முடிகொட்டுதல், நரைமுடியைப் போக்கும் 20 பொருள்கள் கலந்த மூலிகை எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம்!

வீட்டிலேயே ஆரோக்கியமான மூலிகை எண்ணெய் தயாரிக்கலாம் என்றால் எத்தனை நன்றாக இருக்கும்? முடிகொட்டுதல், முடிப் பிளவு, வறட்சி போன்ற பிரச்னைகளைத் தடுத்து கூந்தலை ஆரோக்கியமாகப் பாதுகாக்க மூலிகைக் கூந்தல் எண்ணெய் தயாரிக்கலாம்.

தேவையானவை:

தேங்காய் எண்ணெய் – 500 மில்லி (செக்கு எண்ணெய்)

அவுரிப் பொடி – ஒன்றரை டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

நொச்சி இலை -ஒரு கைப்பிடி அளவு

எலுமிச்சை – 1 (நான்காக நறுக்கிக் கொள்ளவும்)

மஞ்சள் கரிசலாங்கண்ணி – 3

மருதாணி இலை – 3 கைப்பிடி அளவு

கற்றாழை – ஒரு துண்டு

சின்ன வெங்காயம் – 5

ஆமணக்கு இலை – 2 கைப்பிடி அளவு

கருவேலம் பட்டை – ஒரு துண்டு

நெல்லிக்காய் – 5

கசகசா – ஒன்றரை டீஸ்பூன்

பாதாம் – 5

சுரைக்காய் – 100 கிராம்

வேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு

செம்பருத்தி இலை – 2 கைப்பிடி அளவு

முருங்கைக் கீரை – 2 கைப்பிடி அளவு

மல்லிகைப் பூ – 25 கிராம்

செம்பருத்தி பூ – 5

தேங்காய்ப்பால் – 50 மில்லி

செய்முறை:

ஸ்டெப் – 1

கசகசா, பாதாம் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து முதல் நாள் இரவில் ஊறவைத்துக் அரைத்துக்கொள்ளவும். சுரைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

ஸ்டெப் – 2

100 கிராம் தேங்காய் எண்ணெய்யைத் தனியாக எடுத்து கருவேலம் பட்டையை அதில் ஊறவைக்கவும். ஒரு நாள் முழுவதும் ஊறவைத்த பின் தேங்காய் எண்ணெய் சிவப்பு நிறமாக மாறியிருக்கும்.

ஸ்டெப் – 3

நொச்சி இலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, கற்றாழை, சின்ன வெங்காயம், ஆமணக்கு இலை, நெல்லிக்காய், செம்பருத்தி இலை, முருங்கைக் கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து அம்மியில் அரைத்துக்கொள்ளவும். அம்மி இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளலாம்.

ஸ்டெப் – 4

அடுப்பில் வாணலியை வைத்து 400 கிராம் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடம் எண்ணெய்யைச் சூடாக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால் ஊற்றி மூன்று நிமிடம் கொதிக்கவிடவும்.தேங்காய்ப்பாலின் பச்சை வாசனை அடங்கிய பின் சுரைக்காய் துண்டுகள், கசகசா விழுது சேர்த்து எண்ணெயைக் கொதிக்கவிடவும்.

ஸ்டெப் – 5

எண்ணெய் ஐந்து நிமிடம் கொதித்த உடன் அரைத்து வைத்துள்ள மூலிகையையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொதிக்கவிடவும்.

ஸ்டெப் – 6

எண்ணெய்யின் நிறம் பச்சை நிறமாக மாறிய பின் எலுமிச்சை, அவுரிப்பொடி, செம்பருத்தி, மல்லிகைப்பூ சேர்த்து கொதிக்க விடவும்.

ஸ்டெப் – 7

எலுமிச்சை எண்ணைய்யில் நன்றாக வெந்த பின் எண்ணெய்யின் நிறம் கறுப்பாக மாறியிருக்கும். இந்த பதம் வந்ததும் அடுப்பில் இருந்து எண்ணெய்யை இறக்கவும்.

ஸ்டெப் – 8

எண்ணெயை வடிகட்டிக்கொள்ளவும்.

ஸ்டெப் – 9

இத்துடன் கருவேலம் பட்டை ஊறவைத்த எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

ஸ்டெப் – 10

சூடு ஆறியதும் எண்ணெயை ஒரு போத்தலில் நிரப்பி தினமும் பயன்படுத்தி வர நரைமுடியை தடுக்கலாம்.கூந்தலும் செழிப்பாக வளரும்.

டிப்ஸ்:

மூலிகைகள் கிடைக்கவில்லை எனில் நாட்டு மருந்துக் கடைகளில் மூலிகைப் பொடி வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது சீஸன் சமயத்தில் மூலிகையை சேகரித்து காயவைத்துப் பொடித்து தேவையான போது எண்ணெய் காய்ச்சிக்கொள்ளலாம்.

மூலிகை நிறைந்த எண்ணெய் என்பதால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சி அடையும். சிலருக்கு சளித் தொல்லை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற பிரச்சனை உடையவர்கள் கற்றாழையின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம் அல்லது கூடுதலாக நொச்சி இலை சேர்த்துக்கொள்ளலாம்.

எண்ணெய்யில் அதிக வாசனை வேண்டும் என நினைப்பவர்கள் ரோஜா இதழ் அல்லது மருக்கொழுந்து இலை சேர்த்துக்கொள்ளலாம்.

இரும்புப் பாத்திரத்தில் எண்ணெய் காய்ச்சினால் கூடுதல் பலன் கிடைக்கும்.

முடி அதிக வறட்சியாக உள்ளது எனில் செம்பருத்தி பூவின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.

அதிக வாசனையால் தலைவலி வருகிறது எனில் மல்லிகை சேர்ப்பதை தவிர்க்கலாம்

குறிப்பு: 500 மில்லி தேங்காய் எண்ணெய்யை மூலிகை கலந்து காய்ச்சினால் 350 மில்லிதான் கிடைக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here