கிளி, வவுனியா, முல்லை மக்களிற்கு இந்தியாவை அறிய வைக்க முயற்சி!

இன்று (16) இந்திய அரசாங்கத்தின் “இந்தியாவைஅறிவோம்”(Know India) திட்டத்தின் ஓர் அங்கமாக கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு பொது நூலகங்களுக்கு அண்ணளவாக இலங்கை ரூபாய் 100,000 பெறுமதியுடைய 70 நூல்களைக் கொண்டஒரு தொகுதி நூல்கள் யாழ் இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் அவர்களால் மூன்று மாவட்டங்களிலும் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வுகளில் வைத்து அந்தந்த தவிசாளர்கள் மற்றும் நூலக அலுவலர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நூலகங்களிற்கு பொறுப்பான உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், நூலக அலுவலர்கள், வாசகர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய யாழ் இந்தியத் துணைத் தூதுவர் தற்போது அதிகரித்த இணையப் பாவனையால் நூல்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகின்றது எனவும் நூல்களை வாசிக்கும் பழக்கத்தினை எல்லோரும் வளர்த்துக் கொள்வதுடன் நூல்களை வாசிப்பது மட்டுமன்றி அதனை இன்னும் பலர் வாசித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நூல்களை கவனமாக கையாள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் ITEC புலமைப் பரிசில் ICCR புலமைப்பரிசில்களை மாணவர்களும் உள்ளுராட்சிசபைகளின் தவிசாளர்கள் மற்றும் அலுவலர்கள் முழுமையாகப் பயன்படுத்தி தமது திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் வடமகாண அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கமானது வடமாகாணத்தின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவுவதற்கு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். நூல்களைப் பெற்றுக் கொண்ட பிரதம நூலகர்களும் தவிசாளர்களும் இந்திய அரசாங்கத்திற்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

காலத்திற்கு காலம் இந்தியஅரசாங்கத்தினால் நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண பொது நூலகத்தில் இந்தியா கோர்ணர் என்ற பகுதி உருவாக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தினாலும் தமிழ்நாடு அரசாங்கத்தினாலும் 100,000 ற்கும் மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.

அந்தவகையில் “இந்தியாவை அறிவோம்” (Know India) திட்டத்தின் கீழ் அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் நூலகம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகியவற்றுக்கு ஒரு தொகுதி நூல்கள் யாழ் இந்தியத் துணைத் தூதுவரால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here