3 வருட நண்பனின் காதலை ஏற்கலாமா?- மனமே நலமா?

உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்

பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்

பெயர் குறிப்பிடவில்லை
ஆரையம்பதி

நான் 22 வயதுப் பெண். இப்போது படித்துக் கொண்டிருக்கின்றேன். என்னுடன் படிக்கும் ஒருவன் எனக்கு 3 வருடமாக நல்ல நண்பனாக இருக்கிறான். இப்போது கொஞ்ச காலமாக என்னைக் காதலிப்பதாகச் சொல்கின்றான். எனக்கு விருப்பமில்லையென்றால் என்னை விட்டு விலகி விடுவதாகவும் கூறுகின்றான். என்னால் அவனைக் காதலிக்கவும் முடியவில்லை, அவனைப் பிரியவும் முடியவில்லை. மிகவும் குழம்பிப் போயுள்ளேன். நான் என்ன செய்வது?

பதில்- அன்பு மகளே! உம்முடன் 3 வருடமாக நல்ல நண்பனாக இருந்த ஒருவன் இப்போது உம்மை காதலிப்பதாக கூறுவது ஒரு ஆரோக்கியமான விடயமே. ஏனெனில் காதலின் அத்திவாரமே அன்பு என்பதில் இருந்துதான் ஆரம்பமாகின்றது. உமது விடயத்தில் கடந்த 3 வருடமாக நல்ல பலமாக இருந்த அன்பு என்னும் அத்திவாரம் கட்டப்பட்டுள்ளது. அதன் மீது காதல் என்னும் வீட்டை கட்டுவது நல்லதுதானே.
உம்முடன் நட்பாக பழகிய காலத்தில் உமது பல்வேறுபட்ட இயல்புகளும், பண்புகளும் ஏன் அழகு கூட உமது நண்பனுக்கு உயர்வானதாக இருந்திருக்கலாம். உண்மையில் மன அழகு அல்லது உள்ளழகு சிறப்பானதாக, உயர்வானதாக இருக்கும் போது ஒரு நல்ல ஆணுக்கு அப்பெண் மீதான உடற் கவர்ச்சியும் அதிகமாவது இயல்பே. இதுதான் உண்மையான மனித இயல்பே.

உமக்கு இன்னொரு விதமாக வியாபார நுட்பத்துடன் இதைப் புரிய வைக்கின்றேன். அப்போது உமக்கான இலாபம் புரியும். நட்பு என்றால் என்ன? அன்பு தானே. ஒரு நண்பனுடன் எமக்கு இருப்பது அன்பு என்னும் ஒன்று மட்டுமே. ஆனால் காதல் என்னும் போது எமது பண்பாட்டில் அன்பு என்பது மட்டும் அல்லவே. அன்புடன் சேர்ந்ததாக பாலியல் அல்லது காமம் என்பதும் உள்ளது. இதனால்தானே எம்மவர் பலரும் நட்பு என்பதற்கு அனுமதி வழங்கினாலும் காதல் என்று வரும் போது அனுமதிப்பதில் சங்கடப்படுகின்றார்கள். நான் விடயத்துக்கு வருகிறேன். நட்பு என்பது உங்கள் முதல் என்றால் காதல் எனும் போது முதலுடன் சேர்ந்து தரக் கூடிய போனஸ் போன்றது. யாராவது உங்களின் பணத்துக்கு போனசும் சேர்த்துத் தரும் போது வேண்டாம் என்று கூறுவது அறிவான செயலாகுமா?

எனவே சிறந்த நண்பன் காதலனாகும் போது உங்களுக்கும் போனஸ் கிடைப்பது போல. உங்கள் இருவருக்குமான இயல்புகள், கொள்கைகள், ஆர்வங்கள் பற்றியெல்லாம் ஓரளவு தெளிவான புரிந்துணர்வு இருக்கும். எனவே நண்பனைக் காதலனாக்குவது ஒரு ஆரோக்கியமான விடயமே. மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொள்ளுங்கள். உங்கள் காதலுக்கு எனது வாழ்த்துக்கள்.

எஸ்.கமலாம்பிகை (47)
முகமாலை

எனக்கு ஒரு மகன் இருக்கின்றான். க.பொ.த உ.த படிக்கின்றான். அவனது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது போல் தெரிகின்றது. இதைப் பற்றிக் கேட்டால் சந்தேகப்படுகிறீர்களா? என்று எரிந்து விழுகின்றான். இவனது நண்பர்களும் இவனைப் போல்தான் என்று அறிந்தேன். இதனால் இவனது படிப்பு கெட்டு விடுமோ என்று பயப்படுகின்றேன். ஒரு அம்மாவாக நான் என்ன செய்வது?

பதில்- அன்புச் சகோதரி! இன்று பல பெற்றோரின் கவலையும் இதுதான். தங்களின் கட்டிளம் பருவப் பிள்ளைகளின் போக்குகள் தொடர்பாக பாரிய மனச்சுமையுடன் உள்ளனர்.

உங்கள் மகனுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று கூறுகின்றீர்கள். அது தனியே பொதுவான (தொலைபேசி போன்ற) தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமாக மட்டும்தானா? அல்லது நேரடியாகவும் தொடர்பைப் பேணுகின்றாரா? என்பது பற்றி நீங்கள் கூறவில்லை. இருந்தாலும் பரவாயில்லை.

தனியே நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமாக மட்டுமே தொர்புகளைப் பேணி வருகின்றார் எனின் மாற்று ஏற்பாடுகள் மூலம் அவரின் நேரத்தை வேறு பிரயோசனமான பொழுதாக மாற்றுவதற்குரிய பிரதியீடுகளை ஏற்படுத்த முனையுங்கள். ஏனெனில் கட்டிளம் பருவம் என்பது பலமான ஒரு சக்தி. அந்த சக்தியை வீடெரிக்கவும் பயன்படுத்தலாம், விளக்கேற்றவும் பயன்படுத்தலாம். இப்படியான இளம் சந்ததியினரின் சக்தியைத்தான் இன்று பல சமூக விரோதக் கும்பல்கள் முறைகேடாகப் பயன்படுத்த முனைந்து கொண்டுள்ளனர்.

இல்லை, உங்கள் மகன் அடுத்தபடியாக நேரடியாகப் பெண்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றார் என்றால் முதலில் அவரைப் பொருத்தமான உள ஆலோசனைக்கு உடபடுத்தி பாலியல் தொற்றுநோய்களுக்கான பரிசோதனையையும் மேற்கொண்டு அந்த விதமான தொடர்புகளில் இருந்து வெளிவருவதற்கான ‘நடத்தை மாற்ற’ ஆலோசனைக்கு உட்படுத்துங்கள். முக்கியமாக அவரின் நிகழ்கால நட்பு வட்டத்தை உடனடியாக மாற்றுங்கள். பொருத்தமான இடமாற்றத்தைக் கூட ஏற்படுத்தலாம். ஏனெனில் பிழையான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவரை சரியான பாதைக்கு நகர்த்துவதற்கு வேறு முயற்சிகளும் தேவை.

சிலவேளைகளில் உங்கள் மகன் உண்மையிலேயே வாழ்க்கைத் தேர்ச்சியுள்ள, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய திறன்களையும் கொண்டுள்ள ஒருவராகவும், அதே வேளை கட்டிளம் பருவத்துக்குரிய தனித்துவமான இயல்பான எதிர்ப்பாற் கவர்ச்சியின் மகிழ்வான தருணங்களை அனுபவித்துக் கொண்டு தனது இலக்கு நோக்கிப் பயணிக்கக் கூடிய ஒரு இளைஞனாகவும் இருக்கலாம்.
எனவே எல்லாவற்றிற்கும் சிறந்த வழி உங்கள் மகனுக்கு ‘வாழ்க்கைத் தேர்ச்சி’ பற்றி அதிகூடியளவு புரிதலினை ஏற்படுத்துவதற்கான இயலுமான அனைத்து வழி வகைகளையும் உருவாக்கிக் கொடுப்பதே ஒரு சிறந்த தாயின் கடப்பாடு என்பதே எனது நிலைப்பாடு.


சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் உள்ளதா? உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளிற்கான தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.

pagetamilmedia@gmail.com 
அல்லது
0766722218

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here