்றி விடுகின்றது. அத்தோடு வயல் நிலத்தை அண்டிய பகுதியில் பொதுக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்கிணறு குளிப்பதற்கு மாத்திரம் பயன்படுகின்றது. குடி நீரைப் பெறுவதற்கு மக்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சில வேளைகளில் பிரதேச சபையால் பவுசர் மூலம் தண்ணீர் வழங்குவார்கள். அதுவும் குறிப்பிட்ட இடத்திற்கு வழங்கி விட்டு சென்று விடுவார்கள். சிலருக்கு அதுவும் கிடைப்பதில்லை. குடி நீரைப் பெறுவதாயின் வேறு கிராமத்திற்கு சென்று நீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது என்கின்றனர்.

இக்கிராமத்திற்கு பொதுக்கிணறு அமைக்கும் பணியில் ஒரு வருடத்திற்கு முன்னர் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் குழி தோண்டப்பட்டது. ஆனால் இன்றுவரை அக்குழியில் நீர் காணப்படுகின்றது. ஆனால் இது வரைக்கும் பிரதேச சபையினால் கிணறு அமைக்கப்படவில்லை.

இக்குழியில் இருக்கும் தண்ணீரை பொதுமக்கள் குளிப்பதற்கு மாத்திரம் பயன்படுத்துகின்றனர். அத்தோடு இக்குழியில் இரவு நேரங்களில் பல மிருகங்கள் விழுகின்றன. சில மிருகங்கள் இறக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இக்குழி தோண்டப்பட்ட ஒரு வருடத்திற்குள் பத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள் தவறி விழுந்துள்ளனர். பொதுமக்களின் உதவியால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆகவே இக்குழியை மூடியோ அல்லது இவ்விடத்தில் பொதுக் கிணறு ஒன்றை அமைத்து எங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு மக்கள் கோருகின்றனர்.

இக்கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனை தொடர்பாக மக்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில்!

இக்குழியில் நீர் எடுத்து எங்களது பிள்ளைகளின் பாடசாலை சீருடைகளை தோய்த்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் அங்கு கேட்கின்றார்கள் சீரூடை சுறி நிறத்தில் தானா வழங்கினோம் என்கின்றார்கள். பிரதேச சபையால் வழங்கும் தண்ணீரில் குடிப்பதற்கு போதாமல் உள்ளது. அதில்தான் எங்களுடைய பிள்ளைகளின் உடைகளை கழுவ வேண்டி உள்ளது.

யானை திறத்தினால் ஓடி சென்று இக்குழியில் விழுகின்றனர். அண்மையில் எனது நான்கு வயது மகனும் இக்குழியில் வீழந்து விட்டார். நாங்கள் அவரை காப்பாற்றி விட்டோம். இவ்வாறான நிலைமையே இங்கு அதிகம் இடம்பெறுகின்றது.

இக்குழி தோண்டப்பட்ட விடயமாக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவரிடம் பேசிய போது இவ்விடயமாக எங்களுக்கு தெரியாது தோண்டியவர்களிடமே கேளுங்கள் என்று கூறினார். ஆனால் பலர் வருகை தந்து பார்வையிட்டு செல்கின்றார்கள். யாரும் இவ்விடயமாக எந்தவித கரிசணையும் காட்டவில்லை.

எனவே இக்குழிய மேலும் தோண்டி இவ்விடத்தில் கிணறு அமைத்து எங்களுடைய குடிநீர் பிரச்சனையை நிவர்த்தி செய்து தருமாறு அரசியல்வாதி முதல் உயர் அதிகாரிகளை வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

யுத்தப் பாதிப்புக்கு முன்னர் எங்கள் வளவுக்குள் கிணறு இருந்தது. யுத்தத்தால் இடம்பெயர்ந்து விட்டு மீண்டும் வந்து பார்த்தோம் கிணறு மூடிக் கிடக்கின்றது. இக்கிணற்றை நாங்கள் மீண்டும் பாவிக்க முடியும். அதனை பாவனை செய்வதற்கு யாரும் இதுவரை உதவிகள் வழங்குவதில்லை.

அத்தோடு இரவு நேரத்தில் வரும் காட்டு யானைகளால் எங்களது வேலிகள் அனைத்தையும் உடைத்து விட்டு செல்கின்றது. இவ்விடயமாக பலரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்கின்றனர் மக்கள்.

தற்போது கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் பகுதியில் அதிகம் குடிநீர் வசதிக்கான குழாய் நீர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் குடிநீருக்கு கஷ்ரப்படுகின்றது. இவ்விடயமாக அரசியல் வாதிகள் பாராபட்சமின்றி இவர்களுக்கும் குழாய் நீர் வழங்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறே பல கோரிக்கைகளை விடுத்தவர்களாக நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் என கூறுகின்றனர்.

இக்கிராமத்து மக்களுக்கு இரவு நேரங்களில் நோய் வாய்ப்படும் பட்சத்தில் காட்டு யானையின் பாதையை ஊடறுத்து பிரதான வீதிக்கு சென்று அங்கிருந்து பல மைல் தூரம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. அத்தோடு இங்கு எந்தவித வைத்திய முகாமும் நடைபெறுவதில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்திற்கு அண்மையில் இராணுவ முகாம் அமைந்துள்ளதுடன், புதிதாக அரபுக் கல்லூரி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இக்கிராமம் இங்கு உள்ளதை யாரும் அறியாத வண்ணமே இக்கிராமம் காட்சியளிக்கின்றது. ஏன் இக்கிராமத்தில் தமிழர்கள் மாத்திரம் வாழ்கின்றார்கள் என அனைவரின் கண்களுக்கு தெரிகின்றதா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதேவேளை இம்மக்கள் குடியமர்த்தப்பட்ட வேளையில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒரு குடும்பத்திற்கு இரண்டரை ஏக்கர் காணி 42 குடும்பங்களுக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்டு இன்று அக்காணியினை அம்மக்களிடம் இருந்து மீளப்பெற்று அறபுக் கல்லூரி ஒன்று கட்டப்பட்டு விட்டதாகவும், தங்களுக்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் ஒன்றரை ஏக்கர் காணி தருவதாக காட்டியும் அக்காணிக்கான சட்ட ரீதியான எந்த ஆவணமும் இதுவரை வழங்காது இழுத்தடித்து வருவதாகவும், தமிழ் அரசியல்வாதிகள் கரிசணை காட்டாமல் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்திற்கு ஒரு பக்கத்தில் கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தினூடாக கொங்கிறீட் வீதி அமைக்கபபட்டுள்ளது. ஆனால் இவ்வீதியானது உடைந்து காணப்படுகின்றது. இவ்வீதியை பார்வையிடச் சென்ற போது எழுவது வயது நிரம்பிய தாயொருவர் தலையில் அரிசி பையை சுமந்தவாறு வருகை தந்தார். அவரிடம் வினவிய போது.

இப்பிரதேசத்தில் நெல் குத்தும் ஆலை இல்லை அதனால் ஜெயந்தியாய பகுதிக்கு சென்று குத்தி விட்டு அரிசி பையை தலையில் வைத்து வருகின்றேன் என்றார். இவர் இந்த வயதிலும் இவ்வாறான வேலைகளை செய்வது எனக்கு பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியது. நானும் இந்த வயதில் இவ்வாறு செய்வேனா அல்லது இந் காலத்து பெண்கள் இவ்வயதில் இவ்வாறான வேலைகளை செய்வார்களா? என்ற சந்தேகம் என்ற மனதில் தோன்றியது.

எனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம் பெயர் உறவுகள் மற்றும் அரசாங்கம் பல உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இக்கிராம மக்களின் நலன் கருதி தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி மக்கள் மனதில் பதிந்துள்ள யுத்த வடுக்களை அகற்ற வழிவகுக்க வேண்டும்.

மேலும் அரசியல் வாதிகள் பேச்சளவில் தங்களுடைய அரசியலை கொண்டு செல்லாமல் வேறு இடங்களுக்கு உதவிகள் வழங்குவது போன்று இக்கிராமத்திற்கும் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களின் மாத்திரம் அரசியல் வாதிகளாக இருக்காது ஏனைய காலங்களிலும் அரசியல்வாதிகளாக இருந்து தங்களால் எங்கெல்லாம் உதவிகள் பெற்று வழங்க முடியுமோ அங்கெல்லாம் உதவிகளை பெற்று வழங்குவதற்கு முன்வர வேண்டும். இவ்வாறான நிகழ்வு விரைவில் நடைபெறுமா?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here