சவுதி எண்ணெய் குழாய்கள் மீதான ஆளில்லா விமான தாக்குதல் பயங்கரவாத நடவடிக்கையே!

தங்களது கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் எண்ணெய் குழாய்களின் மீதான தாக்குதல், உலகப் பொருளாதாரத்தைக் குலைக்கும் சதித் திட்டத்துடன் நடத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, ஜெட்டா நகரில் மன்னர் சல்மான் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரண்டு சவுதி அரேபிய எண்ணெய்க் கப்பல்கள் சேதமடைந்ததிலும், சவுதியிலுள்ள இரு முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடங்களில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதிலும், சதிவேலை மற்றும் பயங்கரவாதத்துக்குத் தொடர்பிருப்பதை அமைச்சரவை உறுதி செய்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் சவுதி அரேபியாவை மட்டுமன்றி, சர்வதேச எண்ணெய் விநியோகத்தையும், உலக பொருளாதாரத்தையும் குலைக்கும் சதித் திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தையொட்டிய கடல் பகுதியில், சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான 2 கப்பல்கள் உள்பட 4 எண்ணெய்க் கப்பல்கள் நாசவேலை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சவுதி அரேபியாவிலுள்ள 2 முக்கிய எண்ணெய்க் குழாய் தடங்களின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு யேமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். இவர்களுக்கும் ஈரான் உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், சவுதி அரேபிய அமைச்சரவை இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here