கிழக்கில் பதில் நியமனமின்றி தமிழ் பகுதிகளிலிருந்து இடமாற்றப்படும் முஸ்லிம் ஆசிரியர்கள்; தமிழர்களின் கல்வியை அழிக்கும் முயற்சி: வியாழேந்திரன் கண்டனம்!

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள், கிழக்கு ஆளுனரின் பணிப்பின் பேரில் முஸ்லிம் பாடசாலைகளிற்கு மாற்றப்படுகிறார்கள். பதில் ஆள் நியமிக்கப்படாமல் இந்த இடமாற்றம் நடக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன்.

மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சி இதுவென குற்றம்சாட்டியுள்ள வியாழேந்திரன், முஸ்லிம் ஆசிரியர்கள் முஸ்லிம் பகுதிக்கு இடமாற்றப்படுவதை போல, தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பகுதிக்கு இடமாற்றப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை உடனடியாக வெளியேற்றி அவர்களுக்கு அண்மித்த முஸ்லிம் பாடசாலைகளில் இணைப்பு செய்கின்றார். அவரது உத்தரவுக்கு அமைய மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர் அதிரடியாக இந்த வேலையில் இறங்கியுள்ளார். வழமையாக ஒரு ஆசிரியரை ஒரு பாடசாலையிலிருந்து விடுவிப்பதாக இருந்தால் அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் . அத்துடன் பதில் ஆள் இன்றியும் விடுவிக்க இயலாது. இருந்தும் யாருடைய அனுமதிகளையும் பெறாமல் சகல விதிகளையும் மீறி இச்செயல் நடைபெறுகிறது .

தற்போது எம் மாணவர்கள் A/L, O/L, புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆயத்தமாகும் வேளையில் இவ் ஆசிரிய இடமாற்றத்தை ஆளுநர் மேற்கொண்டு உள்ளார். தமிழ் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டு குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.

இப்போது உள்ள பிரச்சினை முஸ்லிம் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைக்கு போவதல்ல. அந்த இடத்திற்கு முதல் தமிழ் ஆசிரியர்களை நியமித்து இருக்க வேண்டும் . உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் கல்வி வலயங்களிலிருந்து 267க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள் பதில் ஆள் இன்றி உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார்கள்.

01. கல்குடா கல்வி வலயத்தில் இருந்து 152 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 380 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

02. மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் இருந்து 22 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 213 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளன.

03. பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து 61 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 123 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றன.

04. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 32 முஸ்லிம் ஆசிரியர்கள். அத்துடன் இவ் நான்கு கல்வி வலயங்களிலுள்ள 50 க்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்களும் வெளியேற முயற்சி செய்கின்றனர்.

இந்நிலையில் கிழக்கு ஆளுநரிடம் எமது வேண்டு கோள் இவைதான்.

01. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள தமிழ் ஆசிரியர்கள் உடனடியாக தமிழ் பாடசால்களுக்கு காலம் தாமதிக்காது அனுப்பப்பட வேண்டும் . குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள 177 தமிழ் ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் .

02. ஆசிரியர்கள் போதாது இருப்பதனால் உடனடியாக எமது வேலையற்ற தமிழ் பட்டதாரி பிள்ளைகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் .

03. தமிழ் பாடசாலைகளுக்கு கல்வி சாரா சிற்றூழியர்கள் தமிழர்கள் உடன் நியமிக்கப்பட வேண்டும் .

04. முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எமது பகுதியில் கடமை புரிவது பயம் என்றால், இவ்வளவு பாதிப்பையும் பெற்று நிற்கின்ற தமிழ் சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு எவ்வளவு பயமாக இருக்கும்! அவர்கள் பாதுகாப்பு உடன் இடமாற்றம் நடைபெறும் வரை உறுதிப்படுத்தப்பட வேண்டும் .

05. கடந்த காலங்களில் கூட தமிழ் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களைக் காட்டி ஆசிரிய நியமனம் பெற்றுக்கொண்ட முஸ்லிம் ஆசிரியர்கள் பின் தம் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் தங்கள் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களின் இடத்திற்கு உடனடியாக வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் நியமிக்கப்பட வேண்டும் .

06. ஜனாதிபதி நாடு சுமுகமான நிலைக்கு வந்துள்ளது எனக் கூறும் வேளை ஏன் ஆளுநர் மாகாணப் பணிப்பாளருக்குடாக தமிழ் பாடசாலைகளிலிருந்து உடன் முஸ்லிம் ஆசிரியர்களை வெளியேற்றுகிறார்? இதன் பின்புலம் என்ன? உண்மையாக பயத்திலா அல்லது வேறு காரணத்தினாலா? உண்மையில் பயப்பட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தமிழர்களே! இதனால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் பயப்பிடுகின்றனர்.

இனிமேல் இதனை ஆளுநர், மாகாண கல்விப் பிரிவு தெளிவுபடுத்த வேண்டும் .
இந்த விடயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம். இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம். ஜனநாயகப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னேடுப்போம். கல்வி வலயங்களை மூட வேண்டிய சூழல் உருவாகும். இதை ஜனாதிபதி முதல் எந்த மட்டங்களுக்கெல்லாம் கொண்டு செல்ல முடியுமோ கொண்டு செல்வோம் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here