தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் : ப்ரே அட் நைட்

2008ல் வெளியான ஸ்ட்ரேஞ்சர்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் இது. மிகக் கொடூரமான ஒரு கொலைகாரக் கும்பலுக்கும், ஒரு சாதாரண அப்பாவிக் குடும்பத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதை.தன் மகள் பெய்லி மேடின்ஸனை போர்டிங் ஸ்கூலில் சேர்க்க இருப்பதால், குடும்பத்துடன் ஒருநாள் அவளைச் சந்தோஷமாக வைத்திருப்பதற்காக, ஜாலி ட்ரிப் கிளம்புகிறார் மார்ட்டின் ஹென்டர்சன். அவருடன் மனைவி கிறிஸ்டினா, மகன் லீவிஸ் புல்மேன் செல்கின்றனர்.

அவர்கள் அனைவரும் தனியாக ஒரு இடத்தில் வசிக்கும் நண்பன் வீட்டுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு நண்பன் இல்லை. ‘நாளை காலை வருகிறேன். அதுவரை வீட்டிலேயே காத்திருங்கள்’ என்று ஒரு துண்டுச்சீட்டு எழுதி வைத்திருக்கிறார். ஆனால், அந்த ஒருநாள் இரவில்தான் நடக்கக்கூடாத விபரீதமான சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிகிறது.

வீட்டுக்கு வெளியே காற்று வாங்கச் செல்லும் பெய்லி, லீவிஸ் கொடூரமான சம்பவத்தைப் பார்க்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, அந்தச் சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்கள், திடீரென்று இவர்களையும் கொலை செய்வதற்கு வெறியுடன் புறப்பட்டு வருகின்றனர். கொடூரமான கொலைகாரர்கள் 3 பேர், அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் 4 பேர் என, 7 கேரக்டர்களை வைத்துக்கொண்டு, திகில் விளையாட்டு காட்டுகிறார் இயக்குனர் ஜொஹான்னஸ் ராபர்ட்ஸ்.

அந்தக் கொடூரமான சம்பவம் என்ன? கொலைகாரர்கள் இவர்களைக் கொல்ல ஏன் துரத்த வேண்டும் என்பது சஸ்பென்ஸ் ஏரியா. படம் முழுவதும் இரவில் நடப்பதால் திகிலும், பயமும் மாறி மாறி வருகிறது என்றாலும், முதல் 30 நிமிடமும் படம் மெதுவாகவே நகர்கிறது. வசனங்கள் குறைவு. ஏட்ரியன் ஜான்சனின் பின்னணி இசை மிரட்டுகிறது. நீச்சல் குளத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகள் உள்பட பல இடங்களில் ஒளிப்பதிவு மிரட்டல்.

7 பேருமே உயிரைக் கொடுத்து நடித்திருந்தாலும், அதிக கவனத்தை ஈர்ப்பவர், கென்ஸியாக வரும் பெய்லி மேடின்ஸன். கொலையாளிகளிடம் இருந்து புத்திசாலித்தனமாக தப்பிப்பது, பிறகு அவர்களை அலைக்கழிப்பது, கடைசியில் போட்டுத்தள்ளுவது என நிறையவே மெனக்கெடுகிறார். முதல் பாகத்தைப் போல் இல்லாவிட்டாலும், இரண்டாம் பாகம் ஓரளவுக்கு திகில் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது என்பது நிஜம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here