53 ‘டொட்’போல்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி: டெல்லிக்கு ஆறுதல் வெற்றி

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 52வது போட்டியில் தொடரிலிருந்து வெளியேறிய டெல்லி டேர் டெவில்ஸிடம் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் வென்று முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்புக்காக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லியின் 162 ரன்களை விரட்ட முடியாமல் 10 ஓவர்களில் 70/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 10 ஓவர்களில் வெறும் 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 128/6 என்று முடிந்து தோல்வி தழுவியது.

210 ரன்களையெல்லாம் அனாயசமாக விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 162 ரன்களை விரட்ட முடியாமல் 70/1 என்ற நிலையிலிருந்து தோனி, பிராவோ, ரெய்னா, பில்லிங்ஸ் ஆகிய அதிரடி வீரர்களுடன் தோற்றுள்ளது?!

நேபாளத்தின் புதிர் ஸ்பின்னர் சந்தீப் லாமிச்சானே (1/21), அமித் மிஸ்ரா (2/20), ஹர்ஷல் படேல் (1/23), போல்ட் (2/20) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் குழி தோண்டினர்.

24 பந்துகளில் 58 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்பது வெகுமந்தமான பிட்சில் திறமை வாய்ந்த பந்து வீச்சை ஆடும் கடினமான நிலைமைகளில் பெரிய அளவுக்கு ஷொட்களில் ரேஞ்சும், உயர்ந்தபட்ச பேட்டிங் உத்தி இல்லாவிட்டாலும் அனுபவசாலியான, ‘கிரேட் பினிஷர்’ தோனிக்கே கொஞ்சம் டூ மச் ஆகப் போய்விட்டது. வலைப்பயிற்சியில் நாளொன்றுக்கு ஆயிரம் பந்துகளை விளையாடி தூக்கித் தூக்கி அடிக்கலாம், ஆனால் தரமான, சிக்கலான பந்து வீச்சுக்கு எதிராகவும், வெகுமந்தமான பிட்சில் ஆடுவது பற்றி உத்தி அளவில் கூர்மையடைவது என்பது வேறு விதமான கிரிக்கெட் மனநிலை வேறொரு கிரிக்கெட் கலை!!

பிராவோவுக்கு சாத்துமுறை

மேலும் டிவைன் பிராவோ மீது டெத் ஓவர் அழுத்தம் இருக்கிறதா என்று கேட்ட போதெல்லாம் நேரடியாக பதில் அளிக்காமல் சுற்றி வளைத்து பதில் அளித்து கேள்வியைத் தவிர்த்த தோனி நேற்று பிராவோவின் அழுத்தத்தை உணர்ந்திருப்பார். காரணம் ஹர்ஷல் படேல் டிவைன் பிராவோ வீசிய கடைசி ஓவரில் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டார். விஜய் சங்கர் ஒரு சிக்சர் விளாசினார். கடைசி ஓவரில் 26 ரன்கள் வாரி வழங்கினார் பிராவோ.

பிராவோவை வெளுத்துக் கட்டிய ஹர்ஷல் படேல்.  

லெந்த் பந்துகளை வீசக் கூடாது ஆனால் அதைத்தான் முதல் 2 பந்துகளில் வீசினார் பிராவோ. சிக்ஸர்கள் பறந்தது. ஒரு புல்டோஸ் வேறு வீசினார் அதுவும் சிக்ஸ். இதில். 4 ஓவர்களில் 52 ரன்கள் சாத்துமுறை நடந்தது பிராவோவுக்கு. 3 ஓவர்கள் 14 ரன்கள் 2 விக்கெட் என்று அருமையாக வீசிய லுங்கி இங்கிடி கடைசி ஓவரை திறம்பட வீச மாட்டார் என்று தோனி ஏன் நினைத்தார்? இதுதான் அனுபவம் மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லாத அபத்தப் பிடிவாத உறுதிநிலை, சுய ஏக நிச்சயவாதம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரொஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அபாய வீரர் பிரித்வி ஷாவும், ஷ்ரேயஸ் ஐயரும் இறங்கினர். சென்னையில் சாஹர், இங்கிடி தொடங்கினர். புதிய பந்தில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் கிடைத்தது, ப்ரிதிவி ஷா எப்போதும் ரன்களை அடிப்பதில் கவனம் செலுத்துபவர் அதற்கான உத்தியும் அவரிடம் உள்ளது, ஆனால் நேற்று சாஹர் அவுட்ஸ்விங் சுல்தான் என்று அழைக்கும் அளவுக்கு பந்துகள ஸ்விங் செய்தார், அப்படியும் தன் மன உந்துததலினால் ஸ்கொயர்லெக்கில் ஒரு பவுண்டரி அடித்தார் ஷா. பிறகு சாஹர் ஒரு பந்தை வேகம் குறைக்க அதனை அருமையாக பிக் செய்து மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார் ஷா. அதன் பிறகு 17 ரன்களில் ஜடேஜா பந்தை அசிங்கமாக தூக்கி அடிக்க தாக்குர் கட்சை விட்டார், அதன் பிறகும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்த ஓவரில் சாஹர் பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்து லோங் ஓனில் கட்ச் ஆகி வெளியேறினார் ஷா.

இன்னொரு முனையில் ஷ்ரேயஸ் ஐயரும் சரியாக ஆடவில்லை. ரிஷப் பந்த் இறங்கினார். ஒரு ரன் அவுட் வாய்ப்பில் தப்பி, பிறகு ஹர்பஜன் சிங்கை 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரியை பந்த் நொறுக்க 10 ஒவர்களில் 77/1 என்று மீண்டது டெல்லி. 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 38 ரன்களை பந்த் எடுத்த நிலையிலும் ஷ்ரேயஸ் ஐயர் திணறலான 19 ரன்களிலும் லுங்கி இங்கிடி வீசிய 11வது ஓவரில் வெளியேறினர், அதுவும் ஐயர், இங்கிடியை ஏதோ ஆஃப் ஸ்பின்னர் போல் ஒதுங்கிக் கொண்டு கட் ஆட முயன்று போல்ட் ஆனார். பந்த்தும் தேவையற்ற மட்டைச் சுழற்றலில் கட்ச் ஆனார்.

கிளென் மேக்ஸ்வெல் ஜடேஜாவை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று போல்ட் ஆக, அபிஷேக் சர்மா 2 ரன்களில் தாக்குர் பந்தில் நடையைக் கட்ட 14.4 ஒவர்களில் 97/5 என்று இருந்த டெல்லி அணியை விஜய் சங்கர், ஹர்ஷல் படேல் தூக்கி நிறுத்தினர். விஜய் சங்கர் ஒரு பவுண்டரி அடிக்க இங்கிடி டைட்டாக வீச 16வது ஓவர் முடிவில் 110/5 என்றே இருந்தது. பிறகு 17வது ஓவரில் தாக்குர் பந்தை சங்கர் சிக்ஸ் அடித்து ரன் குவிப்பைத் தொடங்கினார். 18வது ஓவரில் பிராவோவின் ஸ்லோ பந்தை ஹர்ஷல் படேல் பிளிக் சிக்ஸ் அடித்தார். தாக்குர் 19வது ஓவரை வீச லுங்கி இங்கிடி 3 ஓவர்கள் 14 ரன்கள் 2 விக்கெட் எனும்போது கடைசி ஓவரை அவரிடம் கொடுக்காமல் பிராவோவிடம் கொடுத்த தோனியின் கப்டன்சியை என்னவென்று சொல்வதாம்?

சிலவிஷயங்களில் தோனி முரட்டுப் பிடிவாதம் பிடித்தவர் என்பதை இந்திய அணியின் கப்டனாக இருந்த போதே பார்த்திருக்கிறோம். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல்தான் முடிவுகளை எடுப்பார். இதற்குப் பல உதாரணங்களில் ஒன்று தென் ஆபபிரிக்காவில் ஒருமுறை 80 ஓவர்கள் முடிந்து புதிய பந்தை எடுக்காமல் பழைய பந்திலேயே சணல் வெளியே வரும் வரை மேலும் 66 ஓவர்களை வீசி 146 ஓவர்களை பழைய பந்தில் வீச எடுத்த முடிவும், அதனால் வெற்றி வாய்ப்பை இந்தியா இழந்ததும். அவர் கூறிய சால்ஜாப்புகளையும் எளிதில் மறந்து விட முடியுமா என்ன?.

அது போல்தான் நேற்றைய சிறந்த பவுலரான இங்கிடியை வீச அழைக்காமல் பிடிவாதமாக பிராவோவை வீச அழைத்தது ஏன்? பிராவோ 3 ஓவர் 26 விக்கெட் இல்லை, லுங்கி இங்கிடி 3 ஓவர் 14 ரன்கள் 2 விக்கெட். யாருக்கு பவுலிங் அளிப்பார் ஒரு நல்ல கப்டன்? விளைவு பிஞ்ச் ஹிட்டரான ஹர்ஷல் படேல் 3 சிக்சர், விஜய் சங்கர் 1 சிக்சர் கடைசி ஓவரில் 26 ரன்கள், தோல்விக்குக் காரணமானது இந்த முடிவு. சங்கர், படேல் இருவரும் 36 நொட் அவுட், டெல்லி 162/5 என்று முடிந்தது.

சிஎஸ்கே தொடக்கம், விரட்டல் மந்தம்! 53 டொட்போல்கள்:

ராயுடு, வாட்சன் அனாயாச அதிரடி காட்டித் தொடங்குவதுதான் வழக்கம் ஆனால் நேற்று வாட்சன் நேற்று திணறினார். 20 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார், சிஎஸ்கேவும் முதல் 5 ஓவர்களில் 22 ரன்களைத்தான் எடுத்தது. டிரெண்ட் போல்ட் 2 ஓவர்களில் 11 ரன்கள்தான் கொடுத்தார். இதில் வாட்சனின் ஒரு புல் ஷொட் சிக்ஸும் அடங்கும்.

மீண்டும் ராயுடுதான் உத்வேகம் கொடுத்தார். ஆவேஷ் கான் வீசிய 6வது ஓவரில் முதல் பந்தை கிரீசில் நன்றாக பின்னால் சென்று வலது காலை ஒதுக்கிக் கொண்டு மிட்விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார். இறங்கி வந்து இன்னொரு சிக்ஸ், பிறகு லோங் ஓனில் ஒரு சிக்ஸ். 3 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 6வது ஓவரில் 22 ரன்கள் வர பவர் ப்ளே முடிவில் 44/0 என்று மீண்டது சிஎஸ்கே. 23 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த வாட்சன் மிஸ்ரா பந்தை லோங் ஓஃபில் கட்ச் கொடுத்தார்.

ரெய்னா இறங்கியதும் மிஸ்ராவின் முதல் பந்தையே நோண்டினார், மட்டையின் உள்விளிம்பில் பட்டு சென்ற கட்சை நழுவ விட்டார் பண்ட். பிறகு மேக்ஸ்வெல் ஒரு ஓவரை இறுக்கிப் பிடிக்க அமித் மிஸ்ராவை அடுத்த ஓவரில் ராயுடு ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்தார். ராயுடு 25 பந்துகளில் 44 என்று ஒரு முனையில் பிரமாதமாக ஆட மறுமுனையில் போராட்டம் தொடர, 9 ஓவர்களில் 62/1 என்று இருந்தது சிஎஸ்கே.

இந்நிலையில் ஹர்ஷல் படேலை சிங்கிள் தட்டி விட்டு ராயுடு 28 பந்துகளில் இன்னொரு ஐபிஎல் அரைசதத்தை எடுத்தார்.ஆனால் அதே ஓவரில் 50 ரன்களில் படேல் ஓஃப் கட்டரை கொடியேற்றி மேக்ஸ்வெலிடம் கட்ச் ஆனார். நேபாள் புதிர் ஸ்பின்னர் லாமிச்சானே தோனிக்கும் ரெய்னாவுக்கும் கிடுக்கிப் பிடி ஓவரை வீச 2 ஓவர்களில் அவர் 8 ரன்களைத்தான் கொடுத்தார். அன்று பவன் நெகியை இறங்கியவுடன் சிக்சர்களாக வெளுத்துக் கட்டிய தோனி லாமிச்சானேவை அடிக்க வேண்டியதுதானே. மேக்ஸ்வெல் வீசிய 12வது ஓவரி ரெய்னா, தோனி ஆகியோர் தலா 1 பவுண்டரி அடிக்க 12 ஓவர்கள் முடிவில் 86/2 என்று தோனி, ரெய்னாவுடன் சிஎஸ்கே தோற்கும் என்று யாராவது நினைப்பார்களா?

மிஸ்ரா வீசிய ஓவரில் அடிக்கவே முயற்சி செய்யவில்லை சிங்கிள்களாக எடுக்க 4 ரன்கள்தான் 13வது ஓவரில் வந்தது, ஆனால் தோனி டி20 கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். 18 பந்துகளில் ட்ராப் கட்சுடன் 15 எடுத்த ரெய்னா லாமிச்சானே பந்தை மிட்விக்கெட்டில் கட்ச் கொடுத்து வெளியேறினார். தோனி இறங்கி வந்து இறங்கி வந்து பந்தை சிங்கிளுக்குத்தான் அடிக்க முடிந்தது. லாமிச்சானே ஓவரில் 2 ரன்கள்தான் வந்தது பிளஸ் ரெய்னாவின் விக்கெட். 15வது ஓவரில் சாம் பில்லிங்ஸ் 1 ரன்னில் மிஸ்ராவின் பந்தை ஸ்வீப் ஆட டாப் எட்ஜ் ஆகி கட்ச் ஆனார். 10 ஒவர்களில் 70/2 என்ற நிலையிலிருந்து 15 ஓவர்களில் 94/4. தோனி, ரெய்னா, சாம் பில்லிங்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும், மிஸ்ரா மற்றும் அனுபவமற்ற லாமிச்சானே வீசியும் 5 ஓவர்களில் 24 ரன்கள்தான் வந்தது!!

ஜடேஜா இறங்கியவுடன் லாமிச்சானேவை சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 11 ரன்களை அவர் கொடுக்க 4 ஓவர்களில் 21/1 என்று முடித்தார் லாமிச்சானே. தோனி 16 பந்துகளில் 13. ஜடேஜா 5 பந்துகளில் 11. 4 ஓவர்களில் 58 ரன்கள் தேவை. ஆனால் 16வது ஓவரில் தோனி 2 டொட்போல்கள் ஜடேஜா ஒரு டொட்போல் 3 ரன்கள்தான் வந்தது, ஹர்ஷல் படேல் மிக அருமையாக வீசினார். போல்ட் வந்தார் தோனி 2 டொட்போல்கள். அடுத்து ஓவர் த்ரோவில் 3 ரன்கள். தோனிக்கும் அழுத்தம் கூடியது. எல்லா போட்டிகளிலும் நாம் நினைக்கும் போது சிக்ஸ் அடித்து வெற்றி பெற முடியுமா? அடிக்க வேண்டிய பந்துகளை அடிக்க வேண்டும், இல்லையெனில் பவுலர்களை தவறிழைக்க வைக்க வேண்டும், நினைத்த போது சிக்சர்கள் வரும் என்பதற்கு போல்ட் பவுலர் அல்ல மிக அருமையான அந்த ஓவரில் அவர் தோனியை வீழ்த்தினார். 23 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் ஐயரிடம் கட்ச் ஆகி வெளியேறினார். இத்துடன் மட்ச் முடிந்தது என்றே கூற வேண்டும்.

பிராவோ 1 ரன்னில் வெளியேறி மறக்க வேண்டிய ஒரு போட்டியாக இது அமைந்தது. ஜடேஜா 18 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 27 நொட் அவுட். சிஎஸ்கே இன்னிங்ஸில் மொத்தம் 53 டொட்போல்கள். டெல்லி அணியும் டொட்போல்கள் விட்டதில் குறைவில்லை 49 டொட்போல்கள், ஆனால் அந்த அணியின் ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட் வெற்றியை தீர்மானித்தது.

சிஎஸ்கே 128/6 என்று முடிந்தது. டிரெண்ட் போல்ட் 20 ரன்களுகு 2 விக்கெட்டுகளையும் மிஸ்ரா 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஹர்ஷல் படேல் தேர்வு செய்யப்பட்டார். ராயுடு, இங்கிடி தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் தேறவில்லை. சிஎஸ்கே ஒன்று விமரிசையாக வெற்றி பெறும், இல்லையெனில் எளிதில் வெல்ல வேண்டிய போட்டிகளில் சொதப்பலாக தோல்வியடையும். இடைப்பட்ட நிலையே அந்த அணியின் ஆட்டத்தில் இல்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here