ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்த நினைத்த விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்கவும் மறுப்பு!

மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று சில வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்ந்நிலையில் இந்த வாக்குக் கணிப்பு குறித்த அநாகரிகமான மீம் ஒன்றைப் பகிர்ந்து இரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய். அவர் பகிர்ந்த மீமில், ஐஸ்வர்யா ராய் – சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் – விவேக் ஓப்ராய் உள்ள படத்தை வாக்குக் கணிப்பு என்றும், தேர்தல் முடிவுகள் என ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் – இந்தத் தம்பதியரின் மகள் ஆகியோரைக் கொண்ட படத்தையும் குறிப்பிட்டிருந்தது.

ஐஸ்வர்யா ராய் – சல்மான் குறித்த காதல் செய்திகள் 2000ம் ஆண்டு வெளிவந்தன. ஆனால் இருவரும் 2002ல் பிரிந்தார்கள். பிறகு ஐஸ்வர்யா ராய், விவேக் ஓப்ராயைக் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இது பற்றி ஐஸ்வர்யா ராய் எதுவும் பேசியதில்லை. 2007ல் அபிஷேக் பச்சனை மணந்தார் ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் உண்டு.

ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கும் இந்த மீமை விவேக் ஓப்ராயே பகிர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஹாஹா.. கிரியேட்டிவ், அரசியல் எதுவும் இல்லை. இதுதான் வாழ்க்கை“ என்று அந்த மீமைப் பகிர்ந்து விளக்கத்துடன் ட்வீட் செய்திருந்தார் விவேக் ஒப்ராய்.

ஆனால் ரசிகர்கள் பலரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோன்ற அநாகரீகமான செயலில் இறங்கவேண்டாம் என்று விவேக் ஓப்ராய்க்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையம் விவேக் ஓப்ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், மகாராஷ்டிர மகளிர் ஆணையமும் விவேக் ஓப்ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பான கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், விவேக் ஓப்ராய் இதற்கு மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில்,

அந்த மீமில் இருப்பவர்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லாதபோது அரசியல்வாதிகள் தான் இதை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் பிரச்னைகளுக்காக வேலை செய்ய மாட்டார்கள். ஆனால், பிரச்னையற்ற விஷயங்களில் அவர்கள் அரசியல் செய்ய தொடங்குவார்கள்.

மேற்கு வங்கத்தில் ஒரு சகோதரி இருக்கிறார். அவர் மீம் போடுவர்களை சிறையில் அடைக்கிறார். தற்போது அவர்கள் விவேக் ஓப்ராயை சிறையில் அடைக்க கோரிக்கை விடுக்கிறார்கள். அவர்களால் எனது படத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால், என்னை சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள்.

என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். எனக்கு மன்னிப்பு கேட்பதில் பிரச்னை இல்லை. ஆனால், நான் என்ன தவறு செய்தேன் என்று கூறுங்கள். நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன். நான் தவறு செய்ததாக எனக்கு தெரியவில்லை. அதில் என்ன தவறு இருக்கிறது. யாரோ அந்த மீமை டிவீட் செய்தார்கள். நான் அதை பார்த்து சிரித்தேன்.

மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் நோட்டீஸுக்காக காத்திருக்கிறேன். நான் தவறு ஏதும் செய்ததாக எனக்கு தெரியவில்லை. அதனால், அவர்களை சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

இதை ஏன் மிகப் பெரிய பிரச்னையாக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை? என்னை கேலி செய்யும் வகையிலான மீமை எனக்கு அனுப்பினார்கள். அந்த கிரியேட்டிவிடியை பாராட்டினேன். யாரேனும் உங்களை கேலி செய்தால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here