விரும்பியவருடன் வாழ ஆசைப்பட்டு காதல் கணவரையும், மகனையும் கொலை செய்தேன்: கைது செய்யப்பட்ட இளம்பெண் வாக்குமூலம்


விருப்பமானவருடன் வாழ ஆசைப்பட்டு காதல் கணவர் மற்றும் மகனை கொலை செய்தேன் என இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடுஅடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் ராஜா (28). இவரது மனைவி தீபிகா (22). காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரனீஷ் (2) என்ற மகன்இருந்தார். கடந்த 16ம் தேதி ஆற்காடு தாலுகா காவல் நிலையம் வந்த தீபிகா கடந்த 13ம் தேதி முதல்எனது கணவர் மற்றும் மகனை காணவில்லை என புகார் அளித்தார். விசாரணையில் தீபிகா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியபோது ‘‘கணவர் மற்றும் மகனை நான் தான் கொலை செய்து, எனது வீட்டின் அருகே பள்ளம் தோண்டி புதைத்து விட்டேன்’’ எனக் கூறினார். பின்னர் தீபிகா காட்டிய இடத்தில் தோண்டியபோது அங்கு ராஜா மற்றும் குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, தீபிகாவையும், கள்ளக் காதலன் ஜெயராஜையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து தீபிகா அளித்த வாக்குமூலம் வருமாறு: நானும், ராஜாவும் வெவ்வேறு சமூகம் என்பதால் எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டினர். அப்போது எங்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தது ராஜாவின் நெருங்கிய நண்பரான ஆட்டோ ஓட்டுநர் ஜெயராஜ் (26) என்பவர்தான். இந்நிலையில், ராஜா மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறு செய்து வந்தார். அதிலிருந்து மீட்க, ஜெயராஜ் உதவியை நாடினேன். இதனால், நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம். எனவே, ராஜாவை விட்டு விலகி, ஜெயராஜூடன் வாழ ஆசைப்பட்டேன். இதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டோம். இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜாவை கீழே தள்ளி அருகேயிருந்த கல்லை அவர் மீது போட்டு கொலை செய்தேன்.

பின்னர், எனது மகனை நானே கழுத்தை நெரித்துக்கொலை செய்தேன். இதுதொடர்பாக ஜெயராஜூக்கு போன் செய்து வரவழைத்து நடந்த சம்பவத்தை கூறினேன். எனது வீட்டின் அருகே குப்பைக்கழிவுகளை கொட்டுவதற்காக ஏற்கெனவே பள்ளம் தோண்டியிருந்தேன். ஜெயராஜ் உதவியுடன் அந்த பள்ளத்தில் இருவரது உடல்களை புதைத்துவிட்டு, கணவர் – மகன் காணவில்லை எனக்கூறி நாடகமாடினேன் எனக்கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, 2 பேரும் ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் ஜெயராஜூம், பெண்கள் தனிச்சிறையில் தீபிகாவும் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here