இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது இன்றியமையாதது


நாட்டில் அமைதி குலைக்கப்பட்டுள்ளபோதும், ஏற்பட்ட துயரங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டு மக்கள் வழமைக்கு திரும்புவதும் அவசியமானது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழநி திகாம்பரத்தின் வழிகாட்டலில் அமைச்சினதும் கம்பெரலிய கிராம அபிவிருத்தி நிதிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொட்டகலை – டெரிகிளயர் உள்ளக பாதை அபிவிருத்தி, ரொசிட்டா மைதான அபிவிருத்தி முதலான விடயங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றதன.

தொழிலாளர் தேசிய முன்னணி கொட்டகலை அமைப்பாளர் செந்தூரன், இணைப்பாளர் ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

“2009 ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டில் நிலவிய அமைதியான சூழல், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களால் அமைதியிழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமைகளை சரி செய்ய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில், ஏற்பட்ட துயரங்களை ஆற்றுப்படுத்திக்கொண்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதும் இன்றியமையாதது. அதனையே வலியுறுத்தியே மக்கள் சந்திப்புகளை நடாத்தி வருகிறோம். அத்தகையசந்தர்ப்பங்களில் அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிப்பதுடன் இந்த அசாதாரண சூழ்நிலையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட மலையக மக்கள் பெற்றுக்கொண்ட அசாதாரண வெற்றியான நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களை ஐந்தில் இருந்து பத்தாக அதிகரிக்கப்பட்டதை நாம் கொண்டாட முடியாது போனாலும் அந்த சாதனை மிக்க அடைவினை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டிய பொறுப்பும் எமக்கு உள்ளது.

கண்ணுக்குப் புலப்படும் வீடமைப்பு, வீதியமைப்பு, உட்கட்டுமான அபிவிருத்திகள் போன்றே கண்ணுக்குப் புலனாகாத உரிமை சார் அபிவிருத்திகள் கடந்த மூன்றாண்டு காலமாக மலையகத்தலே இடம்பெற்றுள்ளது. பிரதேச சபை சட்டத்திருத்தம், மலையக அபிவிருத்தி அதிகார சபை போன்றன ஒட்டுமொத்த மலையக மக்களுக்குமானதாகவும் பிரதேச சபை அதிகரிப்பு பிரதேச செயலகங்களின் அதிகரிப்பு என்பன நுவரெலியா மாவட்டத்த்தை அடிப்படையாக கொண்டும் தமிழ் முற்போக்கு கூட்டணியினால் இந்த அரசாங்கத்தின் ஊடாக அடையப் பெற்ற சாதனை வெற்றிகளாகும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here