40 இலட்சம் பணம் அனுப்பிய சிரியாவிலுள்ள இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதி!


சிரியாவில் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்று வரும் மூன்று இலங்கையர்களால் அனுப்பப்பட்ட 4 மில்லியன் ரூபா பணம் பற்றிய விசாரணையை நடத்தி வருவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயரத்னவிடம் நேற்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

மொஹமட் அரூஸ் மொஹமட் சுபைர் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களான மொஹமட் இயஸ் அஹமட், சுர்பாஸ் நிலாம் ஆகியோரே இலங்கையிலிருந்து சிரியா சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த முதல் குழு என்பதை விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கல்கிசை மவுண்டலவனியாவிலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு பணத்தின் ஒரு பகுதியை அனுப்பியதாகவும்,  2018 செப்ரெம்பரில் மொஹமட் அரூஸ் மொஹமட் சுபைர் வட்ஸ்அப்பில் அழைத்து, தனது மகள் பணப்பொதியொன்றை தருவார், அதை குறிப்பிட்ட காலம் பாதுகாப்பாக வைக்கும்படி தெரிவித்ததாக, மொஹமட் அரூஸ் மொஹமட் சுபைரின் தந்தை தெரிவித்துள்ளார்.

மொஹமட் அரூஸ் மொஹமட் சுபைர் பேசியதற்கு சில நாட்களின் பின் முகத்தை முழுமையாக மூடியபடி வந்திறங்கிய பெண்ணொருவர், பார்சலொன்றை தந்து மொஹமட் அரூஸ் மொஹமட் சுபைரிடம் கையளிக்க கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தனது மகள் படுக்கையறை அலுமாரியில் அந்த பார்சலை வைத்திருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

பிறிதொரு நபர் முகத்தை மூடியபடி வந்து பார்சலை கேட்டதாகவும், எனினும் இதுவரை பணத்தை அங்கேயே பாதுகாத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் மொஹமட் அரூஸ் மொஹமட் சுபைர் வட்ஸ்அப்பில் அழைத்து அந்த பணத்தை அமெரிக்க டொலராக மாற்றி வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். வெள்ளவத்தையிலுள்ள மூன்று வெளிநாட்டு நாணய மாற்று நிலையங்களில் பணத்தை அவர் மாற்றினார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இந்த பணத்தை தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். பணம் குறித்த மேலதிக தகவல்களை மத்திய வங்கியில் பெறவும் நீதிமன்றம் அனுமதியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here