இடையூறு வந்தாலும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவோம்: விக்னேஸ்வரன்!

இறந்த உறவுகளை நினைவு கூர்வதற்கு முள்ளிவாய்க்கால் பத்தாவது ஆண்டில் நாம் சென்று எமது கடமைகளை நிறைவேற்ற இருக்கின்றோம். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இன்றைய நிலைமையில் அரசதரப்பு இடையூறுகளை ஏற்படுத்தலாம். அதற்கு அப்பாலும் புனிதமான இந் நிகழ்வில் நாம் கலந்துகொள்ள உள்ளது போன்று இன்னும் பலரும் கலந்துகொண்டு தமது கடமைகளை நிறைவேற்றவுள்ளனர்.

மேற்கண்டவாறு வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாணசபையில் நான் அதிகாரத்தில் இருந்தபோது மூன்று ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நானே தலைமை தங்கினேன். இந்தமுறை என்னிடம் தலைமை தங்குமாறு யாரும் கேட்கவில்லை. அது பரவாயில்லை. ஏனெனில் நான் பதவி நிமித்தம் இருந்தபோது எனது தலைமையில் நடைபெற்றது.

ஆனால் இம்முறை முள்ளிவாய்க்கால் அமைந்துள்ள பிரதேசசபையினரின் பொறுப்பில் அது நடைபெறலாம். அத்துடன் உள்ளூர் மக்களும் இணைந்து அனுஷ்ட்டிப்பார்கள். அது மட்டுமல்லாது பல கட்சியினரும் தாங்களும் முள்ளிவாய்க்காலில் வெவ்வேறு இடங்களிலும் நினைவு கூறவுள்ளனர்.

நானும், எனது கட்சியினருமாக இந்த புனிதமான நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளோம். அங்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு நினைவு கூறவுள்ளோம். தற்போதைய நாட்டு நிலைமையில் எந்தளவுக்கு இது சாத்தியமாகும் என்று எனக்கு தெரியவில்லை.

இதேவேளை முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுநாளின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்க பல தரப்புக்களும் அழைப்பு விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here