நாளை அவசரகால சட்ட வாக்கெடுப்பு: என்ன முடிவெடுப்பதென தெரியாமல் கூட்டமைப்பு திண்டாட்டம்!

அவசரகால சட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அவசரகால சட்டத்தை கேள்விக்குட்படுத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அவசரகால சட்ட வாக்கெடுப்பில் என்ன முடிவெடுப்பது என்ற குழப்பத்தில் இன்று கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு திண்டாடிய சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

நாளை அவசரகால சட்ட வாக்கெடுப்பு நடக்கவுள்ளதால், இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் கூடியது. இரா.சம்பந்தன் சுகவீனம் காரணமாக இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை. எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவில் நடக்கும் மனித உரிமை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொள்ள சென்று விட்டார். ( கூட்டமைப்பின் இன்னொரு எம்.பியான சவைணபவன், அமெரிக்காவிலுள்ள தனது மகளின் தனிப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளது கொசுறு தகவல்)

சம்பந்தன், சுமந்திரன் இல்லாத நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவை கூட்டலாமென்ற ஐடியா எப்படி மாவை சேனாதிராசாவிற்கு வந்தது தெரியவில்லை. அவரது கெட்டகாலம் அப்படியொரு யோசனை வந்து, இன்று நாடாளுமன்ற குழு கூட்டத்தை கூட்டினார்.

நீண்டநேரமாக நடந்த இன்றைய நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் மாவை சேனாதிராசா திண்டாடினார். சம்பந்தன், சுமந்திரன் இல்லாமல் தன்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாதென  நழுவல், வழுவலாக பேசி இன்றைய கூட்டத்தை ஒருவாறு ஒப்பேற்றி விட்டார்.

நாளை அவசரகால சட்டம் வாக்கெடுப்பிற்கு வரும்போது என்ன முடிவெடுப்பது என்று ஆராயப்பட்டது. பெரும்பாலான எம்.பிக்கள் அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெரிவித்தனர். கூட்டமைப்பின் சார்பில் பேசிய பலரும், அவசரகால சட்டத்தை சவாலுக்குட்படுத்தவுள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள், இது தொடர்பாக விவாதம் அவசியமில்லை, நாளை எதிர்த்து வாக்களிப்போம் என்றனர்.

எனினும், மாவை சேனாதிராசா அதற்கு சம்மதிக்கவில்லை. நாளையதினம் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு வருவார், அவர் வந்த பின்னர் இது குறித்து முடிவெடுப்போம் என்றார்.

எனினும், அவசரகால சட்டத்திற்கு ஆதரவளிப்பதென நாளை சம்பந்தன் முடிவெடுத்தால், வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என பல உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதன்பின்னர் ரிசாட் பதியுதீன் விவகாரம் ஆராயப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதாக தெரிவித்தனர். சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் போன்றவர்கள் அந்த நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள்.

எனினும், மாவை சேனாதிராச அதை ஏற்கவில்லை. ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் ஆதரிக்கக்கூடாது என்றார். எனினும், ஏனைய உறுப்பினர்கள் அதில் உடன்படவில்லை.

இந்த விவகாரம் பேசப்பட்டபோது, சிவமோகன் எம்.பி, நழுவல் வழுவலாக பேசி எந்த நிலைப்பாட்டையும் கூறாமல் இருந்தார். சிறிதரன் எம்.பி இந்த விவாதத்தில் கலந்துகொள்ளவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here