மட்ரிட் ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் சம்பியன்

மட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் நம்பர் வன் இடத்தில் இருக்கும் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், 9ம் நிலை வீரரான சிட்சிபாஸ்சை (கிரீஸ்) எதிர்கொண்டார்.

1 மணி 33 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 20 வயதான சிட்சிபாஸ்சை வீழ்த்தி 3வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 31 வயதான ஜோகோவிச் இந்த பட்டத்தை ஏற்கனவே 2011, 2016ம் ஆண்டுகளில் வென்று இருந்தார். ‘ரொப்-10’ வீரர்களுக்கு எதிராக ஜோகோவிச் பெற்ற 200வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் கைப்பற்றிய 33வது ‘ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் 1000’ பட்டம் இதுவாகும். இதன் மூலம் இந்த பட்டத்தை அதிக முறை வென்று இருந்த ரபெல் நடாலின் (ஸ்பெயின்) சாதனையை அவர் சமன் செய்தார். சம்பியன் பட்டத்தை தனதாக்கிய ஜோகோவிச்சுக்கு 9 கோடி பரிசுத் தொகையுடன், 1,000 தரவரிசை புள்ளியும் கிட்டியது. இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட சிட்சிபாஸ் உலக தரவரிசையில் 2 இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

சம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் அளித்த பேட்டியில், ‘இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இந்த போட்டி எனது நம்பிக்கையை வலுப்படுத்த மிகவும் முக்கியமானதாகும். கடந்த ஜனவரி மாதம் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு பிறகு நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனது உத்வேகத்தை மீட்கும் வாரமாக இதை கருதினேன். நான் இந்த போட்டி தொடரில் ஒரு செட்டை கூட இழக்காமல் வெற்றி பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கு நான் எனது சில சிறப்பான ஆட்டத்தை ஆடினேன். சிட்சிபாஸ் அரைஇறுதியில் ரபெல் நடாலை வீழ்த்தி இருந்ததால் இந்த ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்த்தேன். அடுத்து நடக்க இருக்கும் ரோம் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here