மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி: தனிப் பெரும்பான்மையை நோக்கி நகர்கிறது!

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது.

283 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11ம் திகதி முதல் மே 19ம் திகதி வரை நடந்தது. 542 தொகுதிகளில் 273 இடங்களில் பாஜகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் போட்டியிட்டன. 7,928 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிட்டனர். இதில் 724 பெண்கள் போட்டியிட்டனர்.

பாஜக 437 வேட்பாளர்களையும், காங்கிரஸ் கட்சி 421 வேட்பாளர்களையும் களமிறக்கியது. இந்திய வரலாற்றிலேயே காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் அதிகமாக வேட்பாளர்களை பாஜக நிறுத்தியது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி சேர்ந்து அமைத்த மெகா கூட்டணிக்கு பாஜக கடும் போட்டி அளித்து வருகிறது. உ.பி.யில் பாஜக 54 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. மெகா கூட்டணி 24 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றிலும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இதேபோல 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் பாஜக 21 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையாக போட்டி தொடக்கத்தில் இருந்தே இருந்து வந்தது. இதில் சமீபத்தில் கிடைத்த முடிவுகளின்படி திரிணமூல் காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும், பாஜக 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் கடந்த முறையைப் போன்றே இந்த முறையும் பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 7 தொகுதிகளும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

உ.பி.மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 1 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 17 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஒரு லட்சத்துக்கு 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

திருவனந்தபுரத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகர் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here