அந்திய மீட்பர்களை விடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைப்போம்: முள்ளிவாய்க்கால் பிரகடனம்!


மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் இறுதியில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்பட்டது.

அந்த பிரகடனம் இணைக்கப்பட்டுள்ளது.

மே 18 பிரகடனம்

பேரன்பிற்குரிய உறவுகளே வரலாற்றின் வழிகளில் தமிழ் இனப்படுகொலை உச்சம் தொட்ட நாட்களின் தசாப்தத்தின் நிறைவில் எம் உறவுகள் துடிதுடிக்க கொல்லப்பட்ட மண்ணில் கனத்த இதயத்துடன் அவர் நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்.
தமிழர்களுக்கு எதிராக சிங்கள-பௌத்த சிறீலங்கா அரசு வரலாற்றில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொடுலையை கட்டம் கட்டமாக அரங்கேற்றி வந்துள்ளது. இவ் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் அதிஉச்சத்தை அடைந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட எமது தொப்புள்கொடி உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். கொல்லப்பட்ட எமது உறவுகளின் கனவுகளை நினைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒரு தசாப்தத்தை நினைவுகூரும் ஒட்டுமொத்த தமிழினம் அவலங்களை மட்டும் நினைவு கூரவில்லை. சிங்கள–பௌத்த சிறிலங்கா அரசின் அடக்குமுறைக்கெதிராக தமிழினம் வெகுண்டெழுந்த வரலாற்றையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களையும், கூட்டு உரிமைக்கான தியாகத்தையும் நினைவு கூருவது வரலாற்றுக் கடமை.

தமிழர் உரிமைக்கான போராட்டத்தை சிறிலங்கா அரசு பயங்கரவாத முத்திரை குத்தி அதன் நியாயத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் கேள்விக்குட்படுத்தி வந்துள்ளது. சர்வதேச மயப்படுத்தப்படுத்தப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்தினூடு ஆயதப் போராட்ட வடிவம் மௌனிக்கப்பட்டது. பின் முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பின் பின் தமிழர் போராட்ட வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன. பின் முள்ளிவாய்க்கால் தசாப்தத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது. தமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், வன்புணரப்பட்டார்கள். பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள். தமிழர்கள் வந்தேறு குடிகளாக சித்தரிக்கப்பட்டு சிறிலங்கா சிங்கள-பௌத்ததேசம் அது சிங்கள-பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது என காலணித்துவத்தில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசு நவ காலணித்துவத்தை கட்டமைத்தது. இது தமிழினத்தின் ஒட்டுமொத்த இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டி தமிழர்கள் ஒரு தசாப்தகாலமாக ஐ.நாவின், சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ளார்கள். நடந்தேறிய அநீதிகளையும், உரிமைமீறல்களையும் விசாரிப்பதற்கான சர்வதேசநீதி விசாரணை இன்னும் ஆரம்பித்தாகத் தெரியவில்லை.

சிறிலங்கா அரசு பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள-பௌத்தமயமாக்கத்தையும், இராணுவ மயமாக்கத்தையும் விஸ்தரித்து இராணுவ இருப்பை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழர்களின் பூர்வீகநிலங்கள் படைத்தரப்பாலும், மகாவலி அபிவிருத்தி திட்டத்தாலும்,தொல்லியல், வனவளத் திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர் மத்தியில் சிறிலங்கா அரசு பயத்தை தக்கவைத்துக் கொண்டு உளவியல் யுத்தம் செய்துகொண்டிருக்கின்றது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தமாகியும் கைதுகளும், எச்சரிக்கைகளும், மிரட்டல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன.

பேச்சுரிமைக்கான வெளி நசுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒருதசாப்தம் நிறைவடைந்தும் நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. நினைவு கூருவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை. நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்படுவது உண்மையை மறுப்பதும் மறைப்பதுமாகும். சிறிலங்கா அரசு மறுப்பு வாதத்தை நிறுவனமயப்படுத்தி உண்மைகளை வரலாற்றில் மறுத்து வந்துள்ளது. சாட்சியங்களை பொய்யர்களாக்கி அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின், கையளிக்கப்பட்டவர்களின் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்தும் வெற்றிவீரர்களாக உலா வருகின்றனர்.

பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தசாப்தத்தில் ஒன்று கூடியுள்ள தமிழ் மக்களாகிய நாங்கள் நினைவுகூரலை அணி திரட்டலாக மாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். அந்திய மீட்பர்களை விடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைத்து, நினைவு கூரலை சமூக இயக்கமாக மாற்றி சபதம் செய்வோம். எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் கல்லறைகளின் மீது சத்தியம் செய்வோம்.

 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிவேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த
 தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரியவர்கள் என்பதையும் தமிழர்கள் தனித்துவமான இறையாண்மையினதும்  ஒருபோதும் பாரதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் தமிழர்கள் சார்பில் கோர
 தமிழர் இனஅடையாளத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை தடுக்க

 தமிழர் சமூக  அமைப்புக்களை பலப்படுத்தி விடுதலைக்காக முனைப்புடன் உழைக்க

மக்கள் பலத்தை நம்பி நினைவுகூரலை போராட்ட வடிவமாக, சமூக இயக்கமாக மாற்ற வேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அடக்குமுறைக்குள் வாழும் சமூகத்திற்கு நினைவுகூரல் ஒரு போராட்ட வடிவமே தமிழ்த் தேசிய நினைவுத்திறம் அடக்குமுறைக்கெதிரான ஊடகம் என்பதை நினைவிற் கொண்டு உறுதி பூணுவோம் தமிழர் உரிமையை வென்றெடுப்பதற்கான பயணிப்பில் இணைவோம்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here