காரின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் நிலைய வீதியை அண்டியுள்ள வீடொன்றில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் குறித்த கார் தீக்கிரையாகியுள்ளது.

இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக காரின் உரிமையாளர் ஏ.எஸ்.எம்.நௌஷாத் (38) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மூவரடங்கிய குழுவினரே தனது வீட்டிற்குள் புகுந்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தினால் கார் முற்றாக எரிந்துள்ளதுடன், வீட்டிற்கும் பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸ் அவசர பிரிவிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் சுமார் 1 மணித்தியாலத்தின் பின்னரே பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மாதமிருந்தே கைத்தொலைபேசியில் எச்சரிக்கைக் குறுஞ்செய்திகள் தனக்கு வருவதாகவும் 25ஆம் திகதி இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.10 மணிக்கு மனைவியைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தல் குறுஞ்செய்தி கைத்தொலைபேசியில் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏற்கெனவே தனது கார் இயங்க முடியாத வகையில் சில விஷமிகள் காரின் என்ஜின் பகுதியை சேதமாக்கியிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here