திருமணத்துக்கு முந்தைய காதல்… தம்பதியினர் எப்படிக் கையாள வேண்டும்?

‘மனிதர்களாகப் பிறந்தால் ஐஸ்கிரீம் சாப்பிடுவது இயல்பு என்பது மாதிரிதான் காதலும். அதனால், அதைப்பற்றி மனைவியிடம் கேள்வி கேட்காமல் இருப்பதுதான் உச்சக்கட்ட நாகரிகம்.”


ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணத்துக்கு முந்தைய காதல் என்பது வெகு சகஜமான விஷயம்தான். சிலருக்கு அது திருமணமாக தொடரும்; சிலருக்கு பிரேக் அப்பாக பிரிந்து விடுகிறது. நம் கலாசாரத்தில் மனைவியிடம், ‘நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஒரு பெண்ணை லவ் பண்ணேன்’ என்று கணவன் சொல்வதை மனைவிகள் ‘அது கல்யாணத்துக்கு முன்னாடிதானே’ என்று லேசாக எடுத்துக்கொண்டு கடந்து விடுகிறார்கள்.

இதில் சில பெண்கள் விதிவிலக்கு என்பது தனிக்கதை. கணவர்களைப் பொறுத்தவரை, இதை மனைவியின் ‘உடல் ஒழுக்கம் சார்ந்த விஷயமாக’வே பார்க்கிறார்கள். எல்லாக் கணவர்களும் இப்படியில்லை என்றாலும், பெருவாரியான கணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதனால், ஒரு கணவனோ, மனைவியோ திருமணத்துக்கு முந்தைய தன்னுடைய காதலைப் பற்றி தன் துணையிடம் சொல்லலாமா; சொல்லலாம் என்றால் எப்போது சொல்லலாம்; அல்லது எந்த நிலையிலும் சொல்லவே கூடாதா… டாக்டர் ஷாலினியிடம் கேட்டோம்.

‘திருமணத்துக்கு முந்தைய காதலை வாழ்க்கைத் துணையிடம் சொல்கிற விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மனைவிகள்தான் என்பதால், அவர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனைகளை முதலில் சொல்லி விடுகிறேன். இறந்தகால காதலைப் பற்றி கணவனிடம் சொல்வதற்கு முன்னால் உங்கள் இடத்திலிருந்து மட்டுமே யோசிக்காமல், கணவருடைய இடத்தில் இருந்தும் யோசிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒரு கனமான பொருளை ஒருவரிடம் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், அந்த வெயிட்டைத் தாங்குகிற அளவுக்கு அவருக்கு பலம் இருக்க வேண்டும். பலமில்லாத ஆளிடம் கனமான பொருளைக் கொடுத்தீர்களென்றால், அவரும் கீழே விழுந்து, உங்களையும் சேர்த்தே நசுக்கி விடலாம். அதனால், ‘காதல் செய்கிற பெண்களெல்லாம் ஒழுக்கம் தவறித்தான் போயிருப்பார்கள்’ என்ற எண்ணத்துடன் இருக்கிற கணவர்களிடம் உங்கள் இறந்த காலத்தைப்பற்றிச் சொல்லாமல் இருப்பதுதான் குடும்பத்துக்குப் பாதுகாப்பு.

பொதுவாக, ஒரு கணவன் தன் மனைவியிடம் ‘நான் ரொம்ப போர்வேர்ட். நான் ரொம்ப மொடர்ன். கல்யாணத்துக்கு முன்னாடி நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா. நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன், சொல்லு’ என்று கேட்பதே அநாகரிகம்தான். இங்கே எல்லா ஆண்களின் வீட்டுப் பெண்களும்தான் காதலிக்கிறார்கள். நாமெல்லாம் அடுத்தவர்களிடம் ‘நீ ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கியா’ என்று கேட்க மாட்டோம் இல்லையா? மனிதர்களாகப் பிறந்தால் ஐஸ்கிரீம் சாப்பிடுவது இயல்பு என்பது மாதிரிதான் காதலும்.

அதனால், அதைப்பற்றி மனைவியிடம் கேள்வி கேட்காமல் இருப்பதுதான் உச்சக்கட்ட நாகரிகம். இந்த நாகரிகம் மனைவிக்கும் பொருந்தும். தேவையில்லாமல் கணவனின் கடந்த காலத்தை தெரிந்துகொண்டு, கணவன் வேலை காரணமாக வீட்டுக்கு லேட்டாக வந்தாலும் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பது தாம்பத்தியத்துக்குப் பாதுகாப்பான விஷயம் கிடையாது.

அடுத்து, திருமணத்துக்கு முந்தைய காதலைப் பற்றி ஒருவேளை உங்கள் கணவர் கேட்டாலும், ‘கணவனிடம் எதையுமே மறைக்காத உலகத்தின் ஆகச் சிறந்த மனைவி’ நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று மடமடவென்று ஒப்பிக்காதீர்கள். ‘ஒருத்தன் பின்னாடியே சுத்திக்கிட்டிருந்தான்; ஒரு நாள் லவ் பண்றேன்னு சொல்லிட்டான். அதெல்லாம் அவ்வளவு சீரியஸான விஷயம் கிடையாதுங்க’ என்பது மாதிரி பட்டும்படாமல் சொல்லிவிட்டு அந்தப் பேச்சை கடந்து விடுங்கள். அப்போதுதான் உங்கள் எதிர்கால திருமண வாழ்க்கை காப்பாற்றப்படும்.

திருமணத்துக்கு முந்தைய காதலை கணவனிடம் ஒப்புவிக்கிற பெண்கள், ‘தன் நேர்மையைக் கணவன் பாராட்டுவான். மனைவி பாதிக்கப்பட்டிருக்கிறாளே என்று அன்பினால் தன்னைத் தாங்குவான்’ என்று நினைத்துத்தான் சொல்கிறார்கள். ஆனால், உண்மை அப்படியில்லை. கணவர்களில் அதிகம் பேர் அதை வைத்து மனைவியின் ஒழுக்கத்தைக் குறைவாகப் பேசுவது; பல்வேறு சந்தர்ப்பங்களில் குத்திக் காட்டி பேசுவது; மனைவியின் குடும்பத்தை அவமானப்படுத்துவது என்றுதான் நடந்துகொள்கிறார்கள்.

இது எல்லாக் கணவர்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. மனைவியின் எக்ஸ் லவ்வைக் குத்திக்காட்டுகிற கணவர்களைப் போல இங்கே சில மனைவிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களின் கணவர்கள், ‘கல்யாணத்துக்கு முன்னாடி எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை’ என்று பொய் சொல்லி விடுவதே உத்தமம். இல்லையென்றால், வீடு அமைதி இழந்து விடும்.

மனைவிகளுக்கு ஒரு வார்த்தை. ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு வகை. உங்களுக்கு அமைந்த கணவர் எந்த வகை என்று தெரிந்துகொண்ட பிறகு, எக்ஸ் லவ்வைப் பற்றி லேசுபாசாகச் சொல்லிப் பாருங்கள். அதைக் கேட்டும் கேளாமல் இருப்பதுபோல இருந்தாரென்றால், அவருக்குப் புரிகிறது. அதே நேரம் அதில் ஆர்வம் காட்ட மறுக்கிறார் என்று அர்த்தம். அந்த இறந்த காலத்தை அப்படியே மூட்டைக் கட்டி போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். படபடப்பாகக் கவனிக்கிறார் என்றால், அந்த இறந்த கால காதலைச் சொல்லாமல் மறைப்பது மட்டுமே உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நீங்கள் செய்கிற நன்மை.

சரி மனைவிகளுக்குச் சொல்லியாயிற்று… கணவர்களுக்கு… பெண்களுக்கு நோ என்றால் ஆண்களுக்கும்தான் நோ. முதல் இரவில் மொத்தத்தையும் உளறிக் கொட்டி… ஐந்து வருடங்களோ ஏழு வருடங்களோ… உங்கள் சொல்லாலேயே நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள் என்பதை மறவாதீர்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒரு வகை. முதலிரவில் உளறிக் கொட்டியதோடு நில்லாமல்…. உங்கள் முன்னாள் காதலியைத் தேடிக் கண்டுபிடித்து குடும்பத்தோடு நட்பு பாராட்டும் அளவுக்கு ஆண்கள் செல்வார்கள். என் மனதில் கனமில்லை என்பதைக் காண்பிக்கவே இதெல்லாம்.

அதெல்லாம் நீங்களே உங்களுக்கு மாட்டிக்கொள்ளும் விலங்கு என்பதை மறந்துவிடாதீர்கள். பழைய விஷயங்கள் கடந்து போனவையாகவே இருக்கட்டும்.

ஆக தம்பதிகளே… கடந்து போன காதல் விஷயத்தை நிகழ் காலத்தில் கணவரிடமோ, மனைவியிடமோ சொல்ல வேண்டாம்!”

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here