விடுவிக்கும்படி நான் கேட்கவில்லை: மறுக்கிறார் ரிசாட்!


உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு இராணுவத் தளபதியிடம் எந்தக் கோரிக்கையையும் நான் முன்வைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக இராணுவத் தளபதியுடன் தான் தொடர்பு கொண்டு வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே ‘என இராணுவத் தளபதி நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தமை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்;

“தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் எனக்குத் தெரிவித்தனர். இதன் காரணமாக நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் கோரியிருந்தனர்.

இதனையடுத்து இராணுவத் தளபதியுடன் நான் தொடர்பு கொண்டு, இது தொடர்பில் கூறினேன். மேலும், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஒருவர் தொடர்பில் தெரிவித்து, அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற விவரத்தையே இராணுவத் தளபதிடம் நான் வினவினேன். ஆனால் அந்த நபரை விடுவிக்குமாறு நான் கோரவில்லை.

இராணுவத் தளபதியுடனான உரையாடலை எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். தேவையாயின் அதனைத் தர முடியும்

இதனை தவிர, சந்தேகத்தில் கைதான எவரையும் விடுக்குமாறு நான் கோரவில்லை என்பதனை பொறுப்புடன்கூறிக் கொள்ள விரும்புகிறேன்“ என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here