எம்.எல்.ஏ

தனியார் நிறுவனத்தில் ஒரு சாதாரண பணியாளர், நந்தமூரி கல்யாண் ராம். அதிதீவிர காதல் பக்தர். தன் வீட்டை எதிர்த்து, தன் தங்கைக்கே அவளது காதலனுடன் திருமணம் நடத்தியவர். அப்படிப்பட்டவருக்கு காஜல் அகர்வால் மீது அதிதீவிர காதல். துரதிர்ஷ்டம் என்னவென்றால், கல்யாண் ராம் பணிபுரிந்து வரும் கம்பெனியின் முதலாளியே காஜல் அகர்வால்தான். அதற்காக காதலை விட்டுவிட முடியுமா என்ன? தொடர்ந்து காஜல் அகவர்வாலை அவர் காதலிக்கிறார். அப்போது உள்ளூர் ரவுடியிடம் இருந்து அவரைக் காப்பாற்றி மனதில் இடம்பிடிக்கிறார்.

பிறகு தன் காதலை அவரிடம் சொல்ல முற்படும்போது, காஜல் அகர்வால் உள்ளூர் எம்.எல்.ஏ ரவிகிஷனுக்கு நிச்சயிக்கப்பட்டவர் என்பது தெரிய வருகிறது. விஷயம் எம்.எல்.ஏவின் கவனத்துக்குச் செல்கிறது. ‘நான் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகிக் காட்டு’ என்று சவால் விடுகிறார். இந்த சவாலில் கல்யாண் ராம் வெற்றிபெற்றாரா என்பது கிளைமாக்ஸ்.

கமர்ஷியலான ஆகாடு, தூக்குடு உள்பட பல படங்களுக்கு கதை எழுதிய உபேந்திரா மாதவ், இந்தப் படத்தில் இயக்குனராகி, அந்தப் படங்களின் பாணியிலேயே இதையும் கொடுத்திருக்கிறார். கல்யாண் ராம் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. பாலகிருஷ்ணா, ரவிதேஜா என எல்லோரையும் கலந்துகட்டி அடிக்கிறார். அடிக்கடி பன்ச் டயலாக்கும் பேசுகிறார். முதல் பகுதி முழுக்க காதல் ரொமான்ஸில் புகுந்து விளையாடும் அவர், பின்பகுதியில் அரசியல் பன்ச்சுகளால் கைத்தட்டல் அள்ளுகிறார்.

வழக்கமான கமர்ஷியல் ஹீரோயின் என்ன செய்வாரோ, அதை மட்டும் செவ்வனே செய்துவிட்டுச் செல்கிறார் காஜல் அகர்வால். வழக்கறிஞராக வரும் பிரம்மானந்தம், உதவியாளராக வரும் பிருத்விராஜ் இருவரும் சிரிக்க வைக்கின்றனர். பிரசாத் முரெல்லாவின் ஒளிப்பதிவு கதைக்கு ஒரு நிறத்திலும், பாடலுக்கு ஒரு நிறத்திலும் அழகு காட்டியிருக்கிறது. மணிசர்மாவின் இசை படத்துக்கு மிகப் பெரிய பலம். காதல், அரசியல் என இரு களத்திலும் நின்று விளையாடியிருக்க வேண்டிய படம், முந்தைய படங்கள் சென்ற பாதையிலேயே பயணித்து சலிப்பு ஏற்படுத்துகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here