அது போன மாதம், இது இந்த மாதம்: ஹிஸ்புல்லாவின் நிகழ்வில் மட்டு மாநகரசபை முதல்வர்!

கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹை ஒரு ஆளுனராகவே தாம் ஏற்றுக்கொள்ளவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு பிரதிநிதிகள் பகிரங்கமாக அறிவித்தல் விடுத்து சில வாரங்களே ஆன நிலையில், கிழக்கு ஆளுனரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்து கொண்டுள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் வாசஸ்தலத்தில் நேற்று மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களிற்கும், கிழக்கு அரசியல் பிரமுகர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும், தமிழ் தரப்பிலிருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. ஒரு தொகுதி தமிழ் அரசாங்க அதிகாரிகளும் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு, நிகழ்வில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருந்தனர்.

எனினும், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

இப்தார் நிகழ்வை புறக்கணிக்க வேண்டுமென்றோ, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பகை முரண்பாட்டை வளர்க்க வேண்டுமென்றோ நாம் குறிப்பிடவில்லை. எனினும், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹை கிழக்கு ஆளுனராகவே தாம் ஏற்கவில்லை, அது அரசியல் நியமனம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பிரமுகர்களை உட்கார வைத்துக் கொண்டு, செயலாளர் கி.துரைராசசிங்கம் பகிரங்கமாகவே அறிக்கை விடுத்திருந்தார்.

கிழக்கு ஆளுனரிற்கு எதிரான போக்கை கிழக்கில் தமிழ் மக்களிடம் ஏற்படுத்துவதை போன்ற நகர்வையே கூட்டமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கலந்து கொண்டது, ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் இரண்டக நிலைமையை கூட்டமைப்பு பேணுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இது குறித்து மட்டக்களப்பு முதல்வரிற்கு நெருக்கமான வட்டாரங்களுடன் தமிழ்பக்கம் பேசியது. அவர்கள் மேலும் சில தகவல்களை குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு முதல்வர் இந்த இப்தார் நிகழ்விற்கு செல்வதற்கு முன்பாக, தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், ஞா.சிறிநேசன் எம்.பி ஆகியோரிடம் முறைப்படி அறிவித்து, அவர்களின் அனுமதியுடனேயே சென்றதாக தெரிவித்தார்கள்.

வடிவேலுவின் பிரபல நகைச்சுவை காட்சியொன்றை போல, ஹிஸ்புல்லாஹ் எதிர்ப்பு போன மாத விசயம் என்றும், இது நல்லிணக்க மாதமென்றும் விளக்கம் சொன்னாலும் ஆச்சரியப்படவதிற்கில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here