முருங்கை… முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!

றட்சியைத் தாங்கும் திறன்கொண்ட முருங்கை, இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடியது. மேலும் சத்தான சந்தை வாய்ப்பும் இருப்பதால், விவசாயிகளின் தோழனாகவே இருக்கிறது முருங்கைச் சாகுபடி. பாசன வசதியைப் பொறுத்துச் செடி முருங்கை, மர முருங்கை என ரகங்கள் இருந்தாலும், இரண்டுக்குமே சாகுபடி நுட்பங்கள் ஒன்றுதான்.

முருங்கைச் சாகுபடித் தொழில்நுட்பங்கள் பற்றிய விபரங்களை தருகிறோம்.

இது 10 மீட்டர் முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் முதல் 2,000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில்கூட வளரும். இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. முருங்கையில் காய், விதை, இலை ஆகியவைதான் பயன்படுத்தப்படுகின்றன. முருங்கையில் பல ரகங்கள் இருந்தாலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பி.கே.எம்-1, பி.கே.எம்-2, கே.கே.எம்-1 ஆகிய மூன்று ரகங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

முருங்கையில் 13 வகைகள் சாகுபடி செய்ய ஏற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில், ஓராண்டு முருங்கை, பல்லாண்டு முருங்கை என இரண்டு வகைகள் பரவலாக்கப் பட்டுள்ளன.  இந்திய இனங்கள் மூன்றுமே ஓராண்டு முருங்கை வகையைச் சேர்ந்தவைதான். பல்லாண்டு முருங்கை என்பது யாழ்ப்பாணம் முருங்கை, வலையபட்டி முருங்கை போன்ற மர முருங்கை வகைகள்.

முருங்கை அனைத்து மண் வகைகளிலும் வளரும். ஆனால், வடிகால் வசதி அவசியம். களிமண் மற்றும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் போதுமான மகசூல் கிடைக்காது. பல்லாண்டு முருங்கை என்ற மர முருங்கை ரகங்கள் ஆண்டு முழுவதும் பூக்கும். ஓராண்டு முருங்கை எனப்படும் செடி முருங்கை ரகங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பூக்கும். ஓகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.

முருங்கையை விதை மூலமாகவும், தண்டு மூலமாகவும் நடவு செய்யலாம். ஓராண்டு முருங்கை ரகங்களை விதை மூலமாகத்தான் நடவு செய்ய வேண்டும். நிலத்தில் நேரடி விதைப்பு மூலமாகவும், நாற்று விட்டும் நடவு செய்யலாம். பல்லாண்டு முருங்கையைத் தண்டு (போத்து) அல்லது தண்டு கொண்டு வளர்க்கப்பட்ட நாற்று மூலமாக நடவு செய்யலாம்.

முருங்கை நடவு செய்ய ஒன்றரை அடி சதுரம், ஒன்றரை அடி ஆழம் இருக்குமாறு குழியெடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் இரண்டு பங்கு செம்மண், இரண்டு பங்கு மணல், ஒரு பங்கு தொழுவுரம், தலா 100 கிராம் அசோஸ்  ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேப்பம் பிண்ணாக்கு, 50 கிராம் வேம், ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு நிரப்ப வேண்டும். குழியெடுக்கும்போது கிடைக்கும் தாய்மண்ணைக் குழிக்குள் போடக்கூடாது.

ஓராண்டு முருங்கையை நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 625 கிராம் விதை தேவை. நேரடி விதைப்பின்போது, தயார் செய்த குழியில் லேசாகப் பள்ளம் பறித்து ‘ஃ’ மாதிரி மூன்று விதைகளை விதைக்க வேண்டும். இந்த மூன்று விதைகளுக்கும் 5 சென்டி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். நடவு முடித்த பிறகு, மண் நனையும் அளவுக்குப் பாசனம் செய்தால் போதும். தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. நடவு செய்த விதை 10 நாள்களிலிருந்து 12 நாள்களுக்குள் முளைக்கும். செடிகள் 15 சென்டிமீட்டர் வரை வளர்ந்த பிறகு, ஒவ்வொரு மூன்று செடிகளிலும் ஆரோக்கிய மான ஒரு செடியை மட்டும் விட்டுவிட்டு, மீதி இரண்டு செடிகளைப் பிடுங்கி விட வேண்டும். இப்படி மூன்று செடிகளை வளரவிட்டு ஒன்றை அகற்றுவதன் மூலம் தரமான செடியை மட்டும் வளர அனுமதிக்க முடியும். இப்படிச் செய்யும்போது விதைகள் வீணாகின்றன என நினைப்பவர்கள் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யலாம்.

விதையாக விதைத்தாலும் சரி, நாற்றாக நடவு செய்தாலும் சரி… மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். முருங்கை வறட்சியைத் தாங்கி வளரும் என்பதால் தினமும் பாசனம் செய்யத் தேவையில்லை. நம் மண்ணின் ஈரம் தாங்கும் தன்மையைப் பொறுத்து 7 நாள்கள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் பாசனம் செய்தால் போதுமானது. தண்ணீர் தேங்கி நின்றால் வேர் அழுகல் வர வாய்ப்புள்ளது. ஒரு வேளை நாம் நடவு செய்த சமயத்தில் மழை பெய்து தண்ணீர் தேங்கினால், மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கொடுக்கும்போது, ஒவ்வொரு குழியிலும் 15 முதல் 20 கிராம் அளவு சூடோமோனஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியைத் தூவி விட வேண்டும். இது வேர் அழுகலைத் தடுத்துவிடும்.

நாற்றுகள் இரண்டு மாதத்தில் மூன்று அடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். அந்த உயரத்துக்கு வளர்ந்தவுடன், தரையிலிருந்து இரண்டரை அடி உயரம்விட்டு, அதற்குமேல் உள்ள நுனிகளைக் கிள்ளி விட வேண்டும். இதனால், அதிகச் சிம்புகள் உருவாகும். முருங்கைச் சாகுபடியில் நுனி கிள்ளுதல் முக்கியமான ஒன்று. பலர் இதைச் செய்வதில்லை. சில விவசாயிகள் 90 நாள்களுக்குப் பிறகு நுனி கிள்ளுகிறார்கள். இதுவும் தவறு. 60-ம் நாளிலிருந்து 70-ம் நாளுக்குள் நுனி கிள்ளி விட வேண்டும். நுனி கிள்ளுவதால் இலைகள் அதிகம் உருவாகி, பூக்களும் அதிகம் பூத்து காய்கள் உருவாகும். நடவு செய்ததிலிருந்து 5 முதல் 6 மாதங்களில் பூவெடுக்கும். 7-ம் மாதத்துக்குமேல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து ஆறு மாதங்கள் மகசூல் இருக்கும். மார்ச் மாத கடைசியில் தொடங்கி ஓகஸ்ட் மாதம் வரை மகசூல் எடுக்கலாம். அதன் பிறகு மகசூல் குறைந்து மரம் ஓய்வெடுக்கும். பிறகு மீண்டும் பூவெடுத்து காய்க்கத் தொடங்கும்.

விதைத்து அல்லது நடவு செய்து ஓர் ஆண்டு முடிந்ததும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரம் விட்டுவிட்டு, மேல் உள்ள பாகத்தை வெட்டி விட வேண்டும். இப்படிச் செய்வதால், அதிகச் சிம்புகள் அடித்து இரண்டாம் ஆண்டும் நல்ல மகசூல் கிடைக்கும். இப்படி மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்புப் பயிராகப் பராமரிக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் உரம் கொடுக்க வேண்டும்.

பல்லாண்டு முருங்கை ரகங்களை விதைக்குச்சிகள் அல்லது நாற்றுகள் மூலமாக நடவு செய்யலாம். விதைக்குச்சிகளை மூன்று ஆண்டுகளுக்கு மேலான மரத்திலிருந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். 4 அங்குலம் முதல் 16 அங்குலம் விட்டமுள்ள குச்சிகளாக இருக்க வேண்டும். மரத்தில் பச்சை நிறம் மறைந்த பகுதியில்தான் விதைக்குச்சிகளை வெட்ட வேண்டும். அதாவது, முதிர்ந்த பட்டை உருவான தண்டுகளைத்தான் விதைக் குச்சியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒன்றரை அடி முதல் ஆறு அடி உயரம் வரை விதைக்குச்சிகள் இருக்கலாம். தேர்ந்தெடுத்த குச்சிகளைச் செடிக்குச்செடி இரண்டு மீட்டர், வரிசைக்கு வரிசை மூன்று மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஓராண்டு முருங்கைக்கு எடுத்தது போலவே குழிகளைத் தயார் செய்ய வேண்டும். ஓராண்டு முருங்கை மற்றும் பல்லாண்டு முருங்கை இரண்டுக்கும் உர மேலாண்மை ஒரே மாதிரிதான். ஒவ்வொரு செடிக்கும் மட்கிய தொழுவுரம் 10 கிலோ, மண்புழு உரம் 5 கிலோ, தலா 2 கிலோ அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஆண்டுக்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும். ஓகஸ்ட்-செப்டம்பர் மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் உரம் கொடுக்கலாம். ஓராண்டு முருங்கை ரகங்களில், ஒரு வருடம் முடிந்து, அதை வெட்டியபிறகு உரம் கொடுக்க வேண்டும். இவற்றுக்கு மேலே சொன்ன அளவில் மற்ற உரங்களையும், மண்புழு உரத்தை மட்டும் 10 கிலோ என்ற அளவில் கொடுக்க வேண்டும்.

உரங்களை ஒரே இடத்தில் போடாமல்… மரத்தைச் சுற்றி வட்டமாகத் (வேரின் நுனிப்பகுதி உள்ள இடத்தில்) தூவிப் பாசனம் செய்ய வேண்டும். முருங்கை 5-ம் மாதத்திலிருந்து 6-ம் மாதத்துக்குள் பூவெடுத்து விடும். இப்பருவத்தில் பூவெடுக்கவில்லை என்றால், பஞ்சகவ்யாவைத் தெளிக்க வேண்டும். பஞ்சகவ்யா தெளித்த ஐந்தாம் நாளில் தேமோர் கரைசல் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், ஒரு மாதத்தில் பூ எடுத்து விடும்.


பல்லாண்டு முருங்கை ரகங்கள் 

யாழ்ப்பாணம் முருங்கை: இந்த ரகம் அதிகமாகக் காய்க்கும் திறனுடையது. ஒரு மரத்திலிருந்து ஓர் ஆண்டில் சராசரியாக 600 காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய் 60 சென்டிமீட்டர் முதல் 70 சென்டி மீட்டர் வரை நீளம் இருக்கும். ஒரு காயின் எடை சராசரியாக 80 கிராம் அளவு இருக்கும். ஆண்டு முழுவதும் காய்க்கும்.

செம்முருங்கை: காய் லேசாகச் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது ஆண்டு முழுவதும் காய்க்கக்கூடியது. ஒரு மரத்திலிருந்து ஓர் ஆண்டுக்கு 240 காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய் 60 சென்டிமீட்டர் முதல் 70 சென்டிமீட்டர் வரை நீளமும் 120 கிராம் எடையும் இருக்கும்.

வலையபட்டி முருங்கை: இந்திய ரகம். மலையடிவாரங்களில் சிறப்பாக வளரும் இயல்புடையது. இந்த ரகம் ஆண்டு முழுவதும் காய்க்கும். காய் சுவையாக இருக்கும். ஒரு காய் 65 சென்டிமீட்டர் நீளமும், 120 கிராம் எடையும் இருக்கும். ஒரு மரத்திலிருந்து ஓர் ஆண்டுக்கு 1,200 காய்கள் வரை கிடைக்கும்.

மூலனூர் முருங்கை: இந்திய ரகம். ஒரு காய் 45 சென்டிமீட்டர் முதல் 50 சென்டிமீட்டர் நீளமும் 120 கிராம் எடையும் இருக்கும். ஓர் ஆண்டில் ஒரு மரத்தில் சராசரியாக 2 ஆயிரம் காய்கள் வரை காய்க்கும். இது ஆண்டு முழுவதும் காய்க்கும். 15 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம்.

காட்டு முருங்கை: இதுவும் இந்திய ரகம். இந்த ரகக் காய்கள் அதிகச் சதைப்பற்றோடு இருக்கும்.

கொடிக்கால் முருங்கை:  இதுவும் இந்திய ரகம். காய் குட்டையாக இருக்கும். ஒரு காயின் நீளம் 20 சென்டி மீட்டர் முதல் 25 சென்டி மீட்டர் வரை இருக்கும். ஒரு மரத்தில் ஓர் ஆண்டுக்கு 250 காய்கள் வரை காய்க்கும். ஒரு காயின் சராசரி எடை 80 கிராம் அளவு இருக்கும்.


பயன்பாட்டுக்கேற்ற இடைவெளி !

காய், இலை, தீவனம் என மூன்று பயன் பாடுகளுக்காக முருங்கைச் சாகுபடி செய்யப்படுகிறது. எந்தப் பயன்பாட்டுக்காகச் சாகுபடி செய்கிறோம் என்பதைப் பொறுத்து இடைவெளி வேறுபடும். காய்த் தேவைக்காகச் சாகுபடி செய்யும்போது செடிக்குச் செடி 2 மீட்டர், வரிசைக்கு வரிசை 3 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இலை அறுவடைக்காக நடவு செய்பவர்கள் செடிக்குச் செடி 2 மீட்டர், வரிசைக்கு வரிசை மூன்றரை மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இந்த இடைவெளி அதிகமாவதால் அதிக இலைகள் கிடைக்கும். இலைகளுடன் காயும் கிடைக்கும்.

தீவனப்பயிராக நடவு செய்பவர்கள் செடிக்குச் செடி ஒரு மீட்டர், வரிசைக்கு வரிசை இரண்டு மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம். இந்த முறையில் செடியைப் பூக்க விடத் தேவையில்லை. இலைகள் மட்டும்தான் நோக்கம்.

கீரையாக விற்பனை செய்பவர்களுக்கு, இந்த நடவு முறை ஏற்றது. பொடிக்காக இலையை அறுவடை செய்யும்போது, இளம் இலைகளை அறுவடை செய்யக்கூடாது. இளம் இலைகளில் குளோரோபில் (பச்சையம்) உருவாகியிருக்காது. எனவே முதிர்ந்த இலைகளை அறுவடை செய்ய வேண்டும்.


ஓராண்டு முருங்கை ரகங்கள் 

பி.கே.எம்-1: இது பெரியகுளம் ரகம். 4 மீட்டர் முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. 75 சென்டிமீட்டர் நீளமுள்ளது. ஒரு காயின் எடை சராசரியாக 75 கிராம் இருக்கும். ஒரு மரத்திலிருந்து சராசரியாக 220 காய்கள் வரை கிடைக்கும். முறையாகப் பராமரித்தால், ஓர் ஆண்டில் ஒரு ஹெக்டேர் நிலத்திலிருந்து சராசரியாக 52 டன் மகசூல் கிடைக்கும்.

பி.கே.எம்-2: இது பி.கே.எம்-1 ரகத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட ரகம். 126 சென்டிமீட்டர் நீளமுள்ளது. ஒரு காயின் எடை 280 கிராம். ஒரு மரத்திலிருந்து 220 காய்கள் வரை கிடைக்கும். ஓர் ஆண்டில் ஒரு ஹெக்டேர் நிலத்திலிருந்து சராசரியாக 98 டன் மகசூல் கிடைக்கும்.

இவை, நடவு செய்த 5 முதல் 6 மாதங்களில் பூவெடுத்து 7-8 மாதங்களில் அறுவடைக்கு வரும். இவற்றை ஓராண்டுப் பயிர் என்று சொன்னாலும், மூன்று ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here