‘அப்பிளை புறக்கணிப்போம்’: சீனாவில் தேசபக்தியாக மாறும் பிரசாரம்!

சீனாவில் ஹூவெய் நிறுவனத்திற்கு, அமெரிக்காவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க தயாரிப்பான ‘அப்பிள் மொபைல் போன் மற்றும் அதன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்’ என்ற பிரசாரம் சீனாவில் வலுப்பெற்றுள்ளது. இது சீனர்களின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விவகாரமாக மாறியுள்ளது.

சமீபகாலமாக அமெரிக்காவில் தொலை தொடர்பு தொழில்களில், சீன நிறுவனங்களின் பங்கு கணிசமாக உள்ளது. இந்நிறுவனங்கள் அமெரிக்கர்களின் தகவல்களை திருடுவதாக அந்நாட்டு அரசு சந்தேகிக்கிறது.

சீன நிறுவனங்களுக்கு நெருக்கடி தரும் வகையிலும், அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படுவதை தடுப்பதற்காகவும், தேசிய அவசர நிலை பிரகடனத்தில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

சில அன்னிய நாட்டு நிறுவனங்களால், அமெரிக்க தொழில்நுட்பம் திருடப்படுவதால், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்கும் வகையில், தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, சீனா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்களை, அமெரிக்க நிறுவனங்கள் இனி பயன்படுத்த முடியாது. இது சீனாவின் ஹூவெய் நிறுவனத்தை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.

இதனால் சீனாவின் ஹூவெய் நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன அரசு, சீன நிறுவனங்களை துன்பப்படுத்துவதை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளதுடன், ஹூவெய் நிறுவனத்திற்கு துணை நிற்போம் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு பிரச்னைகளை சரி செய்ய தயாராக உள்ளதாக ஹூவெய் நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில் சீனாவில், அப்பிள் நிறுவனத்தை (அமெரிக்க நிறுவனம்) புறக்கணிப்போம் என்ற பிரசாரம் வலுப்பெற்றுள்ளது. அந்நாட்டில் சமூக வலைதளமான வெய்போவில் அப்பிள் நிறுவனத்திற்கு எதிராகவும், டிரம்பிற்கு எதிராகவும் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஒருவர், வர்த்தக போரை பார்ப்பதற்கு வெட்கமாக உள்ளது. பணம் கிடைத்ததும் எனது ஐபோனை மாற்றிவிடுவேன் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ஹூவெய் நிறுவன மொபைல் சிறப்பாக உள்ளது. இது ‘அப்பிளை’ எட்டு துண்டுகளாக நறுக்கிவிடும் எனக்கூறியுள்ளார். மற்றொருவர், அப்பிள் போனை விட ஹூவாய் போன்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இது போன்ற சிறப்பான மொபைல் இருக்கும் போது, அப்பிளை பயன்படுத்துவது ஏன் என கேட்டுள்ளார். இதேபோல் ஏராளமான சீனர்கள், ஹூவெய் நிறுவனத்திற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

‘அப்பிளை புறக்கணிப்போம் ‘ என்ற பிரசாரம் நடப்பது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஐபோன்கள் விற்பனையை குறைக்கவும், ஹூவெய் நிறுவன மொபைலை தங்கள் ஊழியர்கள் வாங்கவும், சீன நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை வழங்கின. 20க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஹூவெய் தயாரிப்புகளை வாங்குவதாக அறிவித்தன. கடந்த டிசம்பர் மாதம், அப்பிள் போனை வாங்கவும், விற்கவும் சீன நீதிமன்றம் ஒன்று தடை விதித்தது. இதனையடுத்து, அந்நாட்டிற்கு என சிறப்பு அப்டேட்டை ஐபோன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here