4வது முறையாக மும்பை கோப்பையை வென்றது!

12வது ஐபிஎல் சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி மகுடம் சூடி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

பும்ரா, ராகுல் சாஹரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, மலிங்கவின் கதிகலங்க வைக்கும் கடைசிப்பந்து யோர்கர் ஆகியவற்றால் ஹைதராபாத்தில் நடந்த 12வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசும் கோப்பையும், 2வது இடம் பெற்ற சிஎஸ்கே அணிக்கு ரூ. 12.50 கோடி பரிசும் வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஐபிஎல் போட்டித் தொடரில் 4வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு148 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணியின் பக்கம் ஆட்டம் சென்ற நிலையில், தோனியின் ரன் அவுட், வட்ஸனின் ரன் அவுட் ஆகியவைதான் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி மும்பை அணி வெற்றியை வசமாக்க தூண்டுகோலாக அமைந்தது.

மும்பை இந்தியன்ஸ் இதற்கு முன் 2013, 2015, 2017ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்த நிலையில், தற்போது 2019ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி 4முறை பட்டம் வென்ற பெருமையைப் பெற்றது. ரோஹித் சர்மா இதுவரை 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார், மேலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கோப்பையை வென்றபோது அந்த அணியிலும் ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடினாலும், மும்பை அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் 37 ரன்கள் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அத்துடன் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்திலும் மும்பையிடம் வீழ்ந்தது. இப்போது இறுதிப்போட்டியிலும் வீழ்ந்து இந்த சீசனில் மும்பையை அணியை வீழ்த்த முடியாத நிலைக்கு சிஎஸ்கே அணி ஆளாகியது. .

ஐ.பி.எல் போட்டி வரலாற்றில் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 17 முறையாக சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

குறிப்பாக இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 4 முறையாக இப்போது மோதின. இதில் 2010, 2013ம் ஆண்டில் சிஎஸ்கே அணி வென்ற நிலையில், 2015, 2019ம் ஆண்டில் மும்பை அணி வென்றுள்ளது

மும்பை அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் ஆட்டக்காரர்கள் டீகொக், ரோஹித் சர்மா, சூர்யகுமார்யாதவ், ஹர்திக், குர்னால் பாண்டியா இந்த ஆட்டத்தில் சொதப்பினாலும், பொலார்ட் சேர்த்த 41 ரன்கள் ஆட்டத்துக்கு முக்கியமாக அமைந்தது.

பந்துவீச்சில் பும்ரா, ராகுல் சாஹர், மெக்லஹன் ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு தொடக்கத்தில் இருந்தே கடும் நெருக்கடி அளித்தனர். அதிலும் பும்ரா, ராகுல் சாஹர் தலா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். மலிங்க 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் கடைசி ஓவரை கலக்கலாக வீசி வெற்றிக்கு துருப்புச்சீட்டாக மாறினார்.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அணியின் முக்கிய ஆட்டக்காரர்களான டூப்பிளசிஸ், ரெய்னா, ராயுடு, தோனி ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தது மிகப்பெரிய பின்னடைவாகும். லீக் ஆட்டங்கள் முதல் தகுதிச்சுற்றுவரை பவர்ப்ளேயில் அதிகமான விக்கெட்டுகளை சிஎஸ்கே இழந்து வந்தது. இந்த குறைபாட்டை கடைசிவரை சரிசெய்யாததன் விளைவை இப்போது அனுபவித்துவிட்டது.

வட்ஸனுக்கு இரு கட்சுகளை மும்பை அணியினர் கோட்டை விட்டபோதும், அவர் இன்னும் பொறுமையாக ரன் ஓடாமல் தவிர்த்திருந்தால் வெற்றி சிஎஸ்கே பக்கம் நின்றிருக்கும். வட்ஸன், தோனியின் ரன் அவுட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

வட்ஸன், டூப்பிளசிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். மெக்லனஹன் வீசிய முதல் ஓவரில் டூப்பிளசிஸ் பவுண்டரி விளாசினார், குர்னல் பாண்டியா வீசிய 2வது ஓவரில் வட்ஸன் பவுண்டரி அடித்தார்.

குர்னல் பாண்டியா வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார். கடைசிப்பந்தில் விக்கெட் கீப்பர் டீகொக்கால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு டூப்பிளசிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 33 ரன்களுக்கு முதல் விக்கெட்டை சிஎஸ்கே அணி இழந்தது. அடுத்து ரெய்னா களமிறங்கி, வட்ஸனுடன் சேர்ந்தார்.

மலிங்க வீசிய 6வது ஓவரை வட்ஸன் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து துவம்சம் செய்தார். பவர்ப்ளே ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி பவர்ப்ளே ஓவரில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

மெக்லனஹன் வீசிய 7வது ஓவரில் பவுன்ஸர் பந்து ரெய்னாவின் பேட்டில் பட்டு நடுவர் அவுட் அளித்தார். ஆனால், அதை டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்ததில் அவுட் இல்லை என்று தீர்ப்பானது. ராகுல் சாஹர் வீசிய 10வது ஓவரில் ரெய்னா எல்பிடபிள்யு முறையில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ராயுடு நீண்டநேரம் நிலைக்கவில்லை.

மெக்லனஹன் வீசிய 9வது ஓவரில் வட்ஸன் தூக்கி அடித்த பந்தை மலிங்க கட்ச் பிடிக்க முற்பட்டு தவறவிட்டார். இந்த வாய்ப்பை வட்ஸன் இறுகப்பற்றினார். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்திருந்தது.

பும்ரா வீசிய 11வது ஓவரில் டீகொக்கிடம் கட்ச் கொடுத்து ராயுடு ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கப்டன் தோனி, வட்ஸனுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர்.

ஹர்திக் பாண்டியா வீசிய 12வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. வட்ஸன் அடித்து விட்டு ஒரு ரன் ஓட முயன்றபோது இஷான் கிசன் வீசிய துல்லிய வீ்ச்சில் தோனி 2 ரன்னில் ரன் அவுட் செய்யப்பட்டார். இந்த ரன்அவுட்டில் கமிராவின் ஒரு கோணத்தில் பார்த்தால் தோனி அவுட் போலவும், மற்றொரு கோணத்தில் அவுட் இல்லாதது போலவும் தெரிந்தது. இதனால் மூன்றாவது நடுவர் தோனியின் விக்கெட்டை தீர்மானிக்க நீண்டநேரம் எடுத்துக்கொண்டார். சந்தேகத்தின் பலனை பட்ஸ்மேனுக்கு அளிக்க வேண்டிய நிலையில், தோனி அவுட் என்று மூன்றாவது நடுவர் தீர்ப்பளித்தார்.

70 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த சிஎஸ்கே அடுத்த 12 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து பிராவோ களமிறங்கி, வட்ஸனுடன் சேர்ந்தார்.

கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்க வீசிய 16வது ஓவரை வட்ஸனும், பிராவோவும் பயன்படுத்தினர். இந்த ஓவரில் பிராவோ ஒரு சிக்ஸரும், வாட்ஸன் 3 பவுண்டரிகள் அடித்து, 44 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார்.

பும்ரா வீசிய 17வது ஓவரில் வட்ஸன் லெக்திசையில் தூக்கி அடிக்க, அது ராகுல் சாஹர் கட்ச் பிடிக்க தவறவிட்டார். வட்ஸனுக்கு இந்த ஆட்டத்தில் 2வது கட்ச் வாய்ப்பு தவறவிடப்பட்டது.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரை குர்னல் பாண்டியா வீசினார். ஹட்ரிக் சிக்ஸர் அடித்து வட்ஸன் போட்டியில் நிலவிய டென்ஷனைக் குறைத்தார். குர்னல் பாண்டியா பந்துவீசும்வரை ஆட்டம் மும்பை பக்கம்தான் இருந்தது ஆனால், வட்ஸன் அடித்த ஹட்ரிக் சிக்ஸருக்கு பின் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

19வது ஓவரை பும்ரா வீசனார். பும்ரா வீசிய பவுன்ஸர் பந்தை அடிக்க முற்பட்டு டீகொக்கிடம் கட்ச் கொடுத்து பிராவோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார். 3வது பந்தில் ஜடேஜா 2 ரன்களும், 5வது பந்தில் 2 ரன்களும் எடுத்தார். கடைசிப்பந்து பவுன்ஸராக பும்ரா வீச, அதை பிடிக்காமல் டீகொக் தவறவிட்டார் பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்க கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் வட்ஸன் ஒரு ரன்னும், 2வது பந்தில் ஜடேஜா ஒரு ரன்னும் எடுத்தனர். 3வது பந்தில் வட்ஸன் 2 ரன்கள் சேர்த்தார். 4வது பந்தில் 2 ரன்கள் எடுக்க வட்ஸன் முயன்றபோது பாண்டியாவால் ரன் அவுட் செய்யப்பட்டு 59 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும்.

5வது பந்தில் தாக்கூர் 2 ரன் சேர்க்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்க ஸ்லோபோலில் யோர்கர் வீச தாக்கூர் எல்பிடபிள்யு முறையில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து 4வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 5 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மலிங்க, சாஹர், பாண்டியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

முன்னதாக ரொஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. சாஹர் வீசிய முதல்ஓவரை கட்டுக்கோப்பாக வீசினார். தாக்கூர் வீசிய 2வது ஓவரில் சர்மா சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். சாஹர் வீசிய 3வது ஓவரில் டீ கொக் 3 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை எகிறச் செய்தார்.

பந்துவீச்சை மாற்றிய தோனி, ஹர்பஜனை அழைத்தார். ஹர்பஜன் ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி அடித்தார். 5வது ஓவரை தாக்கூர் வீசினார். 4வது பந்தில் லெக் திசையில் டீகொக் சிக்ஸர் விளாசினார். ஆனால் அடுத்தபந்து ஷோர்ட் பிட்சாக வந்தது. இதை சரியாக கணிக்கத் தவறி டீகொக் அடித்ததால் அது தோனியிடம் தஞ்சம் புகுந்தது. டீ காக்29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டீ கொக்கை ஆட்டமிழக்கச் செய்தபோது, தாக்கூர் அவரை வெளியே போகுமாறு செய்கைசெய்து சென்ட் ஓப் செய்தார். இது ஐபிஎல் விதிமுறையின்படி தவறாகும் என்பதால், நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம்.

அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்து, சர்மாவுடன் சேர்ந்தார். சாஹர் வீசிய 5வது ஓவரின் 2-வது பந்தில் தோனியிடம் கட்ச் கொடுத்து 15 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்த ஓவரை மெய்டனாக சாஹர் வீசினார்.

ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச்செய்தபோது, தோனி ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையை எட்டினார். ஐபிஎல் போட்டியில் இதுவரை 132 கட்சுகளை பிடித்து தோனி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் தினேஷ் கார்த்திக் 131 கேட்சுகளை பிடித்திருந்த நிலையில், அதை தோனி முறியடித்துள்ளார்.

பவர்ப்ளே ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினர். பிராவோ வீசிய 10வது ஓவரில் இஷான் கிசான் 2 பவுண்டரிகளை விளாசினார். ஹர்பஜன் வீசிய 11வது ஓவரில் யாதவ், கிசான் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.

12வது ஓவரை இம்ரான் தாஹீர் வீசினார். அவரின் 2வது பந்தில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து குர்னால் பாண்டியா வந்தார்.

மீண்டும் தாக்கூர் பந்துவீச அழைக்கப்பட்டார். 13-வது ஓவரை தாக்கூர் வீசினார். 7 ரன்கள் சேர்த்த நிலையில், குர்னல் பாண்டியா அடித்த பந்தை தாக்கூர் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த பொலார்ட், கிசானுடன் சேர்ந்தார்.

தாஹீர் வீசிய 15வது ஓவரின் முதல் பந்தில் பொலார்ட் சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரின் 5வது பந்தில் இஷான் கிசான் ரெய்னாவிடம் கட்ச் கொடுத்து 23 ரன்னில் வெளியேறினார். 82 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்த மும்பை அணி, அடுத்து 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

தாக்கூர் வீசிய 18வது ஓவரில் ஹர்திக், பொலார்ட் தலா ஒரு சிக்ஸர் விளாசினர். 19வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். 16 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்திக் பாண்டியா எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் சாஹர் ரன் ஏதும் எடுக்காமல் டூப்பிளசிஸிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மெக்லனஹன் களமிறங்கினார்.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். 3 பந்துகள் டொட் பந்துகளாகவும் பிராவோ வீசினார். 4வது பந்தில் மெக்லனஹன் டக்அவுட்டில் ரன் அவுட்டாகினார். கடைசி இரு பந்துகளில் பொலார்ட் இரு பவுண்டரிகள் அடிக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி இரு ஓவர்களில் 3 பவுண்டரி, 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. பொலார்ட் 46 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் சாஹர் 3 விக்கெட்டுகளையும், தாக்கூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here