தூக்குகாவடி, விஐபி பாஸ் இல்லை… நந்திக்கடலில் மீன்பிடி தடை: வற்றாப்பளை பொங்கலிற்கு உச்சபாதுகாப்பு!


முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் விழா தொடர்பான கலந்துரையாடல் இன்று (16) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், இராணுவப் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையடலில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இம்முறை பொங்கல் விழாவில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கலந்துரையாடலின் முடிவில், மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அவர் குறிப்பிடுகையில்-

வருடந்தோறும் நடைபெறுகின்றதான வற்றாப்பளை அம்மன் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வு இம்முறையும் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்றதான பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொங்கல் விழாவிற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

ஆலய பரிபாலன சபையினருடன் பேசி, பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைகளின் பிரகாரம் சில விடயங்களை இந்த வருடம் நாங்கள் தவிர்ப்பதற்காக எண்ணியுள்ளோம்.

தூக்குக்காவடிகள், இம்முறை உள்ளே கொண்டு வராமல் இருப்பதற்காக நாங்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்குகின்றோம். எனவே தூக்குக்காவடிகளை நிறுத்துமாறும், வாகனங்கள் செல்வதற்கான பாதைகளில் கூட சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

வழக்கமாக விசேடமான அதிதிகள் வருவதற்கான பாஸ் கொடுக்கின்ற நடைமுறைகள் இருந்திருக்கின்றன. இம்முறை அவ்விதமான நடைமுறை எதுவும் இல்லை. எனவே வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்திச் செல்லவேண்டும்.

வற்றாப்பளை ஆலயத்தை அண்டியிருக்கின்ற நந்திக்கடல் பகுதியில் 2 கிலோ மீற்றர் தூரத்திற்குட்பட்ட இடத்தில் மீன்பிடி எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதிவரை தடைசெய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு முதல் நாளும் மறு நாளும் இறைச்சிக்கடை மற்றும் மதுபானக் கடைகள் என்பன முல்லைத்திவு மாவட்டத்திலே மூடுவது வழக்கம். இம்முறையும் 19ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரைக்கும் மூடுவதற்கு எண்ணியிருக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here