ஒரு மனைவியுடனே வாழ முடியாமலுள்ளது… சஹ்ரானிற்கு சொர்க்கத்தில் 72 மனைவியா?: அம்பாறை இராணுவ தளபதி!

முஸ்லிம்கள் 24 மணித்தியாலயத்தில் எந்த நேரத்திலும் பள்ளிவாசல்களுக்கு சென்று தமது கடமைகளில் ஈடுபட முடியும் என அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹிந்த முதலிகே தெரிவித்தார்.

கல்முனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சிவில் சமூக அமைப்பினர்கள் மற்றும் உலமா சபையினருக்கும் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் இடையிலான கல்முனை மாநகர பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று (22) கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் மக்கள் புனித நோன்பு காலத்தில் தமது மார்க்க கடமைகளை பள்ளிவாசல்களில் நிறைவேற்றுவதில் எழுந்துள்ள அசௌகரியங்கள் பற்றி கருத்து தெரிவித்த போது அதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே கட்டளைத்தளபதி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றும் போது,

குர்ஆனிலோ அல்லது எந்த மதத்திலோ யாரையும் கொல்லும்படி கூறவில்லை. ஒருவர் இன்னெருவரை கொன்றுவிட்டு எவ்வாறு சுவர்க்கம் செல்ல முடியும்?. 1983 களுக்கு முன்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம். இதனை குழப்புவோர் வேறு நபர்கள். நான் இஸ்லாம் மதத்தை விமர்சிக்கவில்லை. எனக்கு நண்பர் ஒருவர் சொன்னார் மற்ற மதத்தவர்களை கொன்றால் சுவர்கத்தில் 72 மனைவிமார் கிடைக்கும் என்று. இது ஒரு சோடிக்கப்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். ஒரு மனைவியை வைத்துக் கொண்டு வாழ்வதற்கே முடியாமல் உள்ளது.

விடுதலைப்புலிகள் தனி நட்டை கேட்டு சண்டைசெய்தார்கள். ஆனால் இந்த தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள் என்ன நோக்கத்தில் இதனை செய்தார்கள் என்பதை தான் புரியாமல் உள்ளது. இவர்கள் எல்லோரும் நன்றாக கல்விகற்ற உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்கள். இவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளது.

உலகத்தில் மிகவும் பெறுமதியானது மனிதபிமானம் ஆகும். எந்த மதத்தவராக இருந்தாலும் மனிதத் தன்மை மிகவும் முக்கியமானதாகும். நாங்கள் முதலில் மனிதர்கள் என்ற உணர்வு வர வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்தல், அன்பு காட்டுவதைப் பற்றித்தான் எல்லா சமயத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மற்றவர்களை கொன்று விட்டு வாழும் படி எந்த மதத்திலும் சொல்லவில்லை.

மற்றவர்களை கொன்றுவிட்டால் சுவர்க்கம் செல்ல முடியும் என்று சஹ்றான் சொல்லியிருக்கிறார். அப்படி செல்ல முடியுமா? முடியாது. அடிப்படை வாதம் பற்றி எதையுமே அறியாத சிறுவர்கள், பெண்களோடு மனைவி பிள்ளைகளையும் சேர்ந்து குண்டை கட்டிக் கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்கள். இது சரியா? யாராவது நமது மனைவி பிள்ளைகளை கொல்ல நினைப்போமா?

இது ஒரு அழகான உலகமாகும். இந்கு நாம் சந்தோசமாக வாழ வேண்டும். இன்று நாம் வெளிநாடுகளுக்கு சென்றால் அங்கு எம்மை இரண்டாம் தரப்பாகத்தான் பார்ப்பார்கள். முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் செய்யும் கடமைகளை பற்றி நான் நன்கு அறிந்துள்ளேன். எனது இரண்டு வருட இராணுவ பயிற்சியினை பாகிஸ்தான் நாட்டில் தான் முடித்தேன். இன்றும் அங்கு எனக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள்.

எனவே நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களுக்கு 24 மணி நேரமும் சென்று உங்கள் கடமைகளில் ஈடுபடலாம். ஊரடங்கு சட்டம் இல்லாவிட்டால் பிரச்சினை கிடையாது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவம் என்ற ரீதியில் நாம் எந்த முஸ்லிம் வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்தவில்லை. இன்று ஒரு சிலர் மதத்தில் பெயரில் செய்த வன்முறையால் நாம் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம் எப்போதும் சமாதானத்தை தான் விரும்புகிறோம் என்றார்.

இந்த சந்திப்பில் கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக், கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி என்.ஆர்.தர்மசேன, மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மனாப், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதி றிஸாட் சரீப் உட்பட உலமாக்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here