ரிசாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை: தமிழ் எம்.பிக்கள் என்ன முடிவெடுப்பார்கள்?

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணி எம்.பிக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றியளிக்குமா, தோல்வியடையுமா என்ற பரபரப்பான கேள்விக்குள், தமிழ் பேசும் எம்.பிக்கள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்ற பரவலான எதிர்பார்ப்பு உள்ளது.

ரிசாத் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம் என்பது, தனியே இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதல்ல. ஆழமான அரசியல் முடிச்சுக்களையுடையது.

ரிசாத் மீது கடந்த சில வருடங்களாகவே சிங்கள பெரும்பான்மை மனங்களில் எதிர்ப்புணர்வு விதைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தக, குடிப்பெருக்கம் மற்றைய இனங்களுடன் உள்ளார்ந்த மோதலை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவுதான் ரிசாத் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தென்னிலங்கை மக்களின் உள்ளார்ந்த சாதக நிலைப்பாடு.

மறுவளமாக, குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்படாத நிலைமையில் ரிசாத் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ் தரப்பு ஆதரிப்பது, ஒரு அரசியல் கறையாகவும் அமையலாம். அண்மைய சம்பவங்கள் ரிசாத்தை முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரு ஹீரோவாக உருவெடுக்க வைத்துள்ளது. இந்தநிலையில், ரிசாத்தை எதிர்த்து தமிழ் தரப்பு வாக்களிப்பது, தமிழ் முஸ்லிம் உறவை, ஒட்ட முடியாத உறவாகவும் மாற்றலாம்.

எல்லாவற்றிற்கும் மறுபக்கம் உண்டல்லவா.

தமிழ்- முஸ்லிம் உறவை மனதில் கொண்டு தமிழ் தரப்புக்கள் எடுக்கும் முயற்சிகள் எந்தளவிற்கு பலனளித்தன, தமிழ் தரப்பின் விட்டுக் கொடுப்பிற்கு பதிலாக, முஸ்லிம் தரப்புக்கள் எந்தளவிற்கு விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டன என்பதும் பெரிய கேள்விதான். கிழக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களிற்காக தமிழ் தரப்பு விட்டுக் கொடுத்தாலும், முஸ்லிம்களின் வர்த்தக, குடி, நில பரப்பலை எதிர்கொள்ள முடியாமல் தமிழ் சமூகம் பெரும் அதிருப்தியுடன் இருக்கிறது.

இதன்விளைவுதான், ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மட்டக்களப்பு எம்.பி வியாழேந்திரன் கையொப்பமிட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் எம்.பிக்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என எல்லா தரப்புக்களுடனும் பேசினோம். அதனடிப்படையில் அவர்களின் நிலைப்பாடுகளை இங்கு தொகுத்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் கட்சியாக இந்த விவகாரத்தை பேசி முடிவெடுக்கவில்லை. இப்படியான முக்கிய விவகாரங்களில் கட்சியாக பேசி முடிவெடுக்கும் வழக்கம் கூட்டமைப்பிற்குள் கிடையாது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை நோக்கி, எம்.பிக்களை அழைத்து செல்வார்கள்.

ரிசாத் தொடர்பான பகிரங்க எதிர்ப்புணர்வை கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். ஆனால், அப்படி பகிரங்கமாக எதிர்த்தவர்கள் கட்சிக்குள்ளும் அதே நிலைப்பாட்டை வலியுறுத்துவார்கள் என சொல்வதற்கில்லை. கூட்டமைப்பின் ஓரிரண்டு எம்.பிக்கள் ரிசாத்துடன் வர்த்தக உறவை வைத்திருப்பதாக அரசல்புரசலாக பேச்சுண்டு. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அதிலொருவர் ரிசாத்தின் உச்சபட்ச எதிரி போல வெளியில் காட்டிக் கொள்வார்.

வேலைவாய்ப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட தமது கோரிக்கைகள் எதையும் ரிசாத் கணக்கிலெடுக்கவில்லையென்ற அபிப்பிராயம் அனேகமான கூட்டமைப்பு எம்.பிக்களிடம் உள்ளது. மாறாக, தமிழ் பகுதிகளில் அவர் ஆழமாக ஊடுருவுகிறார் என்றும் நினைக்கிறார்கள். அதனால் சுமார் 6 வரையான உறுப்பினர்கள் கொஞ்சம் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சித்தார்த்தன், சீ.யோகேஸ்வரன் போன்றவர்கள் அதில் முக்கியமானவர்கள்.

சரவணபவன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிறிநேசன், துரைரட்ணசிங்கம் போன்றவர்கள் எந்த அப்பிராயத்தையும் கொண்டிருக்கமாட்டார்கள். ஏனையவர்கள் ரிசாத் ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். அதனால் கூட்டமைப்பு இரண்டு தெரிவுகளையே எடுக்க வாய்ப்பு. 1. நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பது. 2. வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் விடுவது.

ஈ.பி.டி.பி

ஈ.பி.டி.பி கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணியின் பங்காளி. கூட்டு எதிரணியுடனும் நெருக்கமாக இருக்கிறது. ஆனால் ரிசாத் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்க்கவே அதிக வாய்ப்புள்ளது. ரிசாத் மீதான சில குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம் மக்களை அவமதிப்பதை போல தோன்றுவதாக உள்ளது என்ற அப்பிராயம் ஈ.பி.டி.பியிடம் உள்ளது. அதனால் கூட்டமைப்பை போலவே நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பது, வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் விடுவது என்ற இரண்டில் ஒரு முடிவைத்தான் ஈ.பி.டி.பி எடுக்கும்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடந்த அனேக வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் கன்னாபின்னாவென விமர்சித்தது. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அந்த வாக்கெடுப்புகளில் எதிர்த்து வாக்களிக்கவில்லை. வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலே தவிர்த்தார்.

ஆனால், இம்முறை ரிசாத் விவகாரத்தில் ஏதாவது முடிவெடுக்கலாமென ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பில் யோசனையுண்டு. குறிப்பாக ரிசாத் மீதான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை என்று கட்சி கருதுவதாக தெரிகிறது. ஆனால், தடாலடியாக முடிவெடுக்காமல் யோசித்து நடக்கலாமென்றும் கருதுகிறது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இரண்டிலொரு முடிவெடுக்கலாம். 1. வழக்கம்போல வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் விடுவது. 2. ஆதரவாக வாக்களிப்பது.

அங்கஜன் இராமநாதன்

சுதந்திரக்கட்சி என்ன முடிவெடுக்கிறது என்பதை விட, கட்சியின் தமிழ் எம்.பி அங்கஜன் இராமநாதன் என்ன முடிவெடுப்பார் என்பதும் சுவாரஸ்யமானது. காரணம், ரிசாத் பதியுதீனும், அங்கஜன் குடும்பமும் வர்த்தக பங்காளிகளாக உள்ளதாக பேச்சுண்டு. குறிஞ்சாத்தீவு உப்பளத்திலும் இரண்டு தரப்பும் சேர்ந்தே முதலிடவுள்ளன. இந்தநிலையில் ரிசாத் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக அங்கஜன் வாக்களிக்க மாட்டார்.

சுதந்திரக்கட்சியும் ஆதரித்து வாக்களிக்குமா என்பது கேள்விக்குறிதான். இன்னும் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஒருவேளை சு.க ஆதரவளித்தாலும், அங்கஜன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விடவே அதிக வாய்ப்புண்டு.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here