கலவர காலங்களில் “உசுக்காட்டுவோர்” ஓர் அனுபவம்

பஷீர் சேகுதாவூத்

1985 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிந்த வாரங்களில் ஒரு நாள் கீழ்வரும் சம்பவமும் சம்பாசனையும் நிகழ்ந்தது.

நானும், தோழர்கள் மறைந்த ஹுசைன்,மற்றும் லத்தீப், றகுமான் ஆகியோரும் ஏறாவூர் கிராம நீதிமன்ற வீதியில் இருக்கும் பெரிய பாலத்தின் கனமான கம்பிகளின் மேல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது வீதியால் வந்த ‘அச்சிக் காக்கா’ எங்களைப் பார்த்து தம்பிமாரே இந்தத் தமுழனெல்லாம் கொல்லனுன்டா தம்பிமாரே! என்று நெறு நெறுவெனப் பல்லைக் கடித்தும், சுட்டு விரலை உயர்த்தியும், கண்ணிமைகளை அகட்டியும் புருவங்களை உயர்த்தியும் பாவனை செய்தபடி சத்தமிட்டுக் கூறினார். அப்போது அச்சிக் காக்காவுக்கு 35 வயதிருக்கலாம்.

ஊரில் “கள்ளஞ்சீனி” என்று ஒரு மகா திருடர் இருந்தார்.இவர் உள்ளூரில் களவுத் தொழில் செய்வதில்லை. வெளி ஊர்களிலும், வேறு மாவட்டஙகளிலும்,பாசிக்குடா போன்ற இடங்களுக்கு வரும் வெளி நாட்டு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும்தான் திருடுவார். இவர் தொழிலை “லாவண்யமாகச் ” செய்வார், திருடன் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் இவரின் திருட்டு என்றும் பிடிபட்டதில்லை.

திருமலையில் ஒரு பறங்கிப் பெண்ணை கத்தோலிக்கத்தில் இருந்து “இஸ்லாத்துக்கு எடுத்து” திருமணம் செய்து ஏறாவூரில் கொண்டுவந்து வைத்திருந்தார். இஸ்லாத்துக்கு வந்ததால் அந்தப் பறங்கிப் பெண் சீனிக்கு இப்போது ஹலாலால் மனைவியாகும். மார்க்கத்தின் படி ஹறாமான களவை எப்போதும் இஸ்லாத்துக்கு மாற்ற முடியாது என்பதால் சீனியைப் பொறுத்தவரை களவு எப்போதும் ஹலால்தான்.

தான், களவு, மனைவி இம்மூன்றும் எப்போதும் இனிப்புத்தான் கள்ளஞ்சீனிக்கு!

சீனிக் காக்காவில் எனக்கு எப்போதும் ஒரு மென்மையான பார்வைதான் இருந்தது. இதற்கு ஒரு பிரதான காரணமிருந்தது. இவர் ஏறாவூர் பொலிஸில் “நல்ல தொடர்பைப்” பேணிவந்தார். அக்காலத்தில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில்தான் அதிரடிப்படை முகாமும் அமைந்திருந்தது. பகல் பொழுதுகளில் பெரும் பங்கை காவல் நிலையத்தில்தான் கழிப்பார். பொறுப்பதிகாரியோடு நல்லுறவு கொண்டிருந்தார். அது என்ன வடிவத்திலான நல்லுறவோ எனக்குத் தெரியாது.

என்னைப் பிடிப்பதற்காக பொலிஸ் திட்டமிடும் நாட்களில் ‘சீனியர்’ பெரும்பாலும் எங்களது பகுதிக்கு வந்து அல்லது செங்கலடி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, மயிலம்பாவெளி போன்ற ஊர்களிலெல்லாம் அலைந்து திரிந்தாயினும் என்னைக் கண்டுபிடித்து ” தம்பி உன்ன தேடி இன்டக்கி ஒங்கட ஊடு துடக்கம் நீ திரியிற இடமெல்லாம் சுற்றி வளைப்பு செய்யப்போறானுகள் நீ மெல்ல மாறு ” என்று தகவல் தந்துவிடுவார். இதனால்தான் இவர் மீது எனக்கு ஒரு வகை அன்பு இருந்தது.

ஒரு நாள் நானும் தோழர்களும் நள்ளிரவு நேரம் காட்டுப்பள்ளி வீதியால் போய்க்கொண்டிருந்த போது சூஃபி மன்ஸிலுக்கு அருகாமையில் அமைந்திருந்த “மல்கருடைய” திறந்த ஓடாவி பட்டடைக்குள் சுமாரான உயரத்தில் அடுக்கப்பட்டிருந்த மரப்பலகைகளின் மேல் பாய் போட்டு சீனி படுத்திருப்பதைக் கண்டோம். அவர் சேர்ட்டைக் களற்றி பக்கத்தில் மடித்து வைத்திருந்தார்.

சீனியை நகைச்சுவைக்காக மிரட்டும் நோக்கோடு மெல்ல அவரருகில் சென்று நெற்றியில் விரலை வைத்து “ஹேன்ட்ஸ் அப் ” என்று சத்தமிட்டேன். திடுக்கிட்டு எழுந்த சீனி எதிர்பாராதவிதமாக பாய்க்கு கீழே வைத்திருந்த பளபளக்கும் பெரிய வாள் ஒன்றைக் கையில் எடுத்தவாறு செக்கன் கணக்கிலான நேர இடைவெளியில் துள்ளி எழுந்து நின்றார். அடுத்த செக்கன் இடுப்பில் இருந்த பிஸ்டலை உருவி சீனியின் நெஞ்சுக்கு நேராக நீட்டினேன். நிலைமை பகடியிலிருந்து கறாராக மாறியது.

மெல்லிய வெளிச்சத்தில் சீனி என்னை அடையாளம் கண்டுகொண்டார். டேய் தம்பி வசிறு நீயாடா? எத்துன தரன்டா நாங் உன்ன அவனுகள்ட்ட இருந்து காப்பாத்தி இரிக்கன் என்ன சுட்றாதடா என்றார் சீனி. கறாரான நிலைமை தணிந்ததாயினும் பகடியான நிலைக்கு வரவில்லை. காக்கா வாளக் கீழ வெச்சிட்டு கையை உயத்திக்கிட்டு அந்தா தெரியிற கிணத்தடிக்கு போய் நில்லு உசிரோட இரிக்கணுமிண்டா என்று நான் சொன்னேன். அப்படியே செய்தார் சீனி. ஹுசைன் வாளை எடுத்தான். சரி காக்கா போய்ட்டுவாறம் என்று சொல்லிவிட்டு புறப்படும் போது ” டேய் தம்பி நீ கைல வெச்சிரிக்கிறதப் போல ஒன்டு எனக்கும் எடுத்துத் தாடா என்று கேட்டார் சீனி. காக்கா இது போராட்டத்துக்கு நாங்க பாவிக்கம் களவெடுக்க பாவிக்கல்ல காக்கா என்று கூறிவிட்டு புறப்பட்டோம்.

அன்றிரவு எங்களுக்கு சாப்பாட்டிற்கு வழியிருந்திருக்கவில்லை. பசி வயிற்றை கிள்ளிப் பிராண்டும் போதும் சீனி திடீரென எழும்புகையில் அவரது முதுகில் ஒட்டியபடி இருந்த பல நூறு ரூபாய் தாள்களை நாங்கள் ஆச்சரியத்தோடு பார்த்ததையும் சீனியின் தந்திரத்தை வியந்ததையும் நினைந்து பேசியவாறு ஹுசைனின் மூத்த காக்கா இஸ்மாயிலின் நைட் ஹோட்டலுக்கு வந்து கடனுக்கு பராட்டா உண்டோம்.

இப்போது, தமுழனெல்லாம் வெட்டணுண்டா தம்பி என்று எங்களைப் பார்த்துச் சொன்ன அச்சிக் காக்காவின் நிதழ்வுக்குத் திரும்புவோம்.

சரி அச்சிக்காக்கா அவனுகள வெட்டத்தான் வேணும் என்று சொன்ன நான் தோழர் றகுமானைப் பார்த்து போய் அந்த வாள எடுத்துக்கிட்டு வாடா என்றேன். கள்ளஞ்சீனியிடம் பறித்தெடுத்த வாளை றகுமானின் ராத்தாவின் வீட்டில்தான் ஒழித்து வைத்திருந்தோம்.றகுமான் வாளைக் கொண்டுவந்து என்னிடம் தந்தான்.

இந்தா காக்கா வாளப் புடி, முதலாங்குறிச்சில இந்தா பக்கத்துலதாங் ராஜக்கோனின் குடும்பத்துட ஊடு இரிக்கி வா போவம் அங்க மூத்தவர் ராசதுர படுத்திருப்பாரு அவர வெட்டுவம். ஆனா ஒரு கண்டிசன் நீதான் காக்கா ராசதுரட கழுத்த வெட்டணும். நான் அவர்ர கால் ரெண்டையும் பிலமா புடிப்பன்,ஒரு கைய றகுமான் புடிப்பான், மறு கைய லத்தீபு புடிப்பான்,தலைய ஹுசைன் புடிப்பான், நீ வேற ஒன்டும் செய்யத் தேவல்ல ராசதுரட கழுத்த மட்டும் வெட்டுனாப் போதும் வா காக்கா போவம் என்று காக்காவிடம் ஒரு போடு போட்டேன்.

இல்ல தம்பி என்ன உட்றுங்க- இது அச்சி அப்பிடிச் செல்லி என்ன செய்ற காக்கா வெட்டலுவா வேணும்- இது ஹுசைன்

காக்கா சும்மா விளையாடாத நொட்டாம இந்தா வாளப் புடி தூக்கி தோழ்ல வெய் என்று உரத்த குரலில் கோபமாகக் கூறினேன். டேய்ய்ய் என்றும் அதட்டினேன். காக்கா வெலவெலத்துப் போனார்.

தமுழனுகள வெட்டணும் என்று சொன்ன வேளை இருந்த அச்சிக் காக்காவின் முகபாவனையை முன்னர் விபரித்திருந்தேன். இப்போது காக்காவைப் பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது. கண்ணீர் மல்க என்ன மன்னிச்சிக்கங்க தம்பி இனி இப்புடியெல்லாஞ் செல்லமாட்டன் என்று சொன்ன அவரைப் பார்த்து ” இப்பிடியெல்லாஞ் செல்லமாட்டன் என்டு செல்லவாணா “இப்புடியெல்லாம் யோசிக்கமாட்டன்’ என்டு முடிவெடுக்கணும் காக்கா என்று கூறி,அவருக்கு அவரது அகச் சிந்தனையை மாற்றுகிற அரசியல் வகுப்பெடுக்கத் தொடங்கினோம். காலப் போக்கில் காக்கா எங்களின் ஆதரவாளராக மாறி போராட்ட வரலாற்றில் எமக்குப் பெரும் உதவிகளைப் புரிந்தார்.இடையில் 90 களில் கொஞ்சக் காலம் ‘ஹோம் கார்ட்டாக’ வேலை செய்து வயிற்றைக் கழுவினாராயினும் எவரொருவருக்கும் “நோவினை” செய்தாரில்லை.

புரிந்துணர்வுள்ள சாமானியனான அச்சிக் காக்கா இன்றும் கூலித் தொழில் செய்பவராகவே உள்ளார். இன்னும் திருமணம் செய்யாது வாழ்கிறார். பின்னேரங்களில் தங்குமிடமாகவும் இரவுகளில் தூங்குமிடமாகவும் எனது ஏறாவூர் காரியாலயத்தையே பாவிக்கிறார். அண்மையில் காரியாலயத்தில் அவரைக் கண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

இது, சீனி மற்றும் அச்சி எனும் இரண்டு சாதாரண காக்காக்களின் கதையாயினும் இதில் இன்னும் எனக்குப் பல படிப்பினைகள் உண்டு.
சீனி 80 களின் இறுதியில் இனந்தெரியாதவர்கள் என்று வரலாற்றில் அழைக்கப்படுவோரால் கொல்லப்பட்டார்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான இந்தப் பத்தாண்டுகளில் ஈஸ்டர் தாக்குதல்களின் பின் அக்காலம் போலவே இன்றும் யாரும் எதையும் செய்துவிட்டு போடுவதற்கு- இப்போது ஒரு புதிய தலை கிடைத்திருக்கிறது.

பின் குறிப்பு:-

“பல இரகசியத் திட்டங்களுக்கு ஒன்று அல்லது சில செல்வாக்குள்ள மறைவான அமைப்புகள் காரணமாக இருக்கின்றது/ன என்ற நம்பிக்கை நவீன சதிக்கோட்பாடு எனப்படுகிறது”. ஆயினும்; பல சதிகளை எதிர்கொண்டு அழிவுகளைக் கண்ட அனுபவத்தையுடைய இலங்கை மக்கள் புதிதாக அரங்கேற்றப்படுகிற சதியையும் இனங்கண்டு முறியடித்தல் அவசியமாகும். இல்லையேல்; அழிவு நமது மக்களுக்கே அன்றி சதிகாரர்களுக்கல்ல.சதிகாரர்கள் தமது இலாபத்துக்காகவே சதிகளை அரங்கேற்றுகிறார்கள்.

♦ஈரோஸ் அமைப்பின் மூத்த போராளியும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளராகவும் இருந்த முன்னாள் எம்.பி பஷீர் சேகுதாவூத்தின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து மீள்பிரசுரம் செய்கிறோம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here