உலகின் அதிவேக புல்லட் புகையிரதத்தின் சோதனை ஓட்டம்!

உலகின் அதிவேகமான புல்லட் புகையிரதம் நேற்றுமுன்தினம் ஜப்பானில் சோதனை அடிப்படையில் இயக்கி பார்க்கப்பட்டது. இந்த புகையிரதம் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

அதிவேக புல்லட் புகையிரதங்களை ஷின்கான்சென் என்ற பெயரில் ஜப்பான் அரசு இயக்கி வருகிறது. ஜப்பானில் உலகின் அதிவேகமான புல்லட் புகையிரதத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த புகையிரதத்துக்கு அல்பா-எக்ஸ் புல்லட் புகையிரதம் என்று பெயர் வைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இந்த புகையிரதம் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த புகையிரதம் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தை எட்டி சாதனை புரிந்தது. இந்த புகையிரதம் 2030ம் ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். அப்போது மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.

தற்போது சீனாவில் புக்ஸிங் என்ற பெயரில் புல்லட் புகையிரதங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மணிக்கு 390 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த புகையிரதங்கள் தற்போது உலகின் அதிவேக புல்லட் புகையிரதங்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளன.

ஜப்பானின் அல்பா எக்ஸ் புல்லட் புகையிரதம், சீன புல்லட் புகையிரதத்தின் வேகத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த அல்பா எக்ஸ் புல்லட் புகையிரதத்தில் மிக நீளமான மூக்கு கொண்ட என்ஜினும், 10 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து, சென்டா மற்றும் ஆமோரி புகையிரதம் நிலையங்களுக்கு இடையே இந்த புகையிரதம் தொடர்ந்து இயக்கப்பட்டு சோதனை செய்யப்படும். சென்டா மற்றும் ஆமோரி இடையேயான தூரம் 280 கிலோமீட்டர் ஆகும்.

வாரத்தில் 2 முறை இரவு நேரங்களில் மட்டும் இந்த சோதனை ஓட்டம் நடைபெறும்.

அல்பா-எக்ஸ் புல்லட் வகை புகையிரதங்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த புகையிரதங்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று அல்பா-எக்ஸ் புல்லட் புகையிரதம் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஜப்பானில் ஷின்கான்சென் வகை புல்லட் புகையிரதங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2020ம் ஆண்டில் ஷின்கான்சென் என்700எஸ் வகை புதிய புல்லட் புகையிரதங்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த ஷின்கான்சென் என்700எஸ் புகையிரதங்கள் ஏற்கெனவே சோதனை செய்யப்பட்டு பயன்பாட்டுக்குத் தயாராகவுள்ளன. 2020ம் ஆண்டில் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த போட்டியையொட்டி இந்த புகையிரதங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here