ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது இலங்கை!

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூவிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இதன்மூலம் 1-0 என தொடரையும் கைப்பற்றியது.

உலகக்கிண்ண தொடருக்கான முன்னோடி தொடரில் இலங்கையணி, ஸ்கொட்லாந்துடன் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடியது. முதல்போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இலங்கையணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன, விஷ்வ பெர்ணான்டோ களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்காக 22.1 ஓவர்களில் 123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். திமுத் கருணாரத்ன ஒருநாள் ஆட்டங்களிற்கு லாயக்கில்லை என்ற விமர்சனம் அவரை உசுப்பேற்றியதோ என்னவோ, தனது அதிகபட்ச ஒருநாள் ஓட்டத்தை நேற்று பெற்றார். அவிஷ்க பெர்னாண்டோ 78 பந்துகளில் 74 ஓட்டங்கள் (5 பௌண்டரி, 3 சிக்சர்) பெற்று முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். திமுத் கருணாரத்ன 88 பந்தில் 77 ஓட்டம் ( 7 பௌண்டரி) பெற்றார். ஸ்ரைக் ரேற் 87.5.

பின்னர் களமிறங்கிய குசல் மென்டிஸ் 56 பந்தில் 66 ஓட்டங்கள் ( 4 பௌண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.

பின்வரிசையில் திரிமன்ன 40 பந்தில் 44 ஓட்டங்கள் பெற்றார். இலங்கையணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களை பெற்றது.

323 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஸ்கொட்லாந்து ஆடியபோது, 27 ஓவர் முடிவில் மழை குறுக்கியது. அப்போது 3 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை பெற்றிருந்தது. 90 நிமிடம் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, 7 ஓவர்களில் 103 ஓவர்களை பெற வேண்டுமென டக்வேர்த் லூவிஸ் முறைப்படி தீர்மானிக்கப்பட்டது.

எனினும் 33.2 ஓவர்களில் 199 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டையும் ஸ்கொட்லாந்து இழந்தது. முன்சே 61, குரஸ் 55 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் நுவான் பிரதீப் 34 ஓட்டங்களிற்கு 4 விக்கெட், லக்மல் 55 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் நுவான் பிரதீப்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here