புலிகளை நினைவுகூர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள்- இராணுவம் தகவல்: நேற்று முள்ளிவாய்க்கால் சிரமதானம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூவி அமைந்துள்ள பகுதி நேற்று சிரமதானம் செய்யப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் மே 18ம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், இம்முறை நினைவஞ்சலியை யார் செய்வது என்ற தயக்கம் நீடித்தது. கடந்த சில வருடங்களாக யார் செய்வது என்ற போட்டி நிலவிய நிலைமையில், முள்ளிவாய்க்கால் பொது அமைப்புக்கள் என்ற பெயரிலான அமைப்பு இம்முறை கோதாவில் குதித்தது. பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, நினைவேந்தல் ஏற்பாடுகளில் குழப்பம் ஏற்பட்டது.

எனினும், அந்த அமைப்பினர் முல்லைத்தீவு பாதுகாப்புபடை அதிகாரிகளை சந்தித்து நினைவேந்தல் தொடர்பாக பேச்சு நடத்தினர். உயிரிழந்த பொதுமக்களிற்கு அஞ்சலி செலுத்துவதில் எந்த தடையுமில்லையென குறிப்பிட்ட பாதுகாப்பு தரப்பினர், விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முள்ளிவாய்க்கால் பகுதியில் சிரமதானப்பணிகள் நடந்தன.

நினைவேந்தல்குழுவில் உள்ள கிறிஸ்தவ மத குருக்கள், திருகோணமலை தென்கயிலை ஆதீனம், கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிரமதானத்திற்கு பாதுகாப்பு தரப்பு எந்த இடையூறும் விளைவிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தப்பது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here