முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு, கரைத்துறை பற்று பிரதேசசபை, பல்கலைகழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பல தரப்பினரும் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், உயிரிழந்த மக்களை நினைவுகூர தடையில்லையென படைத்தரப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

ஏற்கனவே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்குழுவிற்கும் முல்லைத்தீவு படைத்தலைமையக அதிகாரிகளிற்குமிடையில் நடந்த பேச்சில், உயிரிழந்த பொதுமக்களின் நினைவேந்தலை நடத்த தடையில்லையென கூறப்பட்டிருந்தது.

இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும் இதனை நேற்று உறுதிசெய்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பகுதியில் ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. நேற்றும் இன்றும் பிரதேசசபையின் துப்பரவு பணியாளர்கள் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

இன்று காலை யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினரும் சிரமதான பணியில் இணைந்திருந்தனர்.

அந்த பகுதி துப்பரவு செய்யப்பட்டு, குடிநீர் ஏற்பாடுகளை பிரதேசசபை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, நேற்றும் இன்றும் மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர். நாளையதினம், பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பை உறுதிசெய்ய, நினைவிடத்திற்கு வெளிவட்ட வீதிகளில் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடலாமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here