வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர் வெளிநாட்டு அகதிகள்!


பலரது எதிர்பினையும் மீறி வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் தங்க வைப்பத்தில் பலத்த சிக்கலை அரசாங்கம் எதிர்கொண்டிருந்தது.

ஐ.நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டு மூன்றாம் நாடொன்றுக்கு செல்வதற்காக காத்திருந்த அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா அதிகாரியொருவர் இலங்கை வருகை தந்து அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகித்திருந்தார்.

இந் நிலையில் அகதிகளை தற்காலிகமாக தங்க வைப்பத்தில் வவுனியா மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டு முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையமாக செயற்பட்ட வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரியில் தங்க வைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு ஆளுனர், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இது குறித்து கலந்துரையாடியே முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும் உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் தலைமைகள் அதற்கு பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் அண்மையில் வவுனியா வந்து உள்ளூர் அரசியல்வாதிகளை சந்தித்திருந்தார்.

இதன்போது மூடிய அறைக்குள் பேச்சு நடந்தது. பேச்சின் பின்னர், வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுக்கல்லூரியில் அகதிகளை தங்க வைக்க கூடாது எனவும் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கிற்கான ஒரேயோரு கூட்டுறவுக்கல்லூரி இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்திருந்தோம் என, பேச்சின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து சொன்னார் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்.

இந்தநிலையில் நேற்று 17 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் 35 பேர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையமாக செயற்படும் கூட்டுறவுக்கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாகிஸ்தானை சேர்ந்த 19 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 16 பேரும் உள்ளடங்குகிறார்கள்.

இது தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் குறிப்பட்ட சில அதிகாரிகளுக்கு எதிர்வரும் சனி ஞாயிறு உட்பட விடுமுறை தினங்களில் கடமைக்கு சமூகமளிக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here