கல்முனையில் சக்தி ரிவி தடை: ஹரீஸ் எம்.பி தூது வந்தது ரங்காவிற்காகவா?


கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சக்தி தொலைக்காட்சியை ஒளிபரப்ப அனுமதிப்பதில்லையென்ற முடிவை, முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகத்தில் உள்ள கல்முனை நகரசபை முதல்வர் எடுத்துள்ளார்.

கல்முனை நகரசபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி தொலைக்காட்சியை தடை செய்யுமாறு மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அனைத்து கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களையும் அறிவுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, முஸ்லிம் மக்களை குறிவைத்து தாக்கும் விதமாக சக்தி நடக்கிறதென்பதே முஸ்லிம் காங்கிரசின் குற்றச்சாட்டு.

கல்முனையில் அதிகமான வீடுகளில் இணைப்பை வழங்கும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள், இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்திற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய விவகாரம் நடந்துள்ளது என்ற தகவலை தமிழ்பக்கம் பெற்றது.

இந்த தடை விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உயர்மட்ட உறுப்பினர்களின் ஆலோசனையின் பின்னரே அறிவிக்கப்பட்டது. கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது.

தடை அறிவிக்கப்பட்டதும், கல்முனை எம்.பி எச்.எம்.எம்.ஹரீஸ் எகிறி குதித்துள்ளார். நேரடியாக, கல்முனை மாநகரசபை முதல்வரை தொலைபேசியிலேயே அழைத்து, எகிறியிருக்கிறார். ஊடகங்களை அப்படி தடைசெய்ய முடியாது, கல்முனை எம்.பியான தன்னுடன் கலந்தாலோசிக்காமல் எப்படி இந்த முடிவை எடுக்கலாமென எகிறியிருக்கிறார்.

இது கட்சியுடன் கலந்தோலோசித்து எடுக்கப்பட்ட முடிவு, முஸ்லிம்கிற்கு எதிராக மோசமான செய்திகளை அந்த ஊடகம் வெளியிட்டுக் கொண்டிருக்க எப்படி அதை அனுமதிப்பது? மக்கள்தான் அதை தடுக்கும்படி கேட்டார்கள். மாநகரசபைக்குட்பட்ட முடிவை கட்சி தலைமையுடன் ஆலோசித்த நான் எடுப்பேன் என மாநகரச முதல்வர் பதிலுக்கு எகிறியிருக்கிறார்.

விவகாரம் இப்பொழுது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் சென்றிருக்கிறது என தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார், மாநகரசபை முக்கியஸ்தர் ஒருவர்.

தடைக்கு முன்னரே ஹக்கீமுடன் ஆலோசிக்கப்பட்டதுதான். என்றாலும், மாவட்டத்தின் எம்.பி எதிர்ப்பு தெரிவிக்கும்போது ஹக்கீம் கொஞ்சம் அசைந்து கொடுக்க வாய்ப்பிருக்குமல்லவா?, மாநகசபையின் முடிவை ஹக்கீம் மாற்றுவாரா என அந்த முக்கியஸ்தரிடம் தமிழ்பக்கம் வினவியது.

இல்லையென அடித்து சொன்னார். அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னார்-

“ஹரீஸ் எம்.பியும், சக்தி ரிவி ரங்காவும் நெருக்கமான நண்பர்கள். ஹரீஸ் மூலம் ரங்கா காய்நகர்த்தியிருக்கலாமென்பதையும் கட்சி தலைமை யோசிக்கும். கட்சிக்குள் அதைப்பற்றியும் பேசப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக தடையை நீக்க சாத்தியம் இல்லை“ என்று அடித்து சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here