ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர்களிற்கு தற்காலிக தடை!

நாட்டின் தற்போதைய நிலைமையில் முஸ்லிம் வியாபாரிகளின் பாதுகாப்பு கருதிய ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரிகளின் வியாபார நிலையங்களை தற்காலிகமாக தடை செய்வதற்கு மண்முனைப் பற்றுப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மண்முனைப் பற்றுப் பிரதேசசபையின் 14வது அமர்வு நேற்று தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதேசத்தின் பாதுகாப்பு விடயங்களைக் கருத்திற் கொண்டும் இனமுறுகலைக் கட்டுப்படுத்தும் முகமாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சபை ஆரம்பத்தில், இந்த தீர்மானங்கள் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து முஸ்லிம் உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்புச் செய்தனர். சபையின் கோரம் போதுமானதாக இருந்த காரணத்தினால் சபை தொடர்ந்து இடம்பெற்றது.

இதன் போது மண்முனைப்பற்றுப் பிரதேசத்தில் எல்லைப் புறப் பிரதேசங்களில் மக்கள் வசிக்காமல் வெறுமையாகக் காணப்படும் காணிகளின் வேலிகள் தகரங்களால் பூரணமாக மறைக்கப்படுவது நீக்கப்பட்டு வேலைகள் அமைத்து வீதியில் செல்பவர்களுக்கு காணியின் நிலை தெரியும் வகையில் அமைய வேண்டும் என்ற பிரேரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சா.நகுலேஸ்வரனால் கொண்டுவரப்பட்டது.

அத்துடன் பாதுகாப்புக் கருதி வீதியோர வியாபாரிகளின் வியாபாரங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வது தொடர்பிலும் அவரால் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் பொன்.குணசேகரனால் பாதுகாப்பு கருதியும் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையிலும் ஆரையம்பதி பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வதற்கான பிரேரணையும் கொண்டுவரப்பட்டது.

வெளிநடப்புச் செய்த 05 முஸ்லிம் உறுப்பினர்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து உறுப்பினர்களும் பிரேரணையை ஏகமனதாக ஆதரித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here