கைதிகள் விடுதலை… நிலம் விடுவிப்பு- கூட்டமைப்பிடம் எழுத்து மூல உறுதியளித்தார் ரணில்… கூட்டமைப்பின் ஆதரவு ரணிலுக்கு!

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதென்ற முடிவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த எழுத்துமூல கோரிக்கைகள் சிலவற்றிற்கு இன்றிரவு ரணில் விக்க்கிரமசிங்க, எழுத்து மூல உறுதிமொழி வழங்கியதையடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்ப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத போதும், அந்த நிலைப்பாட்டை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பதாக தமிழ் பக்கம் அறிந்துள்ளது.

இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உறுப்பினர்களிற்கான கூட்டம் நடந்தது. இதில் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க வேண்டுமென சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் விடாப்பிடியாக நின்றனர்.
வியாழேந்திரன், சிறிதரன், சாள்ஸ் உள்ளிட்ட பலர் அதை ஆதரிக்க வேண்டுமென வாதாடினர். சிறிதரன், சாள்ஸ் இருவரும் அந்த கோரிக்கையில் விடாப்பிடியாக நின்றனர்.

முடிவெதுவும் எட்டப்படாத நிலையில், சம்பந்தன், மாவை இருவரும் மதியமளவில் ஜனாதிபதி மைத்திரிபாலவை சென்று சந்தித்தனர். நல்லாட்சி அரசை தொடரும் எண்ணமுள்ளதா, ரணிலை மாற்றிய பின்னர் எதிர்காலம் உள்ளிட்ட சில விசயங்களில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிந்து கொண்டதாக ஏனையவர்களிடம் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

எனினும், மாலையில் மீண்டும் கலந்துரையாடல் ஆரம்பித்த போது சிறிதரன், சாள்ஸ் இருவரும் ரணிலை எதிர்க்கும் நிலைப்பாட்டிலிருந்து சடுதியாக மாறியிருந்தனர். காலையில் இருந்த தீவிர நிலைப்பாட்டை குறைத்திருந்தனர்.
ரணிலை சென்று சந்தித்து பேசுவோம் என்ற யோசனையை சிறிதரனே முன்வைத்தார். இதையடுத்து, ரணிலிடம் எழுத்து மூலமாக சில கோரிக்கைகள் வைப்பதென தீர்மானிக்கப்பட, உறுப்பினர்கள் அவற்றை சொல்லசொல்ல சுமந்திரன் அதை குறித்துக் கொண்டார்.

உயர்பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்படல், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல், வேலைவாய்ப்பு வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மாலையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த

கோரிக்கைகளை சமர்ப்பிக்கப்பட்டது. இதெல்லாம் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் என அவர் சொல்ல, எழுத்துமூல உத்தரவாதத்தை கூட்டமைப்பு எம்.பிக்கள் கோரினர். அதை ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.

இதையடுத்து, கூட்டமைப்பு எம்.பிக்கள் ஓரளவு ஒத்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here