பாகலிலும் பயங்கர இலாபம் இருக்கு!

அதிரடியாக உச்சத்துக்கு ஏறாமலும் திடீரென அதலபாதாளத்துக்கு இறங்காமலும் நிலையாக விலை கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஒன்று பாகற்காய். கொடிவகை காய்கறியான பாகற்காய், பந்தல் காய்கறிச் செய்கையாளர்களின் கட்டாயத் தேர்வாக இருந்துவருகிறது. அதே நேரத்தில் கல்தூண் பந்தல் அமைக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவு பிடிக்கும் என்பதால், பல விவசாயிகள் பந்தல் செய்கையில் ஈடுபடத் தயக்கம் காட்டி வருகிறார்கள். பந்தலுக்காக அதிகம் செலவழிக்காமல், எளிய தொழில்நுட்பத்தில் குறைந்த செலவில் பந்தல் அமைத்துப் பாகற்காய்ச் செய்கை செய்யலாம்.

ஒரு ஏக்கர் நிலத்தில் பாகற்காய்ச் செய்கை செய்யும் விதம் பற்றி குறிப்பிடுகிறோம்.

செம்மண்ணில் பாகற்காய்ச் செய்கை செய்யும்போது நல்ல விளைச்சல் கிடைக்கும். ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். இதன் வயது 150 முதல் 160 நாள்கள் வரை. ஒரு ஏக்கர் அளவு நிலத்தில் விதைக்க 200 கிராம் விதை தேவை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் ஆட்டுப்பட்டியை அடைக்க வேண்டும். பிறகு, நிலத்தை ஆழமாக உழுது 5 தொன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, மீண்டும் உழவு செய்ய வேண்டும். 15 அடி இடைவெளியில் 3 அடி அகலம், முக்கால் அடி உயரம் என்ற அளவில் நீளமாகப் பார்கள் எடுக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்துப் பார்களின் நீளத்தை அமைத்துக்கொள்ளலாம். பாரில் இரண்டரை அடி இடைவெளியில் வரிசையாகக் குழிக்கு ஒரு விதை வீதம் நடவுசெய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பிறகு பந்தல் அமைத்துக்கொள்ள வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 15, 25 மற்றும் 45-ம் நாள்களில் களையெடுக்க வேண்டும். விதைத்த 8-ம் நாளுக்குள் விதை முளைத்துவரும். 20-ம் நாளில் கொடி வீசத் தொடங்கும். அந்தச் சமயத்தில் கொடிகளைப் பந்தலில் ஏற்றி விட வேண்டும்.

30-ம் நாளுக்குள் பந்தல் முழுவதும் பாகல் கொடிகள் படர்ந்துவிடும். 35-ம் நாளுக்குமேல் பூவெடுக்கும். 55-ம் நாளுக்குமேல் காய்கள் திரளத் தொடங்கும். 60-ம் நாளுக்குமேல் பறிப்பைத் தொடங்கலாம். ஆரம்பத்தில் விளைச்சல் குறைவாக இருக்கும். அடுத்தடுத்த பறிப்புகளில் விளைச்சல் அதிகரிக்கும்.

பாகற்காயில் வருமானக் கணக்கு 

பாகற்காய் விளைச்சல் மற்றும் வருமானம் குறித்து மல்லாவியில் பாகற்தோட்டம் செய்யும், விவசாயி சி.மாசிலாமணியிடம் பேசினோம்.  “இரண்டரை மாசத்தில் 20 முறை காய் பறிச்சதுல மொத்தம் 10,650 கிலோ பாகல் கிடைச்சிருக்கு. அதுல 900 கிலோ பாகலைக் கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 36,000 ரூபாய் கிடைச்சது. 4,950 கிலோ பாகலைக் கிலோ 30 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 1,48,500 ரூபாய் கிடைச்சது. 3,000 கிலோ பாகலைக் கிலோ 25 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 75,000 ரூபாய் கிடைச்சது. 1,800 கிலோ பாகலைக் கிலோ 20 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 36,000 ரூபாய் கிடைச்சது.

ஆக மொத்தம் 10,650 கிலோ பாகலை விற்பனை செஞ்சதுல மொத்தமா 2,95,500 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. உழவு, விதை, பந்தல், அறுவடை, வாகனக்கூலினு இதுவரை 62,000 ரூபாய் செலவாகியிருக்கு. அதுபோக மீதி 2,33,500 ரூபாய் நிகரலாபமா கிடைச்சிருக்கு. இன்னும் எட்டு, ஒன்பது பறிப்பு இருக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதுமூலமா 6,000 கிலோ பாகல் கிடைக்கும். குறைஞ்சபட்ச விலையா 20 ரூபாய்னு அது விற்பனையானாலே 1,20,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். அதுல அறுவடை, போக்குவரத்துனு 30 ஆயிரம் ரூபாய் செலவானாலும் 90 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அந்த வகையில 160 நாள்ல ஒரு ஏக்கர்ல இருந்து மொத்தமா 3,23,500 ரூபாய் லாபம் கிடைச்சுடும்” என்றார்.

மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிப்பு 

பாகற்காயில் பூக்கள் பூப்பதற்கு முன்பாகச் சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலைச்சுருட்டுப் புழு, காய்ப்புழு ஆகியவற்றின் தாக்குதல் இருக்கும். பூச்சிகள் தென்பட்டால் அவற்றைக் கட்டுப்படுத்த மூலிகைப் பூச்சிவிரட்டி மற்றும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசலைச் சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும். காட்டாமணக்கு இலை, ஊமத்தம் இலை, ஊமத்தம் காய், சோற்றுக்கற்றாழை மடல், நொச்சியிலை, வேப்பிலை ஆகியவற்றில் தலா அரைக்கிலோ எடுத்து ஒன்றாகச்சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும்.

பிறகு, இடித்த கலவையை 15 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் மூன்று நாள்கள் ஊற வைக்க வேண்டும். அக்கரைசலுடன் 250 கிராம் மஞ்சள்தூள், 1 கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றைச் சேர்த்து 7 நாள்கள் ஊற வைக்க வேண்டும். இந்த ஏழு நாள்களும் தினமும் இரண்டு வேளைகள் கலக்கி வர வேண்டும்.

இக்கரைசலை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கரைசல் எனக் கலந்து தெளிக்க வேண்டும். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்  

தலா ஒரு கிலோ அளவில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மூன்றையும் தனித்தனியாக விழுதாக அரைக்க வேண்டும். மூன்றையும் ஒன்றாகச்சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் விழுது எனக் கலந்து செடிகளில் தெளிக்கலாம். இது இலைச்சுருட்டுப்புழு, காய்புழு, அசுவினி, வெள்ளை ஈ ஆகியவற்றின் தாக்குதல்களிலிருந்து செடிகளைக் காப்பாற்றும்.

பாகலுக்கு ஊட்டம்  

விதைத்த 15-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு செடியின் தூரிலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து ஊற்ற வேண்டும். 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 25 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒவ்வொரு செடியின் அருகிலும் சிறிதளவு ஊற்ற வேண்டும்.

குச்சிப்பந்தல் 

பத்து அடி உயரம்கொண்ட சவுக்கு அல்லது விண்ணாங்கு தடிகளை 8 அடி இடைவெளியில் நிலத்தைச் சுற்றி ஊன்ற வேண்டும். தடிகளின் மேல்பகுதியில் கயிறுகொண்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும். நிலத்துக்குள் 7 அடி உயரம்கொண்ட வேப்பங்குச்சிகளை… தெற்கு வடக்காக 8 அடி இடைவெளி, கிழக்கு மேற்காக 15 அடி இடைவெளி எனக் கொடுத்து ஊன்ற வேண்டும்.

ஊன்றப்பட்ட தடிகளின் அடிப்பகுதியில் பழைய ஓயிலைப் பூசிவிட்டால், கறையான் அரிக்காது. வேப்பங்குச்சிகளை ஊன்றிய பிறகு, நாடா நூல் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பின்னி, பந்தல் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் அருகே ஏதாவது கொடிகளை நட்டு அவற்றை இழுத்து மேலாகக் கட்டிவிட்டால், பாகல் கொடிகள் அதைப் பற்றிக்கொண்டு படர்ந்துவிடும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here