முன்கையெடுத்த மனோ: தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவின் பின்னணி என்ன?; அடுத்த கட்ட திட்டம் என்ன தெரியுமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் நேற்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் சந்தித்து பேசியிருந்தார்கள். இரண்டு தரப்பும் எதிரகாலத்தில் ஒன்றிணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும், சிறுபான்மையினங்கள் ஒன்றிணைய வேண்டும் போன்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக பலராலும் வலியுறுத்தப்பட்டு வருவதுதான். என்றாலும் தமிழ் அரசியல் கட்சிகளால் ஒன்றிணைய முடியாமல் இருந்தது.

இந்தநிலையில் திடுதிப்பென  நடந்த இந்த சந்திப்பின் பின்னணி என்ன, சந்திப்பின் காரணம் என்ன போன்ற விடயங்களை ஆராய்ந்தோம். இரண்டு தரப்பிலும் சந்திப்பில் கலந்து கொண்ட சிலருடன் பேசினோம்.

இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தரப்பில் மனோ கணேசன், பழநி திகாம்பரம், எம்.திலக்ராஜ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் என தனியே தமிழ் அரசு கட்சியினர் கலந்து கொண்டிருந்தனர்.

தனியே தமிழ் அரசு கட்சியினர் கலந்து கொண்டது திட்டமிட்ட நிகழ்வல்ல, எதிர்பாராமல் நடந்தது என்றார் தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்.

இந்த சந்திப்பிற்கான முழு முயற்சியை மேற்கொண்டவர் அமைச்சர் மனோ கணேசன்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தமிழர் இனப்பிரச்சனை தீர்வு அரங்கில் காணாமல் போய் விட்டது. இதுவரை இலங்கை பிரச்சனையென அடையாளப்படுத்தப்பட்டு வந்த இனப்பிரச்சனை காணாமல் போய், பயங்கரவா பிரச்சனை முன்னணிக்கு வந்துள்ளது.

இதுவரை இந்த அரசு எதையும் செய்யாவிட்டாலும், செய்வதற்கான ஆரம்ப முயற்சிகள் சிலவற்றை செய்தது. இதன்மூலம் இனப்பிரச்சனை தீர்வு விவகாரம் செயற்பாட்டு ரீதியில் இருந்தது.

இலங்கை பிரச்சனையென்பது தமிழர்களின் உரிமைப் போராட்டமாக இதுவரை இருந்தது. அதற்குள் தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகத்தில் சில நிர்வாகரீதியான இலக்குகளை அடைய முயற்சித்துக் கொண்டிருந்தது. புதிய சூழலில் இவை அனைத்தும் இல்லாமல் போய்விடும் அபாயம் எழுந்துள்ளது.

தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்வு விடயத்தை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்க- அழுத்தம் கொடுக்க- சிறுபான்மையின கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். அதனடிப்படையலேயே இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது“ என தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார் சந்திப்பில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர்.

சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முதலில் நடந்த கலந்துரையாடலை அடுத்து, நேற்று த.மு.கூட்டணியின் எம்.பியொருவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசாவிடம் இது பற்றி பேசினார்.

அந்த யோசனையை அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள, நேற்றே முதல் சந்திப்பு நடந்தது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் நோக்கம் இரண்டு தரப்பும் இணைந்து செயற்படுவதென்பதல்ல. அதன் நோக்கத்தை மற்ற கட்சிகள் ஏற்றுக்கொண்டால், அவர்களையும் இணைப்பதே நோக்கம். தமிழ், முஸ்லிம், சிங்கள கட்சிகள் என்ற பேதமின்றி, நோக்கத்தை ஏற்றுக்கொள்பவர்களை இணைப்பதே எதிர்கால திட்டம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here