ரிசாட் விவகாரம்: சம்பந்தரின் முடிவை ஏற்க மறுக்கும் கூட்டமைப்பு எம்.பிக்கள்!

ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் புயலை கிளப்பி விட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க மாட்டோம் என இரா.சம்பந்தனால், ரிசாட் பதியுதீனுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டதன் பிந்தைய நிலைமையில், ஒரு தொகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணிக்கவும் தயாராகி வருகிறார்கள் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

ரிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை ஐ.தே.கவிற்குள்ளும் புயலை கிளப்பியுள்ளது. ஐ.தே.கவின் முக்கியஸ்தர் நவீன் திசநாயக்க தலைமையிலான ஒரு தொகுதி எம்.பிக்கள், பிரேரணையை ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

இந்த சிக்கலை சமாளிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இறங்கியுள்ளார்.

ஐ.தே.கவை போலவே கூட்டமைப்பிற்குள்ளும் இந்த விவகாரத்தில் இரண்டுபட்ட நிலைமை காணப்படுகிறது. ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, சி.சிறிதரன் ஆகியோர் உள்ளனர். சிவமோகன், சரவணபவன் எம்.பிக்கள் இந்த விவகாரத்தில் பிடிகொடுக்காமல் செயற்படுகிறார்கள். ரிசாட் தொடர்பாக எம்.பிக்களிடம் அதிருப்தியிருப்பதாக தெரிவித்த சித்தார்த்தன் எம்.பி, கட்சியாக எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம் என தெரிவித்திருந்தார். ஏனைய அனைத்து எம்.பிக்களும் ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, கோடீஸ்வரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் ஆகியோர் இதில் ரிசாட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உள்ளனர்.

நேற்று இரா.சம்பந்தனை தொலைபேசியில் அழைத்து ரிசாட் ஆதரவு கோரியதும், அதற்கு சம்பந்தன் பச்சைக்கொடி காட்டியதும் செய்திகளாக வெளி வந்துள்ளன. இதன் பிந்தைய சூழலில் எம்.பிக்கள் சிலர் கறாரான முடிவை எடுத்துள்ளனர்.

ரிசாட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள எம்.பிக்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தமிழ்பக்கத்துடன் பேசும்போது, பிரேரணையை எதிர்ப்பதென்று முடிவெடுத்தால் நாம் வாக்களிப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர். பிரதேச மக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியே இந்த தீர்மானத்தை எடுப்பதாக தெரிவித்தனர்.

அடுத்த சில நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடக்குமென எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்த விவகாரம் ஒரு சர்ச்சையை ஏற்படுத்துமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here