மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கரைசல்! 

மேம்படுத்தபட்ட நுண்ணுயிர்க் கரைசல் தயாரிக்கும்முறை இதுதான். 10 அடி நீளம், 4 அடி உயரம், 4 அடி அகலம் என்ற அளவில் சிமென்ட் தொட்டி கட்டிக்கொள்ள வேண்டும். தொட்டியின் அடியில் கூழாங்கற்களைப் பரப்பி அதன்மேல் நைலோன் வலையைப்போட்டு இழுத்துக்கட்டிக்கொள்ள வேண்டும். வலையின் மேல் 4 அங்குல உயரத்துக்கு மணலைக் கொட்டிப் பரப்பிக்கொள்ள வேண்டும். தொட்டிக்குள் தலா 5 கிலோ அளவு புளிய இலை, கறிவேப்பிலை, ஆவாரஞ்செடி, எருக்கன் இலை, கத்திரிச்செடி, சோற்றுக்கற்றாழை மடல் அல்லது துத்தி இலை, சவுக்கு இலை, கிளரிசீடியா இலை என ஏதாவது ஒரு வகைப் பூ ஆகியவற்றைப்போட்டு, தொட்டியில் 90 சதவிகிதக் கொள்ளளவுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்து 50 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைத் தொட்டிக்குள் ஊற்ற வேண்டும்.

10 கிலோ ஈரமான பசுமாட்டுச் சாணத்துடன் 1 கிலோ ‘சூடோமோனஸ்’ உயிர் உரத்தைக் கலந்து ஒரு கோணிச் சாக்கினுள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று 10 கிலோ காய்ந்த பசு மாட்டுச் சாணத்துடன் 1 கிலோ ‘அசோஸ்பைரில்லம்’, 10 கிலோ எருமைச் சாணத்துடன் 1 கிலோ ‘பாஸ்போ பக்டீரியா’, 10 கிலோ குதிரைச் சாணத்துடன் 1 கிலோ ‘டிரைக்கோ டெர்மா விரிடி’ ஆகியவற்றைக் கலந்து தனித்தனியான கோணிச் சாக்கினுள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று 10 கிலோ ஆட்டு எரு, 10 கிலோ பன்றிச் சாணத்துடன் பிற உயிர் உரங்களைக் கலந்து தனித்தனியான கோணிச் சாக்கினுள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆறு மூட்டைகளையும் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரில் மூழ்குவதுபோலக் கட்டித் தொங்கவிட வேண்டும்.

தலா 10 கிலோ அளவு கனிந்த பப்பாளி, வாழை, மாம்பழம், சப்போட்டாப் பழங்கள் மற்றும் நிலத்தின் ஜீவனுள்ள மண் ஆகியவற்றைத் தனித்தனியாகக் கோணிச்சாக்கில் கட்டித் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரில் மூழ்குவதுபோலக் கட்டித் தொங்கவிட வேண்டும். தலா 5 கிலோ அளவு தேங்காய் பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு, கொள்ளுமாவு ஆகியவற்றைத் தனித்தனியாகக் கோணிச்சாக்கில் கட்டித் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரில் மூழ்குவதுபோல கட்டித் தொங்கவிட வேண்டும். இவையனைத்தும் ஒரு வாரம் ஊறினால் மேம்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கரைசல் தயார். 15 நாள்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் அளவு கரைசலைப் பாசன நீருடன் கலந்துவிடலாம். தொட்டியில் சேர்த்த பொருள்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தொட்டியில் கரைசலின் அளவு குறையக் குறைய 50 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி, அதோடு தொட்டி நிறையும் வரை தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

பிறகு, புதிதாக மூட்டைகளைப் போட்டு உருவாகும் கரைசலைத் தொடர்ந்து பயிர்களுக்குக் கொடுக்கலாம். இந்த மாதிரி தொட்டி கட்டி, தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த சுமார் 45 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here