மே 18- ஒரு தசாப்தம்!

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.

சர்வதேச, பிராந்திய வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட மறுத்த ஒரு போராட்ட அமைப்பு, அந்த சக்திகளின் முழுமையான ஆசீர்வாதத்துடன் இன்று முழுமையாக அழிக்கப்பட்டது. சுமார் 3 தசாப்தங்களாக ஆயுத வடிவமாக பரிமாணம் பெற்றிருந்த தமிழர் போராட்டம் இன்று முழுமையாக அழிக்கப்பட்டது.

பயங்கரவாதம் என்ற உலகளாவிய கோசத்தின் கீழ், ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரும், கதறலும் உப்புக்காற்றில் கரைந்து போனது. உலகமே ஒரு கையளவாகி விட்டதாக கூறப்பட்ட காலத்திலும், தமது கண்ணீரும், கதறலும் யாருடைய காதுகளையும் எட்டாமல் அந்தரித்து உயிரிழந்த ஆயிரக்கணக்கான ஆத்மாக்களை நெஞ்சிருத்தி நினைவுகொள்ளும் நாள் இது.

நான்கு பக்கமும் உப்பு நீர். நடுவே ஒரு குருதியாறு என தமிழர்களின் மகத்தான கனவுகள் இன்று முடிவடைந்தன.

இலங்கைத்தீவில் ஆயுதப் போராட்டத்தை இல்லாமல் செய்து, மிதவாத தலைமைகளின் கீழ் புதிய தீர்வொன்றை எட்டிவிடலாம் என்ற பிராந்திய, சர்வதேசசக்திகளின் நோக்கமும் நிறைவேறவில்லை. உலகளாவிய பயங்கரவாதம் என்ற கோசத்துடன் இலங்கை விவகாரத்தில் செய்யப்பட்ட தமது அணுகுமுறை தவறாகிவிட்டது என்பதை, அந்த சக்திகளிற்கு இன்றைய நான் நினைவூட்டக்கூடும்.

எனினும், அடுத்தவர் பலவீனத்தில் திருப்தியடைவது மட்டுமே கடந்த ஒரு தசாப்த தமிழர்களின் அரசியலா என்ற கேள்வியையும் கடந்த தசாப்த அரசியல் அணுகுமுறை எழுப்பியுள்ளது.

ஆயுதவடிவ போராட்டம் இனி சாத்தியமில்லையென்ற பின்னர், மீண்டும் காலச்சுழற்சியில் அரங்கிற்கு வந்த தமிழ் மிதவாத சக்திகள், தமிழர் அரசியலை முன்னகர்த்த முடியவில்லையென்பதே கசப்பான யதார்த்தம்.

விடுதலைக்கான யுத்தம் புரிந்த இனத்தை, கம்பெரலிய- அபிவிருத்தி யுத்தம் என்ற அளவில் சுருக்கியது தமிழ் மிதவாத தலைமைகள்.

இன்று தமிழர்களின் அதிகபட்ச கோரிக்கையே, இனவழிப்பிற்கு நீதி கோருவதும், இலங்கைகை சர்வதேச நீதிமன்றத்திற்கு எப்படி கொண்டு செல்வது என்பதுமாக அரசியல் பாதை திசைதிரும்பி நிற்கிறது.

அதிகாரத்திலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதற்கு மாறான அணியென கூறிக்கொள்ளும் தரப்புக்கள் எல்லாமே அடிப்படையில் ஒரேவிதமான சிந்தனை, செயற்பாட்டு திறன் கொண்டவர்கள் என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டது.

இந்த விரக்தி, தமிழ் சமூகத்திற்குள் உரிமைக்கான கோரிக்கை இரண்டாம் பட்சமாகி, அபிவிருத்தி அரசியல் முதன்னிலை பெற வைத்துள்ளது.

அபிவிருத்திக்காக அரசியல் உரிமைகளை கைவிட தயாராகி விட்டதா என்ற கேள்வியையும் கடந்த ஒரு தசாப்த அரசியல் எழுப்புகிறது.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டமோ, தனிநாடோ இந்த தீவில் சாத்தியமில்லையென்ற யதார்த்தம், அரசியல் உரிமைக் கோரிக்கைகளை கைவிட கோருவதல்ல என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் என்றுமில்லாதவாறு, கட்சி அரசியல் தமிழ் சமூகத்திற்குள் வளர்ந்து வருவது, ஒரு மகத்தான காலகட்டத்தை கடந்த வந்த இனமா இது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஒட்டுமொத்தத்தில் தன்னைத்தானே மீளாய்வு செய்யும்படி தமிழ் சமூகத்திடம் கோருவதே மே 18 அஞ்சலி நாள் நமக்கு சொல்லும் செய்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here