ஏண்டா தலையில எண்ண வெக்கல

நடுத்தரமான குடும்பம், அன்பான அம்மா, அதட்டலான தங்கை, கண்டிப்பான அப்பா என்று, அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோ குடும்பம் தான் இந்தப் படத்தின் ஹீரோ அசாருடையது. உருப்படாதவன் பட்டம் இருந்தாலும்; சீரியசாக வேலையும், காதலும் தேடுகிறார். காதலியாக சஞ்சிதா ஷெட்டி கிடைக்கிறார். காதல் கைகூடி திருமணமும் நிச்சயமான பிறகு வருகிறது அந்த வில்லங்கம். அசரீரியாகக் கேட்கும் குரல், அசாரை வழிநடத்த ஆரம்பிக்கிறது. கிழவியிடம் அடி வாங்கு, தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணைக் காப்பாற்று, பிரியும் தம்பதிகளைச் சேர்த்து வை என்று, நிறைய டாஸ்க் கொடுக்கிறது.

எல்லாவற்றையும் சிரமப்பட்டுச் செய்து முடிக்கிறார், அசார். கடைசியாக ஒரு டாஸ்க் வைக்கிறது. அதாவது, ஒரு பெண்ணை சுட்டுக் கொல்லச் சொல்கிறது. அந்தப் பெண், அசார் மணக்கவிருக்கும் சஞ்சிதா ஷெட்டி. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. இரண்டு மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும், சிறிது பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், லாஜிக் பற்றி எந்தக் கவலையுமின்றி காமெடியும், திகிலும் கலந்துகட்டி அடிக்கிறார்கள். புதிதாக எதையும் யோசிக்காமல், எல்லோரும் பயணித்த அதே பாதையில்தான் இவர்களும் பயணித்து இருக்கிறார்கள். கொஞ்சம் பயமும், கொஞ்சம் சிரிப்பும் வருகிறது.

அசாருக்கு காமெடி நன்றாக வருகிறது. அவரது நண்பராக வரும் சிங்கப்பூர் தீபனும் தன் பங்குக்கு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும், இருவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டுப் போகிறார் யோகி பாபு. அவர் தோன்றுகின்ற அந்த டி.வி எபிசோட், ‘நான் ஸ்டாப்’ காமெடி ரகம். சஞ்சிதா ஷெட்டிக்கு அதிக வேலையில்லை. ஒளிப்பதிவாளரும், இசை அமைப்பாளரும், இது காமெடி படம்தானே என்று அதிகம் மெனக்கெடவில்லை. என்றாலும், பின்னணி இசையில் ஏ.ஆர்.ரெஹானா கவனம் ஈர்க்கிறார். ‘ஏண்டா கதையில காமெடி வெக்கல’ என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதில் மட்டும்தான் அக்கறையாக இருந்திருக்கிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here