சேலத்தில் 3 வயது குழந்தையை கடத்தி செல்ல முயன்ற பெண்

சேலத்தில் 3 வயது குழந்தையை கடத்தி செல்ல முயன்ற பெண்ணை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். இவருடைய மனைவி மீனாட்சி. கூலித்தொழிலாளிகளான இவர்களுக்கு நிவேதா(9) என்ற மகளும், சரவணன் என்ற 3 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு அதே பகுதியில் கூலி வேலைக்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர் அந்த குழந்தைகளிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு சந்தேகமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் குழந்தைகளை கடத்த முயன்ற அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதனால் குழந்தைகளை விட்டுவிட்டு அந்த பெண் அங்கிருந்து நைசாக தப்பி சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை அதே பெண் மீண்டும் ஜஸ்டின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மீனாட்சியிடம் தனது குழந்தைகளை கொடுக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அந்த குழந்தைகளை கடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாட்சி சத்தம் போட்டு கூச்சலிட்டார்.

இதைக்கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து அஸ்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் குழந்தைகளை கடத்த வந்ததாக போலீசாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அந்த பெண் தனது பெயர் செல்வி என்றும், லட்சுமி என்றும், பட்டைக்கோவிலை சேர்ந்தவர் என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருந்தாலும் குழந்தையை கடத்த முயன்று இருப்பதால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘இந்த பெண் கடந்த 10 நாட்களாக இங்கேயே சுற்றி வந்தார். மேலும் வீட்டின் முன்பு விளையாடும் குழந்தைகளிடம் அடிக்கடி பேச்சு கொடுப்பார். எனவே இதை சாதகமாக்கி அவர் குழந்தைகளை கடத்த இந்த பகுதியில் நோட்டமிட்டு சுற்றி திரிந்திருக்கலாம் என்று கருதுகிறோம். இதுதொடர்பாக போலீசார் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here